உள்ளூர் செய்திகள்

சம்மர் விளையாட்டுக்கள்

தாயம்!இது, ஒரு வித கட்டம்; இரண்டு முதல், நான்கு நபர்கள் வரை விளையாடலாம். ஒருவர், ஆறு ஆட்டக் காய்கள் வைத்துக் கொள்ளலாம். ஆட்ட ஆரம்பத்தில், நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். தாயம் போட்டவுடன், ஆட்டக் காயை வெளியே கொண்டு வர வேண்டும். தாயக் கட்டை அல்லது சோழிகளைப் போட்டு கட்டங்கள் நகர்த்த வேண்டும்.நடுவில் இருக்கும் சதுர கட்டத்தில் இருந்து ஆட்டத்தைத் துவங்க வேண்டும். தாயக் கட்டையில் போடும் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு, ஆட்டக்காயை நகர்த்த வேண்டும். வழியில் எதிர் அணியின் ஆட்டக்காய் இருந்தால், வெட்டி தூக்க வேண்டும்.குறுக்குக் கோடு போட்ட கட்டங்களில் வெட்ட முடியாது. அது, பாதுகாப்பு கட்டம். வெட்டினால் காய்கள் ஆரம்பித்த இடத்துக்கு போய்விடும். திரும்ப தாயம் விழும் வேளையில் தான், ஆட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும். ஒரு காய் முழுக்க ஒரு சுற்று வந்து விட்டால், அந்த ஆட்டக்காரர் அக்காயை தக்க வைத்துக் கொள்ளலாம். முதலில், ஆறு காய்களையும், ஒரு சுற்று முடித்து வந்தவருக்கே வெற்றி. ஆனால், பல தடைகளைத் தாண்டித் தான் வர வேண்டும்.தாயக்கட்டையை உருட்டினோம்; காயை நகர்த்தினோம் என்றில்லாமல், நம்மைச் சுற்றி எதிராளியின் காய் எங்கிருக்கிறது என்ற கவனத்தோடு ஆட வேண்டும். வேலையில் கவனத்தைக் குவிக்க இப்பயிற்சி உதவும். காய்களை கையில் எடுத்து நகர்த்துவதாலும், தாயக்கட்டையை உருட்டுவதாலும், கைகளுக்கும் இவ்விளையாட்டு, நல்ல பயிற்சி!ஒரு குடம் தண்ணி ஊத்தி, ஒரு பூ பூக்கும்!இரண்டு பேர் எதிரெதிரே நின்று, கை கோர்த்து உயர்த்திப் பிடித்திருப்பர். மற்றவர்கள் வரிசையாக அந்த கைகளுக்குள் நுழைந்து வளைந்து, நெளிந்து ஓடுவர். முதல் முறை நுழையும்போது, 'ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்...' என்று பாடுவர். அடுத்த முறை நுழையும்போது, 'இரண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம்...' என்று பாடுவர். இப்படியே, 10 முறை பாடி முடிக்கும்போது கைகளுக்குள் யார் இருக்கின்றனரோ, அவர்களைப் பிடித்து நிறுத்தி விடுவர். அவர், 'அவுட்!'இவ்விளையாட்டு, பிள்ளைகளுக்கு எண்களை கற்றுக் கொடுப்பதோடு, தோழமையையும் வளர்க்கும்.வட்டத்தில் கல்!முதலில், ஒரு நேர்க்கோட்டை போட வேண்டும். அதிலிருந்து ஐந்து அடி தள்ளி, ஒரு ஆள் நிற்கக் கூடிய அளவுக்கு, வட்டம் போட வேண்டும். பின், அதே வரிசையில் மேலும் ஐந்து வட்டங்கள் போட வேண்டும். ஒவ்வொரு வட்டத்திற்கு இடையிலும், சமமான இடைவெளி இருக்க வேண்டும்.விளையாடுபவர்கள் அனைவரும் வரிசையாக கோட்டின் மேல் நின்று, ஒருவர் பின் ஒருவராக ஒரு அடி முன்னே சென்று, ஒரு கல்லை எடுத்து, முதல் வட்டத்துக்குள் போட வேண்டும். கல்லை வட்டத்திற்குள் போட்டாலும், போடா விட்டாலும், மீண்டும் வரிசையின் கடைசியில் சேர்ந்து கொள்ள வேண்டும்.அடுத்தது, இரண்டாமவர் முறை. முதல் சுற்றில் வட்டத்துக்குள் கல்லைப் போட்டவர்கள், அடுத்த வட்டத்தில் கல்லைப் போட வேண்டும். போடாதவர்கள் முதல் வட்டத்தில் போட முயற்சிக்க வேண்டும். முதலில், ஆறு வட்டங்களிலும் போட்டு முடிப்பவரே வெற்றியாளர்!மெல்ல வந்து கிள்ளிட்டு போ...இரண்டு அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பர். இரு அணி தலைவர்களும், தங்கள் அணியினருக்கு பழத்தின் பெயர், சினிமாவின் பெயர், பூவின் பெயர் என, ஏதாவது ஒரு பிரிவை தேர்வு செய்து ஒவ்வொரு பெயர் வைப்பர். உதாரணமாக, பூவின் பெயர் என்றால், தன் அணியினருக்கு மல்லிகை, ரோஜா, சாமந்தி என்று பெயர் வைப்பர்.பின், அணித்தலைவர், எதிரணியில் உள்ள ஒருவரின் கண்களை இறுக மூடி, தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார். (உதாரணத்துக்கு ரோஜாப்பூவே... ரோஜாப்பூவே... மெல்ல வந்து கிள்ளிட்டு போ...) ரோஜாப்பூ என பெயர் சூட்டப்பட்டவர் சத்தமில்லாமல் வந்து கண்னை மூடியுள்ளவரை, கிள்ளி விட்டு போய் அமர்ந்து விட வேண்டும். பின், அணித்தலைவர், 'எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க...' என்று ஆணையிடுவார். எல்லாரும் கீழே குனிந்து கொள்வார். அதன்பின், கண்களைத் திறந்து விடுவார் அணித்தலைவர். இப்போது கிள்ளு வாங்கியவர், ரோஜாப்பூ பெயர் உள்ளவர் யாரென கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், 'அவுட்!'மொத்த பிள்ளைகளில், பெரியவர்களாக இருக்கும் இருவர், அணித்தலைவராக தேர்வு செய்யப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !