உள்ளூர் செய்திகள்

மணல் லிங்கம்!

தமிழகத்திலுள்ள சில கோவில்களில், மணல் லிங்கங்கள் உள்ளன. இவற்றுக்கு அபிஷேகம் செய்தால் கரைந்து விடும் என்பதால், அபிஷேகம் கிடையாது. ஆனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவிலிலுள்ள மணல் லிங்கத்துக்கு, அபிஷேகம் நடக்கும் அதிசயத்தைக் காணலாம். இமயமலையில், சிவன், பார்வதியை திருமணம் செய்த போது, வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த பொதிகைக்கு செல்லுமாறு, அகஸ்தியருக்கு கட்டளையிட்டார், சிவன். செல்லும் வழியில், அகஸ்தியர் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்தார்.தாராபுரம் வந்ததும், அமராவதி ஆற்றங்கரையில், மணலில் ஒரு லிங்கம் வடித்தார். அகஸ்தியர் வடித்த லிங்கம் என்பதால் சுவாமிக்கு, 'அகஸ்தீஸ்வரர்' என, பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், கோவில் வடிக்கப்பட்டது. தமிழகத்தில், ராமேஸ்வரம், ராமநாதர்; கும்பகோணம், கும்பேஸ்வரர்; காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோவில்களில் மணல் லிங்கம் உள்ளது. இவற்றுக்கு அபிஷேகம் நடப்பதில்லை.ஆனால், இங்கு, பால், மஞ்சள், தண்ணீர் உள்ளிட்ட எல்லா பொருட்களாலும் அபிஷேகம் நடந்தாலும், இது கரையாமல் இருப்பது அதிசயம். எண்ணெய் காப்பு சாத்தும் முன், இந்த லிங்கத்தில், 'காக்கா பொன்' எனும் துகள் ஜொலிப்பதை காணலாம்.இத்தலத்தின் மகிமையால் ஈர்க்கப்பட்ட, அகஸ்தியர், காசியில் இருந்து ஒரு லிங்கம் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அது முடியாமல் போனதால், அமராவதி ஆற்றை, கங்கையாக எண்ணி, அதிலுள்ள மணலை பிடித்தே லிங்கம் வடித்தார், என்பர். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் வணங்கும் வகையில், ஒரே சன்னிதியில் ஐந்து லிங்கங்கள், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை, உயரத்தில் மாறுபட்டவை.சிவராத்திரி மற்றும் பிரதோஷ நாட்களில் பஞ்ச லிங்கங்களை வழிபடுவதன் மூலம், அனைத்து வெற்றிகளும் கிடைக்கும்.இங்குள்ள, அகிலாண்டேஸ்வரி அம்பாள் சன்னிதியில், கன்னிகள், திருமணத் தடை நீங்கவும், திருமணமானவர்கள், சுமங்கலி பாக்கியம் வேண்டியும் வழிபடுகின்றனர்.அம்பாள் சன்னிதியில், திரிசதி (300 பெயர் கொண்ட ஸ்லோகம்) நாமாவளியை, ஐந்து அல்லது ஒன்பது வெள்ளிக்கிழமை சொல்லி வந்தால், குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய பலன்கள் கிடைக்கும்.கோவில் வாசலில் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி எழுந்தருளியுள்ளார். திருப்பூரில் இருந்து, 60 கி.மீ., ஈரோட்டில் இருந்து, 80 கி.மீ., துாரத்தில் தாராபுரம் உள்ளது. ஐந்துமுக்கு பேருந்து நிறுத்தம் அருகில் கோவில் இருக்கிறது. தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !