உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 16; கூலி வேலை செய்கின்றனர் என் பெற்றோர். என்னுடன் பிறந்தவர் ஒரு அக்கா. திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அவளின் கணவன், குடும்பத்தை சரிவர கவனிக்காததால், எங்கள் வீட்டில் இருக்கிறாள். என் பெற்றோரோ வறுமையில் வாடுகின்றனர். நான் வேறு ஊரில், ஒரு நல்ல மனிதரிடம், வேலை பார்க்கிறேன்; அவர் என்னை படிக்கவும் வைக்கிறார்.சிறுவயதிலிருந்தே என் அக்கா கூடவே இருப்பேன். அவள் தன் தோழி வீட்டிற்கு அழைத்துச் செல்வாள். அவர்களைப் பார்த்து, அவர்கள் போன்றே நானும் நடந்து கொண்டேன். நான் பள்ளியில் படிக்கும் போதும், விளையாடும் போதும், என் தோழிகளுடன் தான் இருப்பேன். ஆண்களுடன் அளவாகத் தான் பேசுவேன்.நன்றாக பாடுவேன், ஆடுவேன். மூன்று ஆண்டுகள் முறைப்படி நடனம் கற்றுக் கொண்டேன். இதனாலோ என்னவோ, என் பாவனைகள், பெண்ணாகவே மாறியது.என் வீட்டிலும் என்னைக் கண்டிக்கவில்லை. என், 12வது வயதில், நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற கேள்வி என்னுள் எழுந்தது.ஆனால், அப்படி இருப்பது தான் எனக்கு பிடித்திருந்தது. என்னை நிறைய பேர், 'நீ திருநங்கையாக மாறி வா; உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்...' என்று கூறினர். அதில் எனக்கு விருப்பமில்லை.ஒரு சிலரோ, 'நீ இப்படி இருக்காதே... கம்பீரமாக நட, குரலை மாற்று...' என்று கூறினர். அந்த நிமிடம் கடைப்பிடிப்பேன்; பின், என்னை அறியாமலேயே மாறி விடுவேன். இப்படி பிறந்தது என் தவறல்லவே!ஏதாவது சினிமா பார்த்தால் அதில் வரும் கதாநாயகி போல் நடக்கிறேன்; சிரிக்கிறேன்.அம்மா... வறுமை நிலையில் உள்ள என் குடும்பத்தை நான் தான் காப்பாற்ற வேண்டும். ஆனால், அதற்கு நான் சரிவர மாட்டேன் என்று தெளிவாக தெரிகிறது. ஆனால், என்னால் ஆண் போல் பாவனைகளை மாற்ற முடியவில்லை. எனவே, நீங்கள் தான் உங்கள் மகன் போல் பாவித்து அறிவுரை கூற வேண்டும்.— இப்படிக்கு,தங்கள் அறிவுரையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மகன்.அன்பு மகனுக்கு —என் நண்பர் ஒருவரின் மகன், பெண் போலவே நடப்பான், சிரிப்பான், ஆடுவான், பாடுவான். பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களும் அவனை கண்டித்து கண்டித்து, தன் பெண்மை தனம் நிறைந்த நடவடிக்கைகளை மாற்றி, தற்சமயம், முழு ஆணாக செயல்படுகிறான்.உன் வயது, ௧௬ தான் ஆகிறது; அக்கா மற்றும் அவளின் தோழிகளுடன் பழகி, அவர்களின் நடவடிக்கைகளை நகல் எடுத்திருக்கிறாய். பரதநாட்டியம் கற்றுக் கொள்ளும் ஆண்களில் சிலருக்கு பெண்மைத்தனம் தொற்றிக் கொள்கிறது. சிறுவயதில் சினிமா கதாநாயகன், கதாநாயகிகளை போல் ஆடிப் பாடுவது, இயல்பானது தான். ௧௬ வயதிலேயே, உன்னிடம் ஆண்மை இல்லை என, நீ ஒரு முடிவுக்கு வர முடியாது. பெண்கள் போல் நீ நடப்பதால், ஆடுவதால், உன்னை திருநங்கை என உறுதியாக கூற முடியாது. முழுமையாக மருத்துவ பரிசோதனையின் மூலம் தான் இதை தெரிந்து கொள்ள முடியும்.உன் கையெழுத்து, அச்சு கோர்த்தாற் போல இருக்கிறது. கடிதத்தில் இலக்கணப் பிழைகள் இல்லை. சொல்ல வந்த விஷயத்தை, முத்து கோர்த்தது போல கச்சிதமாக கூறியிருக்கிறாய். உன் முதலாளி, ஒரு நல்ல ஆசிரியரிடம் உன்னை படிக்க வைக்கிறார் என நினைக்கிறேன். நன்கு படித்து, நல்ல வேலைக்கு போய், உன் ஏழ்மையான குடும்பத்தை, உன்னால் நிச்சயம் காப்பாற்ற முடியும்.அக்கா, அக்காவின் தோழிகள் மற்றும் சினிமா கதாநாயகிகளைப் பார்த்து, அவர்கள் செய்வதை போல் செய்வதை நிறுத்தி, உன்னை ஒரு ஆணாக உணர். நீ ஆணா, பெண்ணா, திருநங்கையா என யோசித்து, காலத்தை விரயமாக்காதே. மொத்த கவனத்தையும் படிப்பின் பக்கம் திருப்பு. தனி தேர்வராக தேர்வுகள் எழுதி 10ம் வகுப்பு, பிளஸ் 2, மற்றும் பட்டப் படிப்பு படித்து முடி; தகுந்த வேலைக்குப் போ.எப்படி முயன்றாலும், உன்னால், முழு ஆணாக பரிமளிக்க முடியவில்லை என்றால், அரசு மருத்துவரிடம் சென்று, தகுந்த மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்; ஹார்மோன் டெஸ்ட் எடு. திருநங்கை என்பது ஊர்ஜிதமானால், சூரியன் ஒன்றும் சிதறி விடாது. திருநங்கைகளுக்கு ஓட்டுரிமை, ரேஷன் கார்டு கொடுக்கின்றனர்; நல்ல பதவியில் அமர வாய்ப்பும் உள்ளது.திருநங்கைகள் மீது இச்சமூகத்திற்கு அன்பும், அக்கறையும், கரிசனமும், அனுதாபமும் பிறந்திருக்கிறது. இந்திய அரசு, திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்துள்ளது.மகனே... நீ திருநங்கை என உறுதி செய்யப்பட்டால், மனம் தளர்ந்து போகாதே. வாழ்க்கையில் வெற்றி பெற்ற திருநங்கைகளை, முன் மாதிரியாக எண்ணி, வாழ்க்கையை எதிர்கொள். நீ, நான் பெற்றெடுக்காத மகன்; நான் உன் தாய். நீ புத்திசாலி; குடும்ப பாரத்தை சுமக்க விரும்பும் நற்குணம் கொண்டவன். அதனால், மனக்கிலேசங்களை தவிர்த்து, வாழ்க்கைக் கடலில் நீந்தி வெற்றி பெறு; வாழ்த்துகள்!— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !