உள்ளூர் செய்திகள்

தீர்க்காயுள் வாழ வழி!

ஜன. 06 - ஆருத்ரா தரிசனம்இந்த உலகம் எப்படி தோன்றியது என்பதற்கு, இதுவரை ஆதாரபூர்வமான தகவல் ஏதும் அறிவியல் தரவில்லை. நமக்கு கிடைத்துள்ள காரணங்கள் வெறும் அனுமானமே. சத்தத்தில் இருந்து உலகம் தோன்றியதாக கூறுகிறது, ஆன்மிகம். ஆருத்ரா தரிசன நாயகரான நடராஜரின் கையில், 'டமருகம்' என்ற உடுக்கை உள்ளது. இது எழுப்பும் ஒலியிலிருந்தே உலகமும், உயிர்களும் படைக்கப்பட்டது என்கின்றனர். நம்மைப் படைத்து, தானும் ஆடி, நம்மையும் ஆட்டுவிக்கும் நடராஜருக்கு, இரண்டு தீவிர பக்தர்கள் இருந்தனர். ஒருவர், வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர். இன்னொருவர், பதஞ்சலி எனும் பாம்பு வடிவமுடையவர்; யோகா என்ற அருமையான கலையை மக்களுக்கு அருளியவர். இவர் எழுதிய, 'பதஞ்சலி யோக சூத்ரம்' என்ற நுால் தான், இன்றைய யோகா கலைக்கு அடிப்படையாக உள்ளது. 'யோகா மூலம் மனம் கட்டுக்குள் வரும். இதனால், என்ன நடந்தாலும், அதைஎளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் கிடைத்து விடும். இது தீர்க்காயுள் வாழ வழி வகுக்கும்...' என, போதித்தவர்.இவர், ஆதிசேஷனின் அம்சம் என்றும், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரை பிள்ளைகளாகப் பெற்ற அத்திரி மகரிஷி- - அனுசூயா தம்பதியின் புதல்வர் என்றும், ஒரு கருத்து இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, 'பதஞ்சலி விஜயம்' என்ற நுாலில், இவரது பிறப்பு வேறு மாதிரியாகக் காட்டப்படுகிறது.கோனிகா என்ற பெண்மணி, தவ வலிமை பெற்றவராக இருந்தாள். நினைத்த போது, சூரிய தேவனை அழைக்கும் வல்லமை அவளிடம் இருந்தது. இவள் ஒருமுறை சூரியனிடம், 'எனக்கு இந்த உலகத்திலேயே மிகச்சிறந்த புத்திரன் வேண்டும்...' என, பிரார்த்தித்தாள்.கோனிகாவின் கோரிக்கையை ஏற்று, ஒரு குழந்தையை தந்தார், சூரிய பகவான். அக்குழந்தைக்கு, பதஞ்சலி என்று பெயரிட்டு, வளர்த்தாள். கோனிகா என்ற சொல்லுக்கு, 'வித்தியாசமானதை செய்பவள்' என்று பொருள். பதஞ்சலியை அவள் கருவில் சுமக்காமல், சூரிய பகவானிடம் இருந்து நேரடியாகப் பெற்றதும், வித்தியாசமானது தான்.இந்த புனிதக் குழந்தையின் பிறப்பின் நோக்கம், நடராஜரின் நடனத்தை கண் குளிர தரிசிப்பது தான். அந்த நோக்கம் நிறைவேறியது. நடராஜர் சன்னிதிகளில் பதஞ்சலி, பாம்பு வடிவ சிலையாக உள்ளார். யோகக் கலையை அளித்த, பதஞ்சலி முனிவரை, நடராஜருக்குரிய ஆருத்ரா தரிசன நன்னாளில் வணங்கி அருள் பெறுவோம்!- தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !