சாமி கண்ணைக் குத்தும்!
ரயில், மத்திய பிரதேசம், ஜபல்பூரில் நின்றதும், மனைவி சரஸ்வதியிடம், ''வண்டி அரைமணி நேரம் நிக்கும்... அதுக்குள்ள சாப்பாட்டுக்கு சூடா ரொட்டி, சப்ஜி கிடைக்குதான்னு பாத்துட்டு வரேன்,'' என்றார் சங்கரன்.அவள் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும், எங்கே, 'இறங்காதீங்க'ன்னு சொல்லிடப் போறாளோ எனப் பயந்து, அவசரமாக வண்டியை விட்டு இறங்கினார்.சங்கரன் வங்கியில் பணிபுரிந்ததால், டில்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் என்று வட மாநிலங்களிலேயே அதிகம் காலம் வசித்திருந்ததால், தொலைந்து விடுவோம் என்ற பயம், சரஸ்வதிக்கு இல்லை. பணி ஓய்வுக்கு பின், இப்போது சென்னை வாசம். நினைத்தால், ஆன்மிக சுற்றுப் பயணம் புறப்பட்டு விடுவர்.நாளைக் காலை, அலகாபாத், திரிவேணி சங்கமத்தில் நீராடிய பின் காசி; அப்புறம் கயாவிற்கு சென்று சிரார்த்தம் செய்வது என, பயணத் திட்டங்களை வகுத்திருந்தனர்.ரயிலிலிருந்து கீழே இறங்கிய சங்கரன், 'வழக்கம் போல இதை வாங்காதீங்க, அதை திங்காதீங்கன்னு சொல்லாம ஏன் சரஸ்வதி அமைதியா இருந்தா...' என யோசித்தபடி, பிளாட்பாரத்தில் அலைந்து கொண்டிருந்தார். 10 நிமிடங்களில், இரு தொன்னைகளில் ஒன்றில் பூரிகளையும், மற்றொன்றில், எண்ணெய் மிதந்த காய்கறிகளையும் கையில் ஏந்தியபடி வண்டி ஏறினார்.மனைவியிடம் தொன்னைகளை நீட்டி, ''நீயும் கொஞ்சம் சாப்பிடறயா... இங்க நாம வசிக்கும் போது, உருளைக் கிழங்கையும், கத்திரிக்காயையும் நீள நீளமா நறுக்கி, ஒரு சப்ஜி செய்வீயே... அதே மாதிரி கெடைச்சது...'' என, சன்னமான குரலில், மனைவியை பாராட்டுவது போல, சிறு குற்ற உணர்ச்சியுடன் கேட்டார் சங்கரன்.''வேணாங்க... கொண்டு வந்த தயிர் சாதம் மிச்சமிருக்கு; எனக்கு அது போதும்,'' என்றாள் அமைதியுடன்!அதுக்கு மேல் எதுவும் சொல்லாமல் சரஸ்வதி மவுனித்தது, ஒரு வகையில் சங்கரனுக்கு ஏமாற்றமாக இருந்தது. 'கத்திரிக்காய சாப்பிடாம உங்களால இருக்க முடியாதா'ன்னு கோபத்தோட லெக்சர் தருவாளே... இன்னைக்கு ஏன் எதுவும் சொல்லலே...' எனக் குழம்பினார்.சாப்பிட்டு முடித்த சிறிது நேரத்தில், பெட்டியைத் திறக்க முயற்சித்தார் சங்கரன். தலையில் கட்ட துண்டைத் தேடுகிறார் என்பது புரிந்து, தன் அருகில் இருந்த துண்டை எடுத்து, அவரிடம் கொடுத்தாள் சரஸ்வதி. கூடவே, இரு பத்திரிகைகளையும், அவர் கையில் திணித்தாள்.'வெளியில் வந்தும் இப்படி கத்திரிக்காய தின்னுட்டு சொறியணுமா; கேட்க மாட்டீங்களா... எப்படியாவது கத்தரிக்காய் சாப்பிட்டே ஆகணுமா...' என, வழக்கம் போல தொடர்ச்சியாக அறிவுரைகள் வரும் என்று எதிர்பார்த்தார் சங்கரன். ஆனால், சரஸ்வதியிடம் புன்னகையுடன் கூடிய மவுனம் மட்டுமே வெளிப்பட்டது. அவளிடமிருந்து எந்த தொண தொணப்பும் இல்லாதது, அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.