உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மா —என் வயது, 43. கணவரின் வயது, 55. நாங்கள் டீக்கடை வைத்துள்ளோம். கணவருக்கு, நான் இரண்டாவது மனைவி. முதல் மனைவி, 10 மற்றும் 6 வயதுள்ள இரண்டு ஆண் குழந்தைகளை விட்டு விட்டு, வேறு ஒரு ஆணுடன் சென்று விட்டாள்.நாங்கள் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்கள். கணவர், எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமானவர் தான். கணவரை விட அதிகம் படித்திருப்பதால், நானே அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். முதலில் தயங்கியவர், பிறகு ஒத்துக்கொண்டார்.நாங்கள் இருவரும் கஷ்டப்பட்டு, முதல் மகனை, எம்.பி.ஏ., படிக்க வைத்தோம். அவன் பெரிய கம்பெனி ஒன்றில், சீனியர் மேனேஜராக உள்ளான். இரண்டாவது மகன், எம்.எஸ்சி., விஸ்காம் முடித்து, பெங்களூரில், அமெரிக்கன் கம்பெனி ஒன்றில் வேலையில் உள்ளான்.இரண்டு குழந்தைகள் இருப்பதால், எனக்கு குழந்தை வேண்டாம் என்று ஆபரேஷன் செய்து விட்டேன்.பெரிய மகனுக்கு, ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்து வைத்தோம். இப்போது, ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. என் பிரச்னை என்னவென்றால், கணவர், அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை. கிறிஸ்துவ முறைப்படி விவாகரத்து பண்ண முடியவில்லை. அவருடைய முதல் மனைவி, 21 ஆண்டுகளாக எங்கிருக்கிறார் என்று கூட எங்களுக்கு தெரியாது.இப்போது திடீரென்று, என் பெரிய மகனுக்கு போன் செய்து, 'உன் திருமணத்திற்கு, எனக்கு ஏன் சொல்லவில்லை. பேரனையாவது அழைத்து வந்து எனக்கு காட்டு. உங்களை பார்க்கணும், உங்களோடு இருக்கணும், எனக்கு உடல்நிலை சரியில்லை. வேலைக்கு செல்ல முடியவில்லை...' என்று கூறியுள்ளார்.'நான், சித்தியிடம் கேட்க வேண்டும். நீ என்னையும், தம்பியையும் விட்டு சென்ற பின், சித்தி தான் எங்கள் இருவரையும் இவ்வளவு துாரம் கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கியுள்ளார். சித்தியை கேட்காமல், நாங்கள் இருவரும் எந்த செயலையும் செய்ய மாட்டோம்...' என்று கூறியுள்ளான், மகன்.நானும், கணவரும், காலை, 5:00 மணிக்கு கடைக்கு சென்றால், இரவு, 8:00 மணிக்கு தான் வீட்டிற்கு வருவோம். 'லோன்' வாங்கி, இப்போது, 60 லட்சம் மதிப்புள்ள வீடு கட்டியுள்ளோம். மகனும், நாங்களும் சேர்ந்து தான், கடனை அடைத்து வருகிறோம். கடையில் வேலைக்கு ஆட்கள் இல்லை. நாங்கள் இருவரும் தான் வேலை செய்கிறோம்.மகன்கள் இருவரும், என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். என் பேச்சை மீற மாட்டார்கள். இப்போது, என் பிரச்னை என்னவென்றால், மகனுக்கு என்ன பதில் கூற வேண்டும். உடனடியாக எனக்கு ஒரு பதில் கூறுங்கள், அம்மா.இந்த கடிதத்தை, கணவரின் ஆலோசனைபடி தான் எழுதியுள்ளேன்.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —உன் கணவர், இந்திய கிறிஸ்துவ திருமண சட்டம், 1872ன் கீழ் தான், தன் முதலாவது திருமணத்தை நடத்தியுள்ளார். இந்த திருமண சட்டம் கோவா, கொச்சின், மணிப்பூர், ஜம்மு - காஷ்மீர் தவிர்த்த, இதர இந்திய பகுதிகளுக்கு செல்லுபடியானது.இந்திய விவாகரத்து சட்டம், 1869; பிரிவு 10, கீழ்க்கண்ட காரணங்களுக்காக விவாகரத்தை அனுமதிக்கிறது.பரஸ்பர விருப்பத்துடன் கூடிய விவாகரத்து, மனநலமின்மை, திருமணபந்தம் மீறிய உறவு, கொடூர நோய், ஏழு ஆண்டுகள் இல்லற வாழ்க்கையிலிருந்து தலை மறைவு, தொழு நோய், மதமாற்றம், தாம்பத்ய மறுப்பு.உன் கணவரின் முதல் மனைவி, அவரை கைவிட்டு விட்டு, இன்னொரு ஆணுடன், 21 ஆண்டுகளுக்கு முன் ஓடி விட்டாள். அந்த ஒரு காரணத்தை வைத்து, இப்போதும் கூட விவாகரத்து பெறலாம். முதல் தாரத்தின் இரு குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, நீ குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கிறாய். உன் கணவரின் வியாபாரத்தை பெருக்க, தினமும், 15 மணி நேரம் உழைத்துள்ளாய். இரு குழந்தைகளையும், மிக சிறப்பாக படிக்க வைத்து, ஆளாக்கியுள்ளாய்.மூத்தவனுக்கு திருமணமும் செய்வித்து, பேரக் குழந்தையை பார்த்திருக்கிறாய். அல்லும் பகலும் உழைத்து, விவசாயம் செய்து, அறுவடை செய்யும் நேரத்தில், மகசூலில் பங்கு கேட்க வந்து விட்டாள், உன் கணவரின் முதல் மனைவி.காலம் கடந்து, உன் மூத்தாளுக்கு ஞானோதயம் வந்திருக்கிறது. பெத்த குழந்தைகளின் மீது, அவளுக்கு உரிமை இருக்கிறது. 18 வயது நிரம்பிய ஆண் குழந்தைக்கு, தாயுடனோ, தந்தையுடனோ சேர்ந்து வாழ முழு உரிமை இருக்கிறது.இரு மகன்களையும் அவர்களது விருப்பத்துக்கு விடு. பெற்ற தாய், தன் மகன்களை பார்த்து போக அனுமதி. ஆனால், இந்த விஷயத்தை ராஜதந்திரத்துடன் நீ கையாள வேண்டும். கொஞ்சம் அசட்டையாக இருந்தால், அந்த பெண், உங்கள் வீட்டில் வந்து அமர்ந்து விடுவாள்.இரு மகன்களையும், அவள் உங்கள் வீட்டில் வந்து பார்க்க வேண்டாம். ஏதாவது, ஒரு பொது இடத்தில், உன் மகனையும், பேரனையும் பார்க்கட்டும். உன் மருமகளுக்கு, அந்த பெண்மணியை பார்க்க விருப்பமில்லை என்றால், அவளை வற்புறுத்தாதே. உன் கணவர் கூட, அவளை பார்க்க போக வேண்டாம். பெற்ற மகன்களை பார்க்க, அவளுக்கு முழு உரிமை இருக்கிறது. அதனால், மகனையும், பேரனையும் அவளுக்கு காட்டுகிறோம் என்கிற அர்த்தம், உங்களது செயல்பாடுகளில் தெரியக் கூடாது.மனிதாபிமான அடிப்படையில் தான் மகனையும், பேரனையும் அவளுக்கு காட்டுகிறோம் என்கிற அர்த்தம் தான், உங்களது செயல்பாடுகளில் வெளிப்பட வேண்டும். மகனை அடிக்கடி பார்க்க வேண்டும் என்கிற அவளின் விருப்பத்தை, ஏற்காதீர்கள். அவள் மீது ஈவு, இரக்கம் காட்டாதீர்கள். அவளது இழிசெயலுக்கான தண்டனையை, அனுபவிப்பதே நியாயம். அவளுக்கு பெரிய தொகை கொடுக்க முற்படாதீர்கள்.இரண்டாவது மகன் திருமணத்துக்கும், அவளை அழைக்காதீர்கள். இளையவன் விரும்பினால், மூத்தவனை போல, அம்மாவை தனியாக பார்க்கட்டும்.பல்லி, தன் வாலை இழந்து விட்டால், புது வால் முளைத்துக் கொள்ளும். துண்டித்த வாலை ஒட்ட முயற்சிப்பது அறிவீனம்.நீ எப்போதும் போல, உன் கணவர் மற்றும் மகன்கள் மீது அன்பை பொழிந்து, அன்பை பெறு. அதற்கான முழு உரிமையும் உனக்கு இருக்கிறது, மகளே.உங்களின் தேநீர் விடுதி, மிகப்பெரிய உணவு விடுதியாக வளர, என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !