உள்ளூர் செய்திகள்

தோல்வியின் வெற்றி!

அன்று, கோவர்த்தனகிரி அப்பார்ட்மென்டில், புதிய செகரட்டரி தேர்தல் நடைபெற இருந்தது. பொதுவாக, அபார்ட்மென்ட் செகரட்டரி பதவி, பெரிய அதிகாரமில்லாததும், வயதானவர்கள் அல்லது வேலை இல்லாதவர்களுக்கானது என்று கருதப்பட்டாலும், கோவர்த்தனகிரி அப்பார்ட்மென்ட் வித்தியாசமானது.சுமார், 80 தொகுப்பு வீடுகள் கொண்டது. மாதம் நான்கு லட்சம் ரூபாய் வருமானம். செகரட்டரிக்கு, 30 ஆயிரம் சம்பளம், எல்லா வீட்டு உரிமையாளர்களும் மதிக்கக் கூடிய பதவி, தனி ஆபீசும் உண்டு. செகரட்டரி பார்வையின்றி ஒரு துரும்பு கூட நுழையவும் முடியாது; வெளியேறவும் முடியாது.இந்த தேர்தல், இரண்டாவதாக நடக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக செகரட்டரியாக இருந்த ஆத்மநாதன் தான், இதை நடத்துகிறார். மூன்று ஆண்டுக்கு மேல் ஒருவரே, இந்த பதவியில் நீடிக்க முடியாது.செல்வராகவனும், விஜயகுமாரும் இம்முறை மோதுகின்றனர். கடந்த ஒரு வாரமாக கண்ணியமான பிரசாரம் செய்திருந்தனர்.ஓட்டெடுப்பு துவங்கும் முன், ''இந்த செகரட்டரி தேர்தல் நமக்கானது. யார் வந்தால், அபார்ட்மென்ட் பிரச்னையில்லாமல் போகும் என்று, சிந்தித்து தேர்ந்தெடுங்கள். என்னைப் பொறுத்தவரை இருவருமே நல்லவர்கள், பொறுமைசாலிகள், பொறுப்பானவர்களும் கூட. யார் ஜெயித்தாலும் நாம் முழுமையான ஒத்துழைப்பை தரவேண்டும்,'' என்று பேசினார், ஆத்மநாதன்.அடுத்து, போட்டியாளர்கள் இருவரும் எழுந்து நின்று, வணங்கினர். தங்களது வேண்டுதல்கள், வாக்குறுதிகளை ஏற்கனவே, 'வாட்ஸ் ஆப்'பில் சொல்லியிருந்தனர்.ஓட்டுப்பதிவு ஆரம்பமானது. சுமார், 60 பேர், தாங்கள் விரும்பிய புது செகரட்டரி பெயரை, ஒரு பெட்டிக்குள் எழுதி போட்டனர். மீதம் உள்ளோர், மூடிய கவர்களில், காலையிலேயே எழுதி கொடுத்து சென்றிருந்தனர்.அரை மணிநேரத்தில், அனைவரும் கடமையை முடிக்க, மூடிய கவர்கள் பிரிக்கப்பட்டு, மொத்த ஓட்டுகளை எண்ண ஆரம்பித்தார், ஆத்மநாதன்.ஆச்சரியம், 10 - 11, 20 - 23, 30 - 31 என்று போட்டி கடுமையாக, விஜயகுமாரும், செல்வராகவனும் நெருக்கமாகவே முன்னேறினர். முடிவில், 42 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார், செல்வராகவன். 38 பேரின் ஆதரவுடன், கவுரவ தோல்வி அடைந்தார், விஜயகுமார்.முதல் ஆளாக, செல்வராகவனை கட்டியணைத்து, கை குலுக்கி பாராட்டினார், விஜயகுமார். மற்ற பிளாட் வாசிகளும், இருவருக்கும் கை குலுக்கி, பாராட்டு தெரிவித்து, கலைந்தனர்.செல்வராகவனிடம் வந்தார், ஆத்மநாதன்.''வாழ்த்துகள் செல்வராகவன். இந்த வெற்றி மூலம், உங்க தனித்திறமையை வெளிக்காட்டணும். எல்லாரோட அன்பும், ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்,'' மனதார வாழ்த்தி, செல்வராகவனின் பிளாட் வரை கூடவே சென்றார்.வெற்றி பெருமிதத்துடன் தன் வீட்டிற்குள் நுழைந்த செல்வராகவன், ''ப்ளீஸ், உள்ள வாங்க...'' என, ஆத்மநாதனை கை பிடித்து அழைத்தார்.மறுப்பு சொல்லாமல் உள்ளே வந்து அமர்ந்தார், ஆத்மநாதன்.''என்ன சாப்பிடறீங்க... நான் டீ, காபி நல்லா போடுவேன்,'' கேட்டார் செல்வராகவன்.''பரவால்ல. உங்க திருப்திக்காக, மோர் இருந்தா கொடுங்க.''உள்ளே சென்றார், செல்வராகவன்.அப்போதுதான் கவனித்தார், ஆத்மநாதன்.வீடு நிசப்தமாக இருந்தது.மோருடன் வந்த செல்வராகவனிடம், ''ஆமாம், வீட்ல மிஸஸ் இல்லையா?''''இப்ப அவங்க, வேற ஊர்ல இருக்காங்க. உங்களுக்கு தெரியுமா, தெரியாதான்னு எனக்கு தெரியாது. அவங்க, பியூட்டிஷியன். எனக்கென்னவோ அந்த வேலை பிடிக்காது. ஆரம்பத்தில இருந்தே பிரச்னை.''இப்ப ஏதோ ஒரு சினிமா கம்பெனியோட, 'அக்ரிமென்ட்' போட்டு, முழு நேரமும் வீட்ல தங்கறதே இல்ல. சோ, பிரச்னை பெரிதாகி, பரஸ்பரம், 'டிவோர்ஸ்' பண்ண முடிவெடுத்து விட்டோம்,'' என்றார், செல்வராகவன்.''ஓ சாரி... வெரி சாரி... ஒரே பிளாட்ல இருக்கோம்ன்னு பேரு. ஆனா, நிறைய விஷயம் தெரியறதில்ல... யாருக்கு யாரோட உட்கார்ந்து மனம் விட்டு பேச முடியுது. உங்க டாட்டர்?'' கேட்டார், ஆத்மநாதன்.''போன வாரம், கனடாவுல உள்ள மாப்பிள்ளை கூப்பிட்டுக்கிட்டாரு.''''சரி, உங்கம்மா... படுக்கை நோயாளியா இருந்தாங்களே அவங்க?''''ஆமா சார்... ஒரு பணியாளை போட்டு பார்த்துகிட்டேன். ஆனாலும், சரிபட்டு வரல. அவங்களுக்கு பேச்சு நின்னு போச்சு, நினைவும் குறைஞ்சுகிட்டே வருது. எப்ப எது நடக்கும்ன்னு சொல்ல முடியல.''அதான் பக்கத்துல, ஹோம் கம் ஆஸ்பிடல்ல சேர்த்திருக்கேன். ஒரு வகையில், குடும்பம்ன்னு இப்ப பெருசா இல்ல. அதனால தான் இந்த சர்வீஸ்லயாவது மனதை ஈடுபடுத்திக்கலாம்ன்னு தேர்தலில் நின்னேன்,'' என்றார், செல்வராகவன்.ஆத்மநாதனுக்கு புரிந்தது. பிறகு, விடைபெற்று தன் பிளாட்டிற்கு வரும் வழியில், விஜயகுமார் வீட்டை கடந்து வரும்போது, அங்கு பெரும் கூச்சல் கேட்டு, சற்று நேரம் வாசலில் நின்று, கவனித்தார்.வீட்டில் தோரணங்கள் கட்டப்பட்டு, திருவிழாக் கோலமாக காட்சியளித்தது.அப்போது எதேச்சையாக வெளியே வந்த விஜயகுமார், ''அட, நீங்களா... வாங்க வாங்க,'' என்று வரவேற்றார்.யோசித்தவர், உள்ளே சென்றார்.கொஞ்சம் அதிகப்படியான நபர்கள், சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.''என்ன சார் விசேஷம்?'' கேட்டார், ஆத்மநாதன்.''அது ஒண்ணுமில்ல சார்... விருந்தாளிங்க வந்திருக்காங்க. என் சிஸ்டரும், பிரதர்இன்லாவும்.''''அப்படின்னா ஏதாவது குடும்ப விழாவா?'' மீண்டும் கேட்டார், ஆத்மநாதன்.''அதெல்லாம் இல்ல சார், சொன்னா சிரிப்பீங்க. இந்த செகரட்டரி தேர்தலை வெச்சு வந்தாங்க.''ஆத்மநாதனுக்கு ஆச்சரியம்.''உங்க ஆச்சரியம் புரியுது. ஜெயிச்சாலாவது ஒரு கொண்டாட்டம்ன்னு வரலாம். ஏன் இப்ப வந்திருக்காங்கன்னு உங்களுக்கு தோணலாம். ஆனா, இவங்க நேத்திக்கே வந்துட்டாங்க. தேர்தலில் நான் நிக்கறதே ஒரு நல்ல விஷயம்.''அதுக்கு உதவி செய்யிறேன்னு சொல்லி, வந்தாங்க. இப்ப கூட, 'நாலு ஓட்டுல தோத்தது, ஒரு தோல்வியே இல்ல. இது கூட வெற்றிதான்'னு, கொண்டாடுறாங்க. நான் என்னத்த சொல்ல முடியும்?''ஜெயிச்சுடுவேங்கிற நம்பிக்கையில, 'கேக்' வாங்கி வெச்சிருந்தாங்க. இப்ப அதை, 'கட்' பண்ண சொல்றாங்க. ஏதோ அவங்க சந்தோஷத்துல, நானும் சந்தோஷமா பங்கெடுத்துக்கறேன்.''ஆனா, ஒண்ணு சார். இத சாக்கா வெச்சு, சின்ன, 'கெட் டுகெதர்' மாதிரி ஆயிடுச்சு,'' என்ற விஜயகுமார் முகத்தில், உண்மையான மகிழ்ச்சி பரவசம் தெரிந்தது. ''உங்க குடும்பத்துல இது நல்ல அணுகுமுறை சார்...'' என, பாராட்டி விட்டு, தன் வீட்டிற்கு வந்தார், ஆத்மநாதன்.''யாரு புது செகரட்டரி. ஏன் லேட்டு?'' கேட்டாள், மனைவி.முழு விபரத்தையும் சொன்னார், ஆத்மநாதன்.''அப்படின்னா, இந்த விஜயகுமார் தோத்ததுக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றாரே,'' தன் கருத்தை சொன்னாள்.''அடி போடி... நீ புரிஞ்சுக்கிட்டது அவ்வளவுதான். பொது வாழ்க்கையில தன் திறமையை, நல்ல பண்பை வெச்சு கிடைக்கிற வெற்றி... ஒரு பெரிய விஷயம் தான்.''ஆனா, அது எப்ப முழுமையடையும்னா, அந்த வெற்றிய முழுமையா சுமந்துக்கிட்டு, கடைசியா நாம நம் வீட்டுக்குள்ள வரும்போது, அதே மகிழ்ச்சிய, பெருமிதத்த, பகிர்ந்துக்க குறைந்தபட்சம் ஒரு உறவாவது வீட்ல இருக்கணும். அப்பதான் அந்த வெற்றியோட மதிப்பு இன்னும் உயரும்; மேலும், சாதிக்கணும்ங்கிற எண்ணம் வரும்.''வெற்றியடைஞ்ச செல்வராகவன் வீடு, இருளா இருந்தது. குடும்பத்தோட எந்த ஆதரவும், அரவணைப்பும் இல்லாம ஒரு வெறுமையான சூழ்நிலை தான் அங்கு இருந்தது. வேணும்ன்னா கண்ணாடியை பார்த்து பெருமைப்பட்டுக்கலாம். எனக்கே சப்புன்னு ஆயிடுச்சு. இதுக்கு அவரு மட்டும் காரணம்ன்னு சொல்ல முடியாது. அவருக்கு கொடுத்து வைக்கல, அவ்வளவுதான். ''அதே நேரம், விஜயகுமார் வீடோ, நேர் எதிர். என்ன ஒரு கலகலப்பு. ஒருவேளை, இந்த தோல்வியால விஜயகுமார் மனசு கொஞ்சம் கவலைப்பட்டிருந்தா கூட, அவர் வீட்டுக்குள் போனதும், 'அட விடுங்க... நாங்க இருக்கோம்'ன்னு சொல்ல பல உறவுகள் ரெடியா இருக்காங்க.''இந்த தோல்வி குறைஞ்ச வித்தியாசம்ங்கிறதால, இத ஒரு தோல்வியாகவே நினைக்கல... வெற்றி மாதிரி குதிக்கிறாங்க... யாரும் முகத்த தொங்க போட்டுக்கிட்டு ஆறுதல் சொல்லல. குடும்பம் மொத்தமும் அவருக்கு தோள் கொடுத்தது. ஒரே ஜாலியும், கூத்துமா இருக்காங்க. ''இப்படி ஒரு குடும்பம் கிடைச்சா, அவன் தான் அதிர்ஷ்டசாலி. எந்த தோல்வியும் அந்த குடும்பத்தை பாதிக்காது. சுருக்கமா சொன்னா, வெற்றிய கொண்டாடவும், தோல்விய கண்டு துவண்டு போகாம தாங்கிப் பிடிக்கவும் ஒவ்வொருத்தருக்கும் குடும்பம் முக்கியம்; அவங்க ஆதரவு முக்கியம்.''இத சரியா வச்சுக்கிறது தான் ஒவ்வொரு மனிதனின் முதல் வெற்றின்னு சொல்லணும். அப்புறம்தான் பொது வாழ்வு. இந்த விஷயத்துல, விஜயகுமார் கொடுத்து வச்சவர்,'' என, கூறி முடித்தார், ஆத்மநாதன்.கீதா சீனிவாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !