உள்ளூர் செய்திகள்

திண்ணை

'ஜஸ்டிஸ் கட்சி வரலாறு' நுாலிலிருந்து: கடந்த, 1939-ல், இரண்டாம் உலகப் போரில், இந்தியாவும் இறங்கிற்று. இந்தியாவை ஆட்சி செய்தனர், ஆங்கிலேயர்கள். 'காங்கிரசை கலந்தாலோசிக்காமலே, இந்தியாவை போரில் ஈடுபடுத்தியது தவறு...' என்று கண்டித்து, அப்போதிருந்த காங்கிரஸ் அமைச்சரவை அனைத்தும், ராஜினாமா செய்தன. தமிழகத்தில், சென்னை மாகாண, முதல்வராக இருந்த, ராஜாஜியும், தன் அமைச்சரவையை ராஜினாமா செய்தார். எனவே, அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த, ஜஸ்டிஸ் கட்சியை பதவி ஏற்கும்படி அழைத்தார், கவர்னர். அச்சமயம், ஜஸ்டிஸ் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்றிருந்தார், ஈ.வெ.ரா., துணை தலைவராக இருந்தார், ராஜா சர்.முத்தையா செட்டியார்.முத்தையா செட்டியாருக்கு, முதல்வர் பதவியை அடைய வேண்டும் என்று விருப்பம். ஆனால், ஜஸ்டிஸ் கட்சி, ஆட்சி பொறுப்பை ஏற்பதில், ஈ.வெ.ரா.,வுக்கு விருப்பமில்லை. ஈ.வெ.ரா.,வுக்கு தந்தி கொடுத்து வரவழைத்தார், செட்டியார். செட்டியாரின் அடையாறு மாளிகையில், ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாக கமிட்டியை கூட்டினார், கவர்னர். மாளிகையில் பெரிய விருந்து தரப்பட்டது. ஆந்திரா மற்றும் கேரளாவிலிருந்து தலைவர்கள் வந்திருந்தனர். அப்போது, 'சோறு போட்டு ஏமாற்றி விடலாம் என்று பார்க்கின்றனர். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்...' என்று, சிலரிடம் சொல்லிக் கொண்டிருந்தார், அண்ணாதுரை. விருந்து முடிந்ததும், ஜஸ்டிஸ் கட்சி கூட்டம் துவங்கியது.'ராஜாஜி, பதவியை விட்டு விலகிய இடத்தில், நாம் பதவி ஏற்க வேண்டும்...' என்று, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உடனே, 'வெள்ளை ஏகாதிபத்தியத்தை, இந்த நாட்டை விட்டே விரட்ட வேண்டும். சுதந்திரம் எப்படி அடைய வேண்டும் என்பதில் வேண்டுமானால் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், இடைக்கால அமைச்சரவையை ஏற்க வேண்டாம்...' என்ற கருத்தில், அந்த தீர்மானத்தை ஏற்கக் கூடாது என்று, வலியுறுத்தி பேசினார், அண்ணாதுரை.ராஜா சர்.முத்தையா செட்டியார் கொண்டு வந்த, பதவியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக, பெரும் எண்ணிக்கையில் பலம் இருந்தது. அண்ணாதுரைக்கு ஆதரவாக, நான்கைந்து பேர் தான் இருந்தனர்.சர் ஏ.டி.பன்னீர்செல்வம், சவுந்தரபாண்டிய நாடார் ஆகியோரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இரு தரப்பினருக்குள்ளும், பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டு விட்டது. 'அண்ணாதுரை சொல்வதை, நானே ஒரு தீர்மானமாக கொண்டு வருகிறேன்...' என்று, ஈ.வெ.ரா., சொல்லியதுடன், 'பதவி ஏற்கக் கூடாது...' என்ற, தீர்மானத்தையும் கொண்டு வந்தார். ஈ.வெ.ரா., தீர்மானம் நிறைவேறியது; முத்தையா செட்டியார் தீர்மானம் தோல்வியுற்றது.ஜஸ்டிஸ் கட்சியை, எப்படியும் ஆட்சியில் அமரச் செய்து விடலாம் என்று எண்ணிய கவர்னரே, இந்த தீர்மானத்தைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்தார்.உலகின் மிகப்பெரிய திருமண நிகழ்ச்சி, பாரசீகத்தில் நடந்தது. மகா அலெக்சாண்டர், பாரசீக நாட்டை வென்றபோது, பாரசீக இளவரசியை மணந்து கொண்டான். அந்த சமயத்தில், அலெக்சாண்டரின் ராணுவத்தை சேர்ந்த, 10 ஆயிரம் ராணுவ வீரர்கள், 10 ஆயிரம் பாரசீக பெண்களை மணந்து கொண்டனர். இதுவே, உலகின் மிகப்பெரிய திருமண நிகழ்ச்சி.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !