திண்ணை!
'பெரியோர்கள் வாழ்விலே' நூலிலிருந்து: கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார், ஒருமுறை கேரளாவுக்கு செல்லும் போது, வழியில், கோவையில், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் இல்லத்தில் தங்கினார். அப்போது, தன் தமிழ் ஆசிரியரான பலராம ஐயர், அவ்வூரில் வாழ்ந்து வரும் தகவலை அறிந்தார்.உடனே, ஆசிரியரை சந்திக்க விரும்பி, கைப்பட கடிதம் எழுதி, தன் ஊழியரிடம் கொடுத்து, அவரை அழைத்து வரச் சொல்லி, தன் காரை அவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.கடிதத்தை வாங்கி படித்த ஆசிரியர், உடனே பதில் கடிதம் தந்தார். அதில், தன் மாணவன் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு தன் மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் தெரிவித்து, மூன்று காரணங்களால், அவரை சந்திக்க வருவது, சாத்தியமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அது, 'முதலாவதாக, நான் வயோதிகன்; நீ இளைஞன். இரண்டாவதாக, நான் ஆசிரியன்; நீ மாணவன். மூன்றாவதாக, நான் வறியவன்; நீ செல்வந்தன். எனவே, நான் வந்து உன்னை பார்ப்பது பெருமையல்ல...' என்ற, பொருள்பட ஆசிரியரின் கடிதம் இருந்தது.அதைப் பார்த்ததும், பதறி, ஆசிரியரை பார்க்க, தானே அவர் இல்லத்திற்கு புறப்பட்டார் அழகப்ப செட்டியார்.பூ மற்றும் பழங்கள் வாங்கி சென்ற அழகப்பர், கையில் தயாராக வைத்திருந்த மாலையை ஆசிரியருக்கு அணிவித்து வணங்கி, 'இங்கிதம் அறியாமல், தங்களை அழைத்து வருமாறு கூறி விட்டேன்...' என்று வருத்தம் தெரிவித்தார். ஆசிரியரும் மனம் நெகிழ்ந்து, தன் மாணவரோடு மனம் விட்டு அளவளாவினார்.அழகப்பர் விடை பெறும்போது, ஒரு வெள்ளி தட்டில், 100 ரூபாய் கட்டுகளை வைத்து, அதை ஏற்று கொள்ளுமாறு ஆசிரியர் முன் சமர்ப்பித்தார்.ஆசிரியரோ, புன்சிரிப்பை உதிர்த்து, 'உன் அன்புக்கு மிக்க மகிழ்ச்சி; ஆனால், இந்த பணத்தால், பலனடையும் வயதை தாண்டி விட்டேன். எனவே, என்னை வற்புறுத்தாமல் நீயே இதை எடுத்துக் கொள்...' என்றார்.ஆசிரியருக்கு அவரும், மாணவருக்கு இவரும் உதாரணம்!ராஜாஜி எழுதிய, 'ஆற்றின் மோகம்' நூலிலிருந்து: சித்திர கலைஞர்கள், மனிதர்களை வரையும் போது, உடலமைப்பிலும், தெய்வங்களை வரையும் போது, முகத்தில், குணங்கள் தோன்ற செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.உடைகள், மூடியும் மூடாமலும் உடலின் அவயவங்களை எடுத்து காட்டுவது, தேவ ஜாதிக்கு சரியாகாது. மானிட ஸ்திரீகளுக்கும், தேவதைகளுக்கும் உள்ள பேதம் இதுவே! தற்போது, நம் சித்திரக்காரர்கள் வரைவதில், அந்த வித்தியாசம் காணப்படுவதில்லை. பொய் புருவங்களும், மையிட்ட கண்களும், தலைமுடியும் மற்ற அவயவங்களும் சினிமா நட்சத்திரங்களைப் போன்றே அமைகின்றன.தெய்வங்களை சித்தரிப்பது கடினம்; முகத்தில் பவித்திரமும், சாந்தமும் தோன்றுமாறு வரைய தெரிந்த பின்னரே தெய்வங்களை வரைய வேண்டும். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும். கோபத்தையும், சிரிப்பையும் எளிதில் எழுதி விடலாம். சாந்தமும், புனித உள்ளமும் முகத்தில் விளங்கும் சித்திரம் எழுதுவதற்கு, அதிக பயிற்சி வேண்டும். ஆண் - பெண் இருபால் விக்ரகங்களுக்கும் இது பொருந்தும். நடராஜர் மற்றும் புத்த விக்ரகங்களில் உயிர்ப்புடன் கூடிய சாந்த நிலையை காணலாம்.'ஜென் கதைகள்' என்ற நூலிலிருந்து: ஜென் குரு ஒருவர், காலையில் எழுந்ததும், சீடர்களில் ஒருவனை அழைத்து, 'நேற்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது; அதைக் கூறுகிறேன். அதற்கு அர்த்தம் சொல், பார்ப்போம்...' என்றார்.உடனே சீடன், 'குருவே... சற்று பொறுங்கள்; நான் தண்ணீர் கொண்டு வருகிறேன். முதலில் முகம் கழுவுங்கள். கனவிலிருந்து விடுபட்டு இப்போது, தானே விழித்துள்ளீர்கள்...' என்று கூறி, அகன்றான்.அவன் சென்றதும், இன்னொரு சீடனை அழைத்து, அதே போல் கூறினார் குரு. உடனே, அவன், 'நான் உங்களுக்கு தேனீர் தயாரித்து, எடுத்து வருகிறேன்...' என்று கூறி, சென்றான்.இருவரும் சென்றதும், பலமாக சிரித்த குரு, 'இவர்கள் இருவரும், என் கனவுக்கு அர்த்தம் கூறியிருந்தால், அவர்களை தடியால் அடித்து விரட்டியிருப்பேன். நல்ல வேளை, தப்பித்தனர்...' என்றார்.'கனவு என்பது அடி மனதின் ஆசாபாசங்களின் வெளிப்பாடு; கனவுகளுக்கு பொருள் கூறுபவன் முட்டாள்...' என்பது ஜென் கொள்கை!நடுத்தெரு நாராயணன்