உள்ளூர் செய்திகள்

காந்திஜியின் அபூர்வ தபால்தலைகள்!

நாட்டின் விடுதலை வேள்வியில் கோவைக்கு நிறைய பங்கு உண்டு. வெளியே தெரியாமல் அனேகம் பேர் உழைத்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் காலஞ்சென்ற கோபால்.பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றிய இவர், ஒரு முறை காந்திஜியின் பேச்சை கேட்டுள்ளார். அன்று முதல் அவர் மீதும், நாட்டின் மீதும் பெரும் பக்தி கொண்டார். அவரது பேச்சும்,மூச்சும் எப்போதும் காந்திஜியைப் பற்றியே இருக்கும். நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு துவங்கி, இறக்கும் வரை சுதந்திர தினத்தன்று கொடியேற்றி கொண்டாடியவர். தனக்குள் ஏற்பட்ட காந்தியத்தை தன் மகன் ரவிக்குமாரிடம் விதைத்துவிட்டு சென்றுவிட்டார்.இதனால், மில் தொழிலாளியான ரவிக்குமாருக்கு காந்திஜி மீது ஈடுபாடு ஏற்பட்டது. சுப்பைய்யன் என்ற தன் நண்பரின் வழிகாட்டுதலின் பேரில், காந்தி தொடர்பான தபால் தலைகளை சேகரிக்க துவங்கினார். கடந்த 30 வருடங்களாக, இவர் சேகரித்து வந்த தபால்தலைகள் தற்போது, விலை மதிப்பில்லாத பொக்கிஷமாக மாறியுள்ளது.உலகில் உள்ள தபால் தலைகளிலே, காந்திஜி தொடர்பான தபால் தலைகளுக்கு தான் மதிப்பு அதிகமுள்ளது. 135 நாடுகள் காந்திஜியின் தபால் தலைகளை வெளியிட்டு, அவருக்கு கவுரவம் சேர்த்துள்ளன. இவரிடம் 55 நாடுகளின் தபால் தலைகள் உள்ளன. இவற்றில் பல தபால் தலைகள் அபூர்வமானவை.தபால் தலைகள் காகிதத்தில் அச்சிடப்படுவது தான் வழக்கம். நாமும் அப்படித்தான் பார்த்திருக்கிறோம். காந்திஜிக்கு பிடித்த கதர் துணியில் அச்சான அபூர்வ தபால் தலை இவரிடம் உள்ளது. ஒரு காலத்தில், அரசாங்க உபயோகத்திற்கு மட்டும் சில தபால் தலைகள், 'சர்வீஸ்' என்ற தலைப்பில் அச்சிடப்பட்டன. அந்த தபால் தலையையும் வைத்துள்ளார்.தென்னாப்பிரிக்காவில் காந்திஜி தொடர்பான தபால் தலைகள் நிறைய வெளியிட்டுள்ளனர். காந்திஜி ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட ரயில் நிலையப் படத்தை போட்டு வெளியான தபால் தலையும், நாடு சுதந்திரம் அடைந்ததும் போடப்பட்ட தபால் தலையும் இவரிடம் இருக்கிறது.தன் மாத சம்பளத்தில் ஒரு பங்கை ஒதுக்கி, இதற்காக பல இடங்களுக்கு எழுதியும், அலைந்தும் சேகரித்த தபால் தலைகளை இன்று பலரும் பார்த்துவிட்டு, அதிக விலைக்கு கேட்கின்றனர். இவரது மனைவி பிரேமா, மகள் ஜெகதாம்பிகா பக்கபலமாக இருந்து ஊக்குவிக்கின்றனர்.கடந்த 96 ம் ஆண்டு, தினமலர் - வாரமலர் குற்றால டூரில் கலந்து கொண்ட இவர், டூரின் போது ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக, தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பய்யர் மீது, மிகுந்த மரியாதை ஏற்பட்டு, அவரது நூற்றாண்டின் போது தபால் தலை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசுக்கு இடை விடாமல் கடிதம் எழுதினார். பின்னர், டி.வி.ஆர்., நினைவு தபால் தலை வெளியிட்ட போது, அதனை கொண்டாடி மகிழ்ந்து, டி.வி.ஆர்., தொடர்பான தபால் தலை, அஞ்சல் கவர் போன்றவற்றை சேகரித்து வைத்துள்ளார்.***மணிகண்டன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !