திண்ணை!
செப்., 15 - அண்ணாதுரை பிறந்த தினம்பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் எழுதிய, 'பேரறிஞர் அண்ணா ஓர் அற்புதம்' நுாலிலிருந்து:தம் மீது வீசப்படும் சொற்களை வைத்தே, எதிரியை மடக்குவதில் சமர்த்தர், அண்ணாதுரை. ஹிந்தி மொழியின் சிறப்பைப் பற்றி, 'ஹிந்தி கடினமான மொழியல்ல; விரைவில் கற்று விடலாம்...' என்ற அர்த்தத்தில், அண்ணாதுரையிடம், 'ஹிந்தி மொழியை மூன்று மாதங்களில் கற்றுக்கொண்டு விடலாம்...' என்று பெருமையுடன் சொன்னார், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்.'ஆமாம், ஆமாம்... அதற்கு மேல் கற்றுக்கொள்ள ஹிந்தியில் என்ன இருக்கிறது...' என்று, சர்வ சாதாரணமாக சொன்னார், அண்ணாதுரை.'நீதிதேவன் மயக்கம்' என்ற நாடகத்தில், ராவணனாக நடித்தார், அண்ணாதுரை.நீதிதேவனை பார்த்துச் சரமாரியாக கேள்வி கேட்பார், அண்ணாதுரை. ஒருமுறை, அண்ணாதுரை வெகு வேகமாக, சரளமாகப் பேசுவதைப் பார்த்து, தம் வசனத்தை மறந்து, அடுத்து பேச முடியாமல் விழித்தார், நீதிதேவன் வேடம் போட்டிருந்த பேராசிரியர் அன்பழகன்.உடனே சமாளித்து, 'பேச மாட்டீர் - நீதி தேவனே... நீர் பேச மாட்டீர்! உமக்கு மறந்து போய் விட்டது - நீதியும், நெறிமுறையும்...' என்று பேச ஆரம்பித்தார், அண்ணாதுரை.நாடகம் பார்க்க வந்த மக்கள் புரிந்து கொண்டு பலத்த கரவொலி எழுப்பினர்.சட்டசபையில் அடிக்கடி வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், 'சென்னையில் சில இடங்களில், அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனங்கள் நடைபெறுவது மாண்புமிகு முதல்வருக்கு தெரியுமா? சிலர், இத்தகைய இரவு விடுதிகளுக்கு சென்று கெட்டுச் சீரழிகின்றனரே. இதைத் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?' என, வினவினார்.அண்ணாதுரை எழுந்து, 'உறுப்பினர் நல்லவர்; கண்ணியம் மிக்கவர்; சிறந்த தியாகி; அனுபவம் மிக்கவர். பேரன், பேத்திகளை எடுத்தவர். அப்படிப்பட்டவர், இந்த வயதில் இப்படிப்பட்ட இடங்களுக்கு சென்று, ஏக்கம் கொண்டு இடர்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்...' என்றதும், சிரிப்பொலியால் அதிர்ந்தது, சட்டசபை.இறுதியாக பேசும்போது, 'அத்தகைய இரவு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்...' என, உறுதியளித்தார், அண்ணாதுரை.அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, ஒருநாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், அவரிடம் பேசி விட்டு, விடை பெற்றுச் சென்றார். அவரிடம் ஒரு செய்தியை சொல்ல மறந்து விட்டார், அண்ணாதுரை. அந்தத் துடிப்போடு தன் அருகிலிருந்த கட்சி சட்டப் பேரவை உறுப்பினரிடம், 'அவரை கொஞ்சம் கூப்பிடுங்கள்...' என்றார்.அவர் எழுந்து சென்று கூப்பிடுவதற்கு பதிலாக, கை தட்டி கூப்பிட்டார்.அதைக் கண்டதும், அண்ணாதுரையின் முகம் வாடி விட்டது. அந்த அதிகாரி மீண்டும், அண்ணாதுரை முன் வந்து நின்றார். உடனே, 'நான் வேறு ஒருவரை கூப்பிடச் சொன்னேன். அவர் தவறுதலாக உங்களை கூப்பிட்டு விட்டார்...' என்று சமாளித்து, அவரை அனுப்பி விட்டார்.பின், கட்சி உறுப்பினரிடம், 'அவர், பெரிய அதிகாரி. கை தட்டி கூப்பிட எனக்கு கை இல்லையா... உங்களை அப்படியா கூப்பிடச் சொன்னேன்... ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கை தட்டி கூப்பிடுவது, நல்ல பண்பல்ல.'நாமெல்லாம் ஐந்து ஆண்டுகள் தான் மந்திரியாகவோ, சட்டப்பேரவை உறுப்பினராகவோ இருக்க முடியும். ஆனால், அவர்கள், 35 ஆண்டுகள் அதிகாரம் செலுத்தக் கூடியவர்கள். அவர்கள் நினைத்தால், பேரவை உறுப்பினர்களாகவோ, மந்திரிகளாகவோ வர முடியும்...' என்று, அன்புடன் கண்டித்தார், அண்ணாதுரை. நடுத்தெரு நாராயணன்