இது உங்கள் இடம்!
மனைவிக்கு விடை கொடுத்த மனசாட்சி!சமீபத்தில் திருமணமான, பத்திரப் பதிவுத் துறையில் வேலை செய்யும் நண்பனை பார்க்க அவனது வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில் அவனும், அவன் குடும்பத்தாரும் மட்டுமே இருந்தனர். அவனுடைய மனைவியை காணவில்லை. 'எங்க உன் மனைவி?' என கேட்டதற்கு, 'ரெண்டு பேருக்கும் ஒத்து வரல; அவங்க அப்பன் வீட்டுக்கு போயிட்டா...' என்றான் சலனமே இல்லாமல்!'என்னடா ஒத்து வரல... புதுப்பொண்ணுங்க புகுந்த வீட்டுல சகஜமாகற வரைக்கும் கொஞ்சம் அப்படி, இப்படித் தான் இருப்பாங்க. நீ தான் அனுசரிச்சு போகணும்...' என்றேன்.'மச்சான்... என்னைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும். நான் எதை வேணா, 'அட்ஜெஸ்ட்' செய்வேன்; ஆனா, என் மனசாட்சிய அடகு வைக்க மாட்டேன். அவ, அத, 'அட்ஜெஸ்ட்' செய்துக்க சொன்னா அதான், போனா போகட்டும்ன்னு விட்டுட்டேன்...' என்றான்.'மனசாட்சிய அடகு வைக்கச் சொல்றாளா... அப்படி என்ன சொல்லிட்டா?' என்று கேட்டேன். 'ஆபிசுல இருந்து வீட்டுக்கு வரும் போது, ஸ்வீட்டும், பூவும் வாங்கிட்டு வந்தேன். அதை வாங்கி ஓரமா வெச்சிட்டு, 'பணம் எங்கே'ன்னு கேட்டா. 'பணமா... என்ன பணம்'ன்னு கேட்டேன். 'பத்திரப் பதிவு துறையில வேலை செய்யுற உன் புருஷன், தினமும், 5,000, 10,000ம்ன்னு லஞ்சம் வாங்கிட்டு வருவான். பாத்து பத்திரமா வாங்கி சேர்த்து வைச்சுக்கோன்னு சொல்லி தான் எங்கப்பா உங்களுக்கு என்னை கட்டி வைச்சாரு. நீங்க என்னடான்னா வெறும் கையை வீசிட்டு வந்திருக்கீங்களே...' என்றாள்.'எங்க பரம்பரைக்கே லஞ்சம் வாங்குற பழக்கம் கிடையாது'ன்னேன். தினமும் இதே பல்லவியைப் பாடி, 'பிழைக்கத் தெரியாத ஆளோட என்னால குப்பை கொட்ட முடியாது'ன்னு, அவ அப்பன் வீட்டுக்கு போயிட்டா. நானும் போனாப் போறான்னு தலைமுழுகிட்டேன். மனைவிக்காக என்னால மனசாட்சிய அடகு வைக்க முடியாது...' என்றான்.'உன்ன மாதிரி ஒரு நேர்மையாளனை நண்பனா அடைஞ்சத நினைச்சு ரொம்ப பெருமைப்படுறேன்...' என்று சொல்லி, அவனை பாராட்டி, அவனது நல்ல குணத்தை அவன் மனைவிக்கு புரிய வைக்க கிளம்பினேன்.— எஸ்.ராமசுப்ரமணியன், சென்னை.பின்குறிப்பு: மனசாட்சியை மதித்து மனைவிக்கு விடை கொடுத்த அந்த மகானுபாவர் எந்த சார் - பதிவாளர் அலுவலகத்தில் இருக்கிறார்? அவரை சந்திக்க வேண்டும் போலுள்ளதே!— பொறுப்பாசிரியர்.மணமக்களை வாழ்த்தும் போது...சமீபத்தில், திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டேன். அவ்விழாவில், அனைவருக்கும் அட்சதை தராமல், மேடையில் இருந்தவர்களுக்கு மட்டுமே தரப்பட்டு, அவர்கள் மட்டுமே அட்சதை போட்டு, ஆசீர்வாதம் செய்தனர்.பின், வரிசையில் நின்று மணமக்களை வாழ்த்தி, அன்பளிப்பு அளிப்போரிடம் அட்சதை வழங்கப்பட்டது. அவர்களும், மணமக்களை நெருங்கும் போது அவர்களை அட்சதை தூவி வாழ்த்தி, அன்பளிப்பு தந்தனர். இது வந்திருந்தோர் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.இதை நாமும் கடைபிடிக்கலாமே!— தி.சடகோபன், நெய்வேலி.சமூக அக்கறை கொண்ட தலைமையாசிரியர்!சமீபத்தில், எங்கள் ஊர் அரசு பள்ளியில், மரம் நடும் விழா நடைபெற்றது. விழாவில், பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் ஐந்து மரக்கன்றுகளை கொடுத்த தலைமை ஆசிரியர், 'உங்களில் பெரும்பாலானோர் 5 கி.மீ., தூரம் நடந்து தான் பள்ளிக்கூடம் வர்றீங்க. அப்படி வரும் வழியில, சாலையோரம் இந்த மரக்கன்றுகளை, அவரவர் கையாலேயே நடணும்; இதுக்கு உடற்பயிற்சி ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கணும். அதோட, மாணவர்கள் வீட்டிலிருந்து கிளம்பும் போது, ரெண்டு பாட்டில்கள்ல தண்ணீர் எடுத்துட்டு வரணும். ஒன்று குடிக்கிறதுக்கும், மற்றொன்று நீங்க நட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் பயன்படுத்தணும். இதற்கு பெற்றோரும் ஒத்துழைப்பு கொடுக்கணும். அதேபோல், பள்ளி முடிந்து செல்லும் போதும், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றணும். இதன் மூலம் மாணவர்கள், தாங்கள் வைத்த கன்றுகள் என்று அதிக அக்கறை எடுத்து கொள்வர்; ஊரும் மாசுபடாமல் காக்கப்படும்...' என்றார். இதை கேட்ட நான் வியந்து, தலைமை ஆசிரியரை மனதார பாராட்டினேன்.— பா.பாலாஜி, பண்ருட்டி.