உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரிக்கு —என் வயது: 56. மனைவியின் வயது: 49. எங்களுக்கு நான்கு மகன்கள், ஒரு மகள். சொந்தமாக அரிசி கடை வைத்திருக்கிறேன். குடும்பம் நடத்த போதுமான வருமானம் கிடைக்கிறது. முதல் இரண்டு மகன்களுக்கும் படிப்பு சரியாக வராததால், வேலைக்கு செல்கின்றனர். அவர்கள் வருமானத்தை வைத்தே, மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தேன்.மற்ற இரண்டு மகன்களும், கல்லுாரியில் படிக்க விரும்ப, அவர்களின் படிப்பு செலவுகளை, மூத்த இரு மகன்களும் கவனித்துக் கொண்டனர்.மருமகன், குடி பழக்கத்துக்கு அடிமையாகி, மகளுக்கு பல கொடுமைகள் செய்து வருவதாக கேள்விப்பட்டதும், அவளை அழைத்து வந்து, ஆறு மாதம் எங்களுடன் வைத்திருந்தோம். பிறகு, சமாதானம் பேசி, கணவருடன் அனுப்பி வைத்தோம்.கணவரின் கொடுமைகள் தொடர்ந்ததால், சில மாதங்களிலேயே பிறந்த வீட்டுக்கே வந்து விட்டாள். 'கணவருடன் வாழ விரும்பவில்லை' என்று, மகள் கண்டிப்பாக கூறி விட்டதால், விவாகரத்து பெற்று கொடுத்தோம்.சில ஆண்டுகளுக்கு பின், எங்களை பற்றி நன்கு அறிந்த உறவினர் ஒருவர், தன் மகனுக்கு, என் மகளை திருமணம் செய்து வைக்க விரும்பினார். அவளின் ஒப்புதலுடன் திருமணம் செய்து வைத்தோம்.இரண்டு குழந்தைகள் பிறந்தன. இந்த மாப்பிள்ளையும் குடி பழக்கத்துக்கு அடிமையாகி, மகளுக்கு பல துன்பங்களை கொடுக்க ஆரம்பித்தான். இரண்டாவது திருமணமும் தோல்வி ஆனதால், ஊரார் ஏதாவது பேசுவரே என்று, சமாளித்து, அவனுடன் குடித்தனம் செய்தாள், மகள்.குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்ததிலிருந்து, கொடுமைகள் அதிகமாக, எங்களிடமே வந்து சேர்ந்தாள்.இதற்கிடையில், மூத்த இரு மகன்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக சென்றனர். விசேஷ நாட்களில் மட்டும் அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவோம்.கடைசி இரு மகன்களும், இப்போது, படிப்பை முடித்து, வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்ய முயன்றபோது, 'நாங்களும் திருமணம் செய்து போய் விட்டால், தங்கை அனாதரவாகி விடுவாள்; எனவே, எங்களுக்கு திருமணம் வேண்டாம்...' என்கின்றனர்.மகளுக்காக கவலைப்படுவதா அல்லது மகன்களின் எதிர்காலத்தை நினைத்து வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.இந்த கவலைகளால், என் மனைவி, இதய நோயால் படுத்த படுக்கையாக இருக்கிறாள்.நான் என்ன செய்யட்டும் சகோதரி.— இப்படிக்கு,உங்கள் சகோதரன்.அன்பு சகோதரருக்கு —உங்கள் ஒரே மகளின் இரு திருமணங்களும் தோற்றுப் போனது, துரதிஷ்டவசமான விஷயம். இரண்டாவது திருமணத்தில் முறையாக விவாகரத்து பெறப்படவில்லை என, உங்கள் கடிதம் மூலம் அறிகிறேன்.இரு திருமணங்களும் தோற்க, கணவன்மார்களின் குடி பழக்கமே காரணமாய் இருந்திருப்பது வேதனையான விஷயம். இன்னும் எத்தனை லட்சம் குடும்பங்களை, குடி பழக்கம் சீரழிக்கப் போகிறதோ!சகோதரியின் எதிர்காலத்துக்காக, நீங்கள் கீழ்க்கண்டவைகளை செய்தால் நல்லது.* மருமகனை, தகுந்த மருத்துவத்துடன், 'ஆல்கஹால் அனானிமஸ்' போன்ற அமைப்பில் சேர்த்து, குடி பழக்கத்திலிருந்து அவரை விடுவிக்க முயற்சிக்கலாம்* மகன்கள் ஒவ்வொருவரும் இரண்டு லட்சம், நீங்கள் இரண்டு லட்சம் என, மொத்தம், 10 லட்சம் ரூபாயை, மகள் பெயரில், வங்கியில் நிரந்தர வைப்பு செய்து, மாதம், 8,000 ரூபாய் வட்டி பெற வைக்கலாம். இந்த பொருளாதார பாதுகாப்பு, மகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் நன்மை பயக்கும்* மருமகன் குடி பழக்கத்திலிருந்து திருந்த வாய்ப்பே இல்லையென்றால், அவனிடமிருந்து முறைப்படியான விவாகரத்தை, மகளுக்கு பெற்று தந்து விடுங்கள்* மூன்றாவது திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில், மகள் இருக்கிறாரா என்பதை பாருங்கள். இருந்தால், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். இரு பேரக் குழந்தைகளையும், உங்கள் பராமரிப்பிலோ, மகன்களின் பராமரிப்பிலோ வையுங்கள். மூன்றாவது திருமணத்திற்கான மாப்பிள்ளையிடம், என்ன இருக்கிறதோ இல்லையோ, குடி பழக்கம் இருக்க கூடாது* இதய நோயால் வாடும் மனைவிக்கு, தகுந்த மருத்துவம் பாருங்கள். மகள் மற்றும் பேரக் குழந்தைகள் வாழ்க்கை பாழாகாது என, உறுதியாக தெரிந்தால், உங்கள் மனைவி, பூரண நலம்பெற்று விடுவார்* கடைசி இரு மகன்களும், தங்களது திருமணத்தை, அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப் போடலாம். சகோதரிக்கும் மறுமணம் செய்வித்தோ, வங்கியில், 10 லட்சம் நிரந்தர வைப்பு செய்தோ, அவரின் நலம் காக்கலாம்* மகளுக்கு திருமண ஆசை இல்லையென்றால், வற்புறுத்தாதீர். உங்கள் பராமரிப்பில் அவள் இருக்கட்டும். சகோதரர்களின் வீடுகளுக்கு, மாதம் இரண்டு நாள் சென்று வரட்டும்* மகள், என்ன படித்திருக்கிறாள் என்பதை, நீங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. தொலைதுார கல்வி இயக்ககம் மூலம், அவளை தொடர்ந்து படிக்க சொல்லலாம். வேலைக்கான படிப்பை முடித்த பின், அவளை வேலைக்கு அனுப்பலாம்* சகோதரியை பாரமாய் நினைக்காது, அவளின் எதிர்காலத்துக்கு, எதாவது செய்ய துடிக்கும் மகன்களை பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கும், பாசக்கார சகோதரர்களுக்கும் என் வாழ்த்துகள். உங்கள் மகள் வழி பேரக்குழந்தைகளின் எதிர்காலம், இறைவன் அருளாலும், சகோதரர்களின் பாசத்தாலும், பெற்றோரின் அனுசரணையாலும் அமோகமாக இருக்கும்.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !