திண்ணை!
வேலூர் மத்திய சிறையில், 1962ல், அண்ணா துரையுடன், 62 நாட்கள் சிறைவாசம் அனுபவித் தேன்; விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி, ஒருநாள் காலை, சிறைச்சாலை மரத் தடியில் அமர்ந்திருந்தார் அண்ணாதுரை. அவர் கையில், திருக்குறள் புத்தகம் இருந்தது.என்னைக் கண்டதும், 'வா... உட்கார்... நேற்று நெடுஞ்செழியனிடம் கேட்ட கேள்வியை உன்னிட மும் கேட்கிறேன்... பதில் சொல் பார்க்கலாம்...' என்றார்.'காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது!''பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் நன்மை கடலிற் பெரிது!''இரண்டு குறள்களையும் பார்... முதல் குறளில் ஞாலத்திற்கும், அடுத்த குறளில் கடலிற்கும் ஒப்பிட்டார். காரணம் சொல் பார்க்கலாம்...' என்றார்.வாங்கினேன்; படித்தேன். நான் கற்ற பொருளைச் சொல்ல முடிந்ததே தவிர, காரணத்தைச் சொல்ல முடியவில்லை. அண்ணா துரையே விளக்க ஆரம்பித்தார்...'பூமி இருக்கிறதே... அது பருவத்தில் பயிர் செய்தால்தான் பலன் தரும். மேலும், பூமி செழிப்பாக இருக்க வேண்டும். காலத்தில் செய்கிற உதவி இருக்கிறதே, அது உதவி பெறுபவன் வறுமையில் வாடும் போது அல்லது தேவைப்படும் போது செய்யப்படுவது. இந்த உதவி காலத்திற்காக காத்திருந்து செய்யப்படுவதல்ல. உரிய நேரத்தில் செய்யப்படும் உதவி. ஆகையால், உருவத்தில் சிறியதாயினும், தன்மையில் உலகை விடச் சிறந்தது.'அடுத்த குறளைப் பார்... கடலுக்கு ஒப்பிட்டார். 'பயன் தூக்கார் உதவி...' என்பது, பயன் கருதாத உதவி. அதாவது, பயன் எதிர்பாராதது மட்டுமல்ல; தனக்குப் பயன்படுமே என்று கூட கருதாது வழங்கும் உதவி. உதாரணத்திற்கு சொல்கிறேன்... என்னிடம் ஒரு கப் காபி இருக்கிறது; எனக்கு, அது தேவையும் கூட. இருந்தாலும், இன்னொருவருக்கு எவ்வித பயனும் எதிர்பாராது கொடுக்கிறேன். அதுதான் பயன் தூக்கார் உதவி. இதை கடலுக்கு ஒப்பிட்டார். அளவிற்காக அல்ல, கடலுக்கு இருக்கிற குணத்திற்காக. கடல், தனக்கு தேவையான தண்ணீரை வைத்துக் கொண்டு, கொஞ்சம் நீரை மேகமாக மாற உதவுகிறது. அப்படி அனுப்புவது கூட அந்த மேகம் மழையாகி மீண்டும் தன்னிடத்தில் வரும் என்று எதிர்பார்த்தே உதவுகிறது. அதனால் தான், பயன் தூக்கார் உதவி, கடலை விட பெரிது என்கிறார் வள்ளுவர்...' என்றார்.— 'அண்ணாவுடன், அறுபத்திரண்டு நாட்கள்' நூலில், ப.உ.சண்முகம்.தமிழகத்தில், 1938ல் தொடங்கி, கிட்டத்தட்ட, 1950ம் ஆண்டு வரை முக்கியமாக விளங்கிய திரைப்பட வசனகர்த்தாக்களில் ஒருவர் டி.வி.சாரி, ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர். ஆரம்பத்தில் பத்திரிகைகளில் கதைகள் எழுதி வந்தார். பாடல் களே நிரம்பியிருந்த சினிமாவை மாற்றி, வசனங் களால் நிரம்பிய சினிமாவாக ஆக்கிய பெருமை டி.வி.சாரியைத்தான் சாரும்.இவருக்கு, தன் முதலாளி மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்தின் மீது ஏதோ கோபம். அந்தக் கோபத்தில் ஒரு தவறான செயலில் ஈடுபட்டார். அந்தக் காலத்தில், 'இந்து நேசன்' என்ற மஞ்சள் பத்திரிகையை லட்சுமிகாந் தன் என்பவர் நடத்தி வந்தார். அந்தப் பத்திரிகைக்கு தன் முதலாளி சுந்தரத்தைப் பற்றி அவதூறான செய்திகளை அனுப்பி, பிரசுரிக்கச் செய்தார். 'யாரிடம் இருந்து இந்தச் செய்திகள் போகின்றன...' என்று ஆரம்பத்தில் சுந்தரம் வியந்தார். சேலத்தில் சுந்தரம் சக்தி வாய்ந்த மனிதர். தபால் ஆபீசில் சொல்லி லட்சுமிகாந்தனுக்குப் போகும் தபால்களை தன்னிடம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். பிரித்துப் பார்த்தால், டி.வி.சாரி, சுந்தரத்தைப் பற்றி லட்சுமிகாந்தனுக்கு அனுப்பியிருந்த தகவல்கள். (போஸ்ட் ஆபீசிலிருந்து கடிதங்களை படிக்கவில்லை. அவர், 'கோட்' பாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்டன என் பாரும் உண்டு!) படு கோபமடைந்த சுந்தரம், ஆளை விட்டு சாரியை உதை, உதையென்று உதைத்து, ஊரை விட்டே விரட்டி விட்டார். நல்ல வாய்ப்புகளை இழந்த சாரி, பெங்களூர் - மைசூர் என்று போய், ஏதோ எழுத முயற்சி செய்து, கடைசியில் தோல்வியையும், வறுமையையும் கண்டு மாண்டார்.— 'தமிழ் திரைப்பட வரலாறு' நூலில், முக்தா சீனிவாசன்.நடுத்தெரு நாராயணன்