அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள ஆன்ட்டி —இருபத்திரண்டு வயது பெண் நான். திருமணமாகி மூன்று வருடங்களாகி விட்டன. நான் திருமணத்திற்கு முன் என் உறவினர் ஒருவரை உயிருக்குயிராய் நேசித்தேன். அவரும் என் மேல் உயிராய் இருந்தார். விஷயம் தெரிந்ததும், என் வீட்டினர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். என் கணவர் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார். ஆனால், என்னால் என் காதலரை மறக்கவே முடியவில்லை.என் கணவரிடமும் சொல்லி விட்டேன். அவர் ஒன்றுமே சொல்லவில்லை. இவ்வளவு நாட்களாக என் காதலருடன் தொடர்பில்லாமலிருந்தது. இப்போது என் காதலர் மீண்டும் தொடர்பு கொண்டார். என்னால் அவரை மறக்க இயலாது. என் காதலர், என்னை ஏற்றுக் கொள்கிறேன் என்கிறார். எனக்கோ, இருதலைக் கொள்ளி எறும்பு மாதிரியான நிலை. காதலரையும் மறக்க முடியாது; கணவருடன் சேர்ந்து நிம்மதியாய் வாழவும் முடியாது! அவரிடம் சொல்லி பிரிந்து சென்று, என் காதலருடன் சேரலாம் என்றால், எனக்கு அவ்வளவு தைரியம் கிடையாது. எனக்கு குழந்தையும் இல்லை. நான் யாருக்கும் தெரியாமல் சென்று விடலாம் என்று நினைத்தேன். ஆனால், என் பிறந்த வீட்டின் மானம் கப்பலேறி விடும். என்ன செய்வதென்றே தெரியவில்லை! என் காதலர், 'உன் வீட்டில் சொல்லி, பிரிந்து வா' என்கிறார். எனக்கு தற்கொலை எண்ணம் தான் வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்து, பிழைத்து விட்டேன்.என் கணவர் எந்தவித கெட்டப் பழக்கமும் இல்லாதவர். என் காதலருக்கு குடிப்பழக்கம் உண்டு. என் கணவரிடம் எந்த குறையும் இல்லை. என் காதலர், 'நீயில்லாவிட்டால் வேறு திருமணமே செய்ய மாட்டேன்' என்கிறார். என் கணவரிடம் அடிக்கடி சண்டை போடுகிறேன். என் மாமியாரிடமும் சண்டை. எனக்கு ஒரு நல்ல பதிலைத் தாருங்கள். உங்களை மதித்து, உங்கள் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்.இப்படிக்கு,உங்கள் சகோதரி.அன்பு சகோதரி —உன் கடிதம் படித்தேன்.மிக மிக வருத்தத்துடன் இதை எழுதுகிறேன். பழைய காதல் பற்றிச் சொல்லியும் கூட உன்னை வெறுத்து ஒதுக்காத நல்ல கணவர்... உன்னை அன்பாக வைத்திருக்கிறார்.இவரை மறந்து, பழைய காதலர் வந்து கூப்பிடுகிறார். அவருடன் போகட்டுமா, அவரை என்னால் மறக்க முடியவில்லை என்கிறாய். இந்த லட்சணத்தில் பழைய காதலனுக்கு குடிப்பழக்கம் வேறு. தன் முன்னாள் காதலி தான் என்றாலும், இன்று வேறொருவருக்கு மனைவியாகி விட்டவளை, 'வா, நாம் இருவரும் ஓடிப் போய் விடலாம்' என்று சொல்கிற மனிதன் எந்த ரகத்தில் சேர்த்தி என்று உனக்குப் புரியவில்லையா?உனக்கு, உன் காதல் தான் பெரிசு என்று நினைத்திருந்தால், உன் திருமணத்துக்கு முன்பே, உன் பெற்றோரிடம் தீர்மானமாகச் சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டு, இப்பொழுது அனாவசியமாய் உன் கணவரின் வாழ்க்கையையும் சேர்த்து நாசப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?கணவர் நல்லவராகவும், அப்பாவியாகவும் இருக்கும்பட்சத்தில் அவரை ஏமாற்றுவது எத்தனை கொடூரமான செயல் தெரியுமா?முதலில் அந்த முன்னாள் காதலனை சந்திப்பதை விடு. மனசை ஒருமுகப்படுத்தி கணவனை நேசி. கணவருடன் கூடுமான வரையில் சேர்ந்திரு. நீ தனியே இருக்கும் ஒவ்வொரு மணித் துளியும் உன் மனம் சாத்தானின் இருப்பிடமாகும். அந்த பழைய காதலனிடம் திட்ட வட்டமாகச் சொல்; இனி என்னைப் பார்க்க வராதே என்று.உண்மையிலேயே உன் மீது அன்புள்ளவனாக இருந்தால், அவன் இப்படி உங்களிருவரின் நடுவில் வந்து விரிசலை உண்டாக்க மாட்டான். அப்பா, அம்மா, குடும்ப மானம் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்... கணவனை விட்டு மாற்றானோடு ஓடிய பின், உனக்கு இந்த உலகில் என்ன மரியாதை கிடைக்கும்? நாளையே உனக்கு ஒரு குழந்தை பிறந்தால், அதற்கு இந்த சமுதாயம் எந்த விதத்தில் அங்கீகாரம் தரும்?இதையும் விடு, என்றாவது ஒருநாள், இதே பழைய காதலன் தன்னுடன் ஓடிவந்த உன்னைப் பார்த்து, 'தாலி கட்டின புருஷனையே விட்டுட்டு வந்தவ தானே நீ' என்று கேட்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?சகோதரி... நம் நாட்டில் இன்னமும் பெண்களை தெய்வமாக மதிக்கின்றனர் என்றால், அதற்கு காரணம் அவர்கள், தங்கள் பெண்மையை உயிருக்கும் மேல் உயர்வாய் நினைப்பதால்தான். எத்தனையோ பெண்கள் சந்தேகக்காரப் புருஷன்களுடன், குடி, பெண் தொடர்பு, ரேஸ் பைத்தியம் இப்படிப் பட்ட சகல 'கல்யாண குணங்களுடன்; கூடிய புருஷன்களுடன் பொறுமையாய் குடித்தனம் செய்கின்றனர். 'என்ன தலையெழுத்து, பிரிந்துவா' என்றால், 'என்றைக்காவது ஒருநாள் திருந்த மாட்டாரா?' என்று கேட்டு நம்பிக்கைச்சுடர் விட, கடவுளை வேண்டி நிற்கின்றனர்.இதற்கு நடுவில் உன் வாழ்க்கை எத்தனை உயர்வானது என்பதை எண்ணிப்பார். இதை நாசப்படுத்திக் கொள்ள உனக்கு எப்படி மனம் வருகிறது?இது போன்ற எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறி. அன்பான கணவனைக் கொடுத்த கடவுளுக்கு தினமும் நன்றி சொல்! கணவரின் பக்க பலம் இருக்கும் போது, இந்த உலகத்தையே நீ, உன் பக்கம் வளைத்துப் போடலாம்.கணவரின் தாயும் உனக்கு ஒரு விதத்தில் தாய் தான்... ஆரம்பத்திலேயே இவர்களின் மீது நீ வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறாய்... அதை மெதுவாக மாற்ற முயற்சி செய்.அன்பான மனைவி - கணவனின் இதயம். கண்ணியமானப் பெண் - அந்தக் குடும்பத்துக்கே தெய்வம். நினைவில் வை.— அன்புடன்சகுந்தலா கோபிநாத்.***