சங்கரனுக்கு கத்திரிக்காய் என்றால் உயிர்; வங்கி வேலையில் வடக்கு, கிழக்கு, மேற்கு என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தங்க நேர்ந்த போதெல்லாம், அந்தந்த ஊர்களில் கத்திரிக்காயை வைத்து என்னவெல்லாம் சமைப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் அவருக்கு அலாதியான விருப்பம். பைங்கன், பகனேகாய், பிரிஞ்சால் என எல்லா மொழிகளிலும் கத்திரிக்காய் பெயர், சங்கரனுக்கு அத்துப்படி!சென்னைக்கு வந்த பின், 'வடக்கில கிடைக்கிற மாதிரி பெருசா, உருண்டையா கத்திரிக்காய் கெடைக்கல...' என்று மார்க்கெட்டிலிருந்து திரும்பி வந்ததும், ஏக்கப் பெருமூச்சுடன், புலம்பிக் கொண்டே பையைக் கவிழ்ப்பார்.அதில், பச்சையும், வைலட்டுமாய் ஏகப்பட்ட கத்திரிக்காய் வகைகள் விழும்; அவரை கோபத்துடன் பார்ப்பாள் சரஸ்வதி. பின், அவள் சமைத்து கொண்டிருக்கையிலேயே, 'என்ன... இன்னைக்கு ரச வாங்கியா, எண்ணெய் கத்திரிக்காயா, பைங்கன் பர்த்தா, ரொட்டியா... என்ன செய்யப் போற...' என்று, அவள் பின்னால் வந்து நிற்பார் சங்கரன்.கத்திரிக்காயின் காம்பைப் பார்த்தே, இளம் கத்திரிக்காயைப் பொறுக்கி எடுப்பதில் சங்கரன் கெட்டிக்காரர். 'பர்த்தாவுக்கு தணல்ல சுடணும்; கம்பியில குத்த உதவி செய்யட்டுமா...' என்று கேட்டுக் கொண்டே வந்து நிற்பார்; எல்லாம் சந்தோஷமாக நல்லபடி தான் போய் கொண்டிருந்தது.ஒருநாள், சங்கரனுக்கு தலையில் பொடுகு, சொறி, அரிப்புன்னு ஏகப்பட்ட பிரச்னைகள் வர, டாக்டரிடம் சென்ற போது தான், அவர் பெரிய குண்டைத் தூக்கி போட்டார்.'அலர்ஜியா இருக்கலாம்... சோரியாசிஸ் மாதிரியும் இருக்கு; டெஸ்ட் செய்து பாத்துடலாம்...' என்றவர், கடைசியாக கத்திரிக்காய் சாப்பிடுவதை நிறுத்தச் சொன்னார்.ஆனால், சங்கரன் கேட்க வேண்டுமே... கத்திரிக்காய் சாப்பிடுவதை அவரால் நிறுத்த முடியவில்லை. வீட்டில் சமைப்பதில்லை என்றாலும் வெளியில் சாப்பிட்டு விடுவார்.சரஸ்வதியும், 'கத்தரிக்காய் சாப்பிடுவதை விடுங்களேன்...' என்று கத்தி, கெஞ்சி, பேசாமலிருந்து என, எல்லாம் செஞ்சு பாத்தும் மசியவில்லை சங்கரன். சாப்பிட்டதும், கை, தன்னிச்சையாக தலைக்குப் போகும். அவரை சரஸ்வதி, கோபத்துடன் பார்ப்பதை உணர்ந்து, தலையில் துண்டைக் கட்டிக் கொள்வார். பார்க்கப் பாவமாக இருக்கும். 'நாக்கை அடக்கக் கூடாதா... ஏன் இப்படி இருக்றீங்க...' என்று, குழந்தை போல் அடம் பிடிக்கும் கணவரையே, கண்ணீர் மல்க, கேட்பாள். அதையெல்லாம் சங்கரன் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை.திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம், காசி யாத்திரை, கங்கையில் ஆரத்தி தரிசனம், பிண்டங்கள் இட்டு கயா சிரார்த்தம் என, சிரத்தையாக நடத்தி முடித்தனர் சங்கரன் - சரஸ்வதி தம்பதியினர். உடன் வந்த சாஸ்திரி, ''சிரார்த்தத்தில் கடைசி அங்கம் கயா; இது ரொம்ப முக்கியமானது. பற்று, ஆசாபாசங்கள் இல்லாம எப்படி வாழ்றதுன்னு நமக்குப் போதிக்கிற இடம் கயா. இங்க, அக் ஷயவட்ங்கிற ஆலமரம் ஆயிரக்கணக்கான வருஷமா இருக்கு,'' என்று சொல்லிக் கொண்டே வர, இருவரும் அதைக் கேட்டுக் கொண்டே, அக் ஷயவட் மரத்தடி கோவிலுக்கு வந்தனர்.வழிபாடுகள் முடிந்ததும், இருவரையும் அமர வைத்த சாஸ்திரி, ''வாழ்க்கையில் எது மேலயும் பிடிப்பு, ஆசை வரக் கூடாது. பிடிச்சத விட்டுட்டு வாழற மனுஷனுக்குத் தான், மறுபிறவி கிடையாது,'' என்றார்.அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டி கேட்டுக் கொண்டிருந்தாள் சரஸ்வதி. 'இவளுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் புரியுது...' என, மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தார் சங்கரன். ''இலையில, ஆலிலையை விட்டுடுங்கோ... உங்களுக்கு பிடித்தமான பழமோ, காயோ இல்ல வேறு எதுவோ, எதை நீங்க விடுறீங்களோ, அதை, அதன் பின் ஆயுசுக்கும் தொடக் கூடாது,'' என்றார்.உடனே, சரஸ்வதி, ''நாங்க பழத்துல மாதுளம் பழத்தை விட்டுடறோம்,'' என்றாள். இதைக் கேட்டதும், 'அடடே... சரஸ்வதிக்கு மாதுளம் பழம்ன்னா உசிராச்சே... அதைப் போய் விடுறாளே...' என, மனைவியை நம்ப முடியாமல் பார்த்தார் சங்கரன்.''காய்ல எதை ஆயுசு முழுக்க ஒதுக்கணுங்கறதையும் தீர்மானிச்சிடுங்க...'' என்று சாஸ்திரி சொல்லி முடிக்கும் முன், ''கத்தரிக்காய்,'' என்றாள் சரஸ்வதி.சங்கரனுக்கு, 'திக்'கென்றிருந்தது.''இந்த இரண்டையும் இனி வாழ்க்கை பூரா தொடாதீங்க; தெய்வ குத்தமாயிடும்,'' என்று சாஸ்திரி சொல்லிக் கொண்டே, மற்ற சடங்குகளை செய்யலானார்.மனைவியையே பார்த்தார் சங்கரன். அவர் பார்வையைச் சந்திக்க துணிவில்லாமல், முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சரஸ்வதி.'எனக்கு நல்லதைச் செய்வதற்காக கடவுள் பெயரை பயன்படுத்தி, தனக்கு மிகவும் பிடித்ததை ஒதுக்கி, எனக்கு கெடுதல் ஏற்படுவதிலிருந்து தடுத்து விட்டாளே...' என, மனம் நெகிழ்ந்த சங்கரனுக்கு, ரயில் பயணத்தின் போது, மனைவி கடைபிடித்து வந்த நீண்ட மவுனத்திற்கு, அவள் சொல்லாமலே அர்த்தம் விளங்கியது.ஜி.குமார்மின்னணு தொடர்பு துறையில், முனைவர் பட்டம் பெற்றவர். மத்திய பிரதேசம், போபாலில், தனியார் பொறியியல் கல்லூரியில், இயக்குனராக பணிபுரிகிறார். தமிழ், வார, மாத இதழ்கள் நடத்திய சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளார். அவ்வப்போது ஆன்மிக கட்டுரைகளும் எழுதி வருகிறார்.