திண்ணை!
எழுத்தாளர், இஆர்.க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து: காங்கிரஸ் தலைவர், ஜவஹர்லால் நேரு, 1936ல், தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தார். உடுமலைபேட்டையிலிருந்து, மதுரை வரும் வழியில், பழநிக்கு வந்தார்.வரவேற்பு இதழ் வாசித்தளித்து, வெள்ளி பேழை ஒன்றில், பழநி பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது.பஞ்சாமிர்தம் குறித்து, 'இது என்ன, எப்படி செய்வது, எதற்காக செய்வது...' என்று விபரமாக கேட்டறிந்தார். அரசியல், சர்வதேச பிரச்னை, பொருளாதார சீர்திருத்தம் என, பல பிரச்னைகளில் கவனம் செலுத்திய, நேருவுக்கு, கோவில், தெய்வம், வழிபாடு போன்றவற்றில் அதிக ஈடுபாடு கிடையாது.எனினும், பழநி தண்டாயுதபாணி கோவில் பிரசாதம், பஞ்சாமிர்தம் என்றவுடன், தன் தாயின் ஞாபகம் வந்தது, நேருவுக்கு. எனவே, உதவியாளரிடம் சொல்லி, தமக்கு அளித்த பழநி பஞ்சாமிர்தத்தை, தாய், சொரூபராணிக்கு அனுப்பி வைக்க சொன்னார். பத்திரிகையாளர், சபீதா ஜோசப் எழுதிய, '100 தலைவர்கள் 100 தகவல்கள்' நுாலிலிருந்து:சென்னை, 'சர்ச் பார்க் கான்வென்டில்' படித்த காலத்தில், சிறந்த மாணவியாக விளங்கினார், ஜெயலலிதா. அப்போது, பள்ளியில் நடந்த கட்டுரை போட்டி ஒன்றில் பங்கேற்று, முதல் பரிசு பெற்றார்.அந்த கட்டுரையை, வகுப்பு மாணவர்களுக்கு, பெருமிதத்துடன் படித்து காட்டியதுடன், ஷேக்ஸ்பியரின், அனைத்து நாடகங்களும் அடங்கிய தொகுப்பு ஒன்றை, மாணவி ஜெயலலிதாவுக்கு, பரிசாக வழங்கினார், வகுப்பு ஆசிரியர்.இந்த மகிழ்ச்சியை, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள துடித்தார், ஜெயலலிதா. அவர், 'பிசி'யாக நடித்துக் கொண்டிருந்த நேரம். இரவு, வெகுநேரமாகியும் அம்மா வரவில்லை. காலை எழுந்தவுடன் அம்மாவை தேடினார். அதிகாலையே மீண்டும் படப்பிடிப்பு சென்று விட்டார்.இரண்டு நாட்கள் இப்படியே சென்றது. மூன்றாம் நாள் இரவு, அம்மாவை பார்த்த பின் தான், படுக்க செல்வது என்று, பிடிவாதமாக கண் விழித்து காத்திருந்து, சோபாவில் சாய்ந்தபடியே துாங்கி விட்டார். நள்ளிரவில், அம்மா வந்து எழுப்பிய போது, விழித்து, தன் ஆதங்கத்தை சொன்னதும், கண் கலங்கினார், சந்தியா.கட்டுரைக்கு, பரிசு கிடைத்ததையும், ஷேக்ஸ்பியரின் தொகுப்பிலிருந்து சிலவற்றை படிக்க ஆரம்பித்தார். 'மேக் - அப்'பை கூட கலைக்காமல், மகள், கட்டுரை படிக்கும் அழகை ரசித்தார், சந்தியா.கட்டுரையில் எழுதப்பட்டிருந்த விஷயங்கள் மட்டுமல்ல, 'என் பார்வையில் அம்மா' என்ற கட்டுரையின் தலைப்பே, உள்ளம் நெகிழ, பெருமையால் மகிழ்ந்தார், சந்தியா.பத்திரிகையாளர், முருகேசன் எழுதிய, 'கல்விச்செல்வம் தந்த காமராஜர்' நுாலிலிருந்து: கடந்த, 1954ல், முதல்வராக பொறுப்பேற்றார், காமராஜர். அதற்கு முன்வரை, தாயின் செலவுக்கு, மாதம், 60 ரூபாய் தான் அனுப்பிக் கொண்டிருந்தார். அதன்பின், 120 ரூபாயாக உயர்த்தி கொடுக்க ஏற்பாடு செய்தார்.அம்மாவுக்கு வேண்டிய அவசர பொருட்களை, அவ்வப்போது வாங்கி கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். ஆனால், 120 ரூபாய் குறைவு என்பது, அம்மாவின் எண்ணம்; உண்மையும் அது தான்.முதல்வரான, சில மாதங்களுக்கு பின், தாயை பார்க்க சென்றார், காமராஜர்.நலம் விசாரித்த அம்மா, 'மகனே... நீ முதல்வரான பின், என்னை பார்க்க பலரும் வருகின்றனர். வீடு தேடி வருவோருக்கு, ஏதாவது குளிர் பானமாவது வாங்கி தரவேண்டாமா... அதனால், 150 ரூபாயாவது அனுப்ப கூடாதா...' என்று கேட்டார்.'அம்மா... நீ சிரமப்பட்டு, கடைக்கு சென்று, அவர்களுக்கு எதுவும் வாங்கி தரவேண்டாம். வருவோர், உன்னிடம் அன்பாக பேசுவது போல, நீயும் அன்பாக பேசி அனுப்பி வை... இந்த, 120 ரூபாயிலேயே செலவை சிக்கனப்படுத்து...' என்றாராம், காமராஜர்.நடுத்தெரு நாராயணன்