உள்ளூர் செய்திகள்

பட்டாம்பூச்சிகளின் கதை! (20)

'ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் நடக்கிற அநியாயங்களை எழுதியிருந்தீர்கள் ஜெபா. இதெல்லாம் எங்களுக்குத் தெரியாததால், மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உங்களது எச்சரிப்புக்கு நன்றி...' என, எழுதியிருந்தீர்கள். இன்னும் சொல்லுங்கள் ஜெபா என்றும் கேட்டிருந்தீர்கள்.அன்பான வாசக நெஞ்சங்களே... இன்றைக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை சொல்ல போறேன்.என் நெருங்கிய தோழி ஷிமோலா, தஞ்சாவூரை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவள். நல்ல வசதியான குடும்பம் என்பதால், ஷிமோலாவை நன்கு படிக்க வைத்தனர். கிராமத்துப் பெண் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்; அல்ட்ரா மாடர்ன் ஆக இருப்பாள். ஸ்டைலாக இங்கிலீஷ் பேசுவாள்; ரொம்ப, ரொம்ப அழகாக இருப்பாள். எம்.என்.சி., கம்பெனியில் பணிபுரிகிறாள்.இவளுக்கு நேர் எதிர் இவளுடைய அப்பா; கறுப்பு; பக்கா கிராமத்து மனிதர். வேஷ்டி கட்டி பெல்ட் அணிந்து, எவ்வளவு பணமாக இருந்தாலும், மஞ்சள் பையில் வைத்துதான் எடுத்து வருவார். ஊரில் எக்கச்சக்க சொத்து உண்டு; ஆனால், வீட்டை ஆடம்பரப் பொருட்களால் நிறைத்து வைக்க மாட்டார்.என் தோழி ஷிமோ தன்னுடன் பணிபுரியும் ஹை-க்ளாஸ் பையன் ஒருவரை காதலித்தாள். பெண், மாடர்னாகவும், அழகாகவும் இருப்பதை பார்த்ததும், பையன் வீட்டார் உடனே சம்மதித்தனர்.'ஒரு நாள் பெண் வீட்டாரை, நம் வீட்டுக்கு வரச் சொல்...' என்றனர். அங்கு தான் ஆரம்பித்தது பிரச்னையே...மாப்பிள்ளை வீட்டார் தமிழை கடித்து துப்புவர்... ஆங்கிலம்... ஆங்கிலம் தான். பெண் வீட்டாரோ பக்கா கிராமத்தினர்.மாப்பிள்ளையை பார்க்க வந்த கிராமத்து ஜனங்களை கண்டு மிரண்டனர், மாப்பிள்ளை வீட்டார்.'நோ... நோ... இந்த சம்பந்தம் நமக்கு ஒத்து வராது; நமக்கு வேண்டாம்...' என்றனர்.ஆனால், மாப்பிள்ளையும், பெண்ணும் ரொம்ப, ரொம்ப, 'லவ்'வாக இருந்ததால், வேறு வழியில்லாமல் திருமணத்திற்கு சம்மதித்தனர்.திருமணம் சென்னையிலுள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அந்த ஓட்டலுக்கு வந்த பெண் வீட்டு ஜனங்கள் அடித்த லூட்டியில், மாப்பிள்ளை வீட்டாருக்கு அவமானம் தாங்க முடியவில்லை.மாப்பிள்ளை வீட்டு பக்கம், அத்தனை பேரும் சூட், ஷெர்வாணி, ஜோத்புரி உடையில் கலக்க, பெண் வீட்டார் பட்டு வேஷ்டி, ஜிப்பா, சட்டை சரசரக்க, 'நாமும் இங்கிலீஷ் பேசுவோமே...' என்ற நினைப்பில் பெண்ணின் தாத்தா, மாப்பிள்ளையின் கையை பிடித்து, 'குட்மினி மாப்பிள்ளை...' என்றாரே பார்க்கலாம்.ஒரு நிமிஷம் மாப்பிள்ளைக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் பக்கத்தில் நின்ற அவரது கிண்டல்கார நண்பன், 'எஸ் தாத்தா குட்மினி, குட்மினி...' என்று சொல்லி கலாய்க்க, அப்புறம் தான் புரிந்தது மாப்பிள்ளைக்கு தாத்தா, 'குட் ஈவினிங்' சொல்கிறார் என்பது.வெட்கத்தில் மாப்பிள்ளையின் கன்னம் சிவந்தது. அதற்குள் தாத்தா தன்னுடைய ஆங்கிலப் புலமையை வெளிக்காட்டுகிறேன் என்ற பெயரில், 'மாப்பிளே... நாங்க வரும் போது, 'குபே'ல வந்தோம்; சூப்பரோ சூப்பரு...' என்றார்.'என்னது குபே வா அப்படின்னா என்ன?' என கேட்டார் மாப்பிள்ளை.'என்ன மாப்ளே... இங்கிலிஷ்தான் பேசுவீங்கன்னு சொன்னாங்க. குபே டிரெயின் தெரியல!' என்றார் தாத்தா.நண்பர்கள் குழு வயிறு வலிக்க சிரித்தது...'தாத்தா... 'கூப்பே'ல வந்தேன்னு சொல்றாரு மேன்...' என சொல்லி சிரித்து கலாட்டா செய்ய, நம்ம ஹீரோ மனம் உடைந்து போனார்.அன்று முழுவதும பெண் வீட்டாரை நண்பர்கள் எல்லாம் கலாய்க்க, மாப்பிள்ளைக்கு, 'மூட் அவுட்' ஆகி விட்டது. முதன் முதலாக தன்னுடைய தவறை உணர ஆரம்பித்தான். நம்முடைய நண்பர்கள் எல்லாம் பணக்கார மேல்தட்டு பெண்களை மணந்திருக்கும் போது, நமக்கு ஏன் இப்படி ஒரு தலை எழுத்து. சிட்டியில் இல்லாத ஐஸ்வர்யா ராயா? எதற்காக இந்த கிராமத்து த்ரிஷாவை செலக்ட் செய்தோம் என யோசிக்க ஆரம்பித்தான்.அப்போது பெண்ணின் தம்பி கன்னங்கரேலென்ற நிறம், சரியாக இன்சர்ட் செய்யாத பாதி சட்டையை வெளியேயும், உள்ளேயும் விட்டும், முரட்டு பிரேஸ்லெட்... பாதி சட்டை பட்டன்களை போடாமல் திறந்து விட்டபடி, கலைந்த கேசம்... கேட்டால் ரஜினி ரசிகராம்... அவனோடு வந்த நாட்டு கும்பலை கண்டு அதிர்ந்து போனார் மாப்பிள்ளை.'என்னப்பா... இப்படி ஒரு பெரிய அடியாள் கூட்டத்தையே உன் மச்சான் வச்சிருக்கும் போது, உனக்கு கம்பெனிக்கு செக்யூரிட்டிகளே தேவையில்லை...' எனச் சொல்லி கலாய்த்தனர்.மெல்ல மாப்பிள்ளையின் மனது சஞ்சலப்பட ஆரம்பித்தது. மனக்கசப்புடன் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும். முதல் இரவு அன்று தன் மனைவியிடம் எடுத்த எடுப்பில், 'இங்க பாரு... உன் குடும்பத்தாரை இன்றோடு மறந்துடு... அவர்களை கண்டாலே எனக்கு பிடிக்கல. இது என்ன கர்மம்... உனக்காக நான் எல்லாத்தையும் சகிச்சிட்டேன். எத்தனை கேவலமாக நடந்துகிட்டாங்க தெரியுமா...' என்று சீறினான். இதையே அன்பாக ஷிமோலாவிடம் சொல்லியிருந்தால், அவள் புரிந்து கொண்டிருப்பாள்.கணவன், முதல் இரவில் தன்னை அன்போடு அரவணைத்து, ஆசையாக கொஞ்சுவான் என நினைத்து வந்தவளுக்கு, தன் இன, ஜன பந்துக்களை பற்றி கூறியதும், 'சுர்'ரென்று ஏறிக் கொண்டது. காரணம், கிராமத்தில் அவளது அப்பாவுக்கு இருக்கும் மரியாதை அப்படி. பெரிய மனிதர்கள், அரசியல்வாதிகள் கூட தன் தந்தையிடம் கைகட்டி மரியாதையுடன் பேசும் போது, தன் கணவர் இப்படி பேசியதும் ஆத்திரம் கொண்டாள்...'அது எப்படி நீங்க அவ்வளவு மட்டமாக சொல்வீங்க. கிராமத்து மக்கள் என்றால் அவ்வளவு கேவலமா... ஹைகிளாஸ் மக்கள்கிட்ட தான் எல்லாம் அசிங்கங்களும் இருக்கு, எங்க ஊர் மக்கள் உண்மையான அன்புள்ளவர்கள். உங்களை திருமணம் செய்து கொண்டதற்காக என் உற்றார், உறவினர்களை நான் மறக்க முடியாது...' என்றாள்.இருவருக்கும் பயங்கரமான வாக்குவாதம். எல்லாம், 'ஈகோ' பிரச்னை தான். கணவனது நிலமையை புரிந்து கொள்ளாமல், தானும் சம்பாதிக்கும் திமிரில், கிராமத்து பணக்காரியான தான், ஒன்றும் மட்டமான குடும்பத்தைச் சேர்ந்தவள் இல்லை என்ற ஆதங்கத்தில், எகிறினாள் ஷிமோ.விடிந்ததும் இரவு நேரச் சண்டைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, இருவரும் ஒன்றும் தெரியாதது போல் காட்டிக் கொள்ள ஆரம்பித்தனர்.அதற்குள் ஊருக்கு போக வேண்டிய உறவினர்கள், மாப்பிள்ளையை வந்து கட்டி அணைத்தனர். குளித்துவிட்டு வந்த உறவினர் ஒருவர், 'என் ஜபலை காணோம், ஜபலை காணோம்...' என கேட்க...'ஜபல்லா அது என்ன?' என்று புரியாமல் மாப்பிள்ளை வீட்டார் வழித்திருக்கிறனர். ஹீரோயினுக்கு அவமானம் தாங்கல. நைசாக சமாளித்து, டவலை எடுத்து வந்து தந்திருக்கிறாள்.டிபன் சாப்பிடச் சொல்லியிருக்கின்றனர்.பெண்ணின் தாத்தா சொல்லியிருக்கார், 'ட்ரெயன்ல போறதால டிபன் வேண்டாம்; லைட்டா, 'ஸ்னேக்' இருந்தா கொடுங்க... அதுபோதும்!' என்று.அவர்களை வீட்டு குட்டீஸ் எல்லாம், 'தாத்தா எங்க வீட்ல பாம்பு எல்லாம் வளர்ப்பது இல்ல... உங்க ஊர்ல தினமும் பாம்பு தான் சாப்பிடுவீங்களோ?' என்று சொல்லி கலாய்க்க... எல்லாரும், 'குபீரென்று' சிரித்திருக்கின்றனர்.'என்னது... மாப்ள வீட்ல எல்லாரும் இங்கிலீஷ் பேச்சுதான் பேசுவீங்கன்னு சொன்னாங்க. நான் பேசுற இங்கிலீசு யாருக்கும் புரியல. ஜிம்பளா பேசினாலும் புரியல... என்ன படிப்பு படிச்சாகளோ...' என்று சொல்லியிருக்கிறார்.'தாத்ஸ்... உங்க இங்கிலிஷ் ரியலி சூப்பர். அதிலும் உங்களோட இங்கிலிஷ் ஆக்சென்ட் இருக்கே ஏ கிளாஸ்!' என்று சொல்லி சிரித்து விட்டு அண்ணியை ஒரு நோட்டமிட்டுள்ளான் சின்ன மச்சினன்.அவளோ ஓடிப் போய், 'படாரெ'ன்று ரூமை சாத்திக் கொண்டாள்.மாப்பிள்ளையின் கையை பிடித்துக் கொண்டு, 'மாப்ள ... சின்ன வயசுலயே நான், 'விண்டோ' ஆயிட்டேன். அதாங்க, 'விடோ!' என் பேத்தியை ரொம்ப செல்லம் கொடுத்து படிக்க வச்சோம். நீங்க தான் அவள ரொம்ப பத்திரமா பார்க்கணும். என் மகனுக்கு கொஞ்சம் ஆட்டுப் பலாப்பழம் இருக்கு... அதனால், நீங்க தான் மனம் கலங்காம என் பேத்தியை பாத்துக்கணும்...' என்று உருகி இருக்கிறார் தாத்ஸ்.ஆட்டுப் பலாப்பழம் என்று ஒரு நோயா? அது என்ன என்று தெரியாமல் மாப்பிள்ளை விழிக்க, வாசகர்களே நீங்களும் விழிக்கிறீர்கள் தானே. அதாங்க ஹார்ட் ப்ராப்ளம். ஒரு வழியாக ஊருக்குப் புறப்பட்டனர்.அதற்குள் மாமனார் வந்து மாப்பிள்ளையின் கையை பிடித்துக் கொண்டு, 'என் மகனுக்கு இன்னும் மிசா வரல. வந்தவுடன் வெளிநாடு போயிடுவான். எனக்கு இவ ஒரே பொண்ணு, இவ என்னோட உயிர். நீங்க தான்...' என்று சொல்லி அழுதிருக்கிறார்.'மிசா மிசா' என்று தன் மாமனார் சொன்னதன் அர்த்தம், 'விசா' என்பதை புரிந்து, மனதை தேற்றிக் கொண்டனர்; ஒரு வழியாக விடைபெற்றனர்.'ஏண்டா... உனக்கு இதெல்லாம் தேவையாடா... நம்ப ஸ்டேட்டசுக்கு எத்தனை பெரிய இடத்து சம்பந்தம் எல்லாம், 'க்யூ'வில் நிற்க... ஜபல், விண்டோ, குட்மினி... என்னடா இதெல்லாம். எங்க பேச்சை கேட்டியா? எப்படியோ நீயே கட்டிக்கிட்டு சாவு. இனிமேல் நீயாச்சு... உன்னோட விண்டோ குடும்பமாச்சு... எங்களையும் சேர்த்து அவமானப்படுத்தாதே...' இப்படி, முழு குடும்பமும் எதிர்க்க, உடைந்து போய் விட்டான் மாப்பிள்ளை.கொஞ்சமும் தங்களுடைய கவுரத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று நிக்கிறாள் ஷிமோலா.மாப்பிள்ளையோ, 'இனி எந்த விழாவுக்கும், உ<ங்கள் மக்களை கூப்பிடாதே...' என்கிறான்.'அப்படின்னா, உங்கள் உறவினர்களை மட்டும் நான் மதிக்கணுமா? நானும் மதிக்க மாட்டேன்...' என, சண்டை போடுகிறாள் ஷிமோ. இதனால் கெட்டுப் போனது, இவர்களது சந்தோஷம் தான்.இது ஒரு பிரச்னையே இல்லை பட்டாம்பூச்சிகளே... ஆங்கிலம் தெரியாதது ஒன்றும் கொலை குற்றம் இல்லை. அதற்காக, நானும் பேசுகிறேன் என்ற பெயரில் தப்பும், தவறுமாக பேசி, உங்கள் வாரிசுகளின் மானத்தை வாங்க வேண்டாம். கிராமத்து மனிதர்கள் என்றாலு<ம் வெள்ளை வேட்டி, சட்டையில் கவுரவமான <உங்களது தோற்றத்திற்கே மரியாதை உண்டு.'வாங்க... வணக்கம்!' என்று சொல்லி, உங்களது மொழியில் பேசினாலே போதும்; அழகாக இருக்கும்.அதே சமயம் ஷிமோவும், தன் கணவரின் நிலையை புரிந்து, 'சரிங்க... இனி நம் கவுரவம் பாதிக்காமல் பார்த்துக்குறேன்...' என்று சொல்லி அன்பாக பேசி... கணவரை தன் ஊருக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள மனிதர்களின் உண்மையான அன்பை புரிய வைத்தால், மாப்பிள்ளையும் புரிந்து கொள்ளப் போகிறான்.அங்கே தன் மாமனாருக்கு இருக்கும் மதிப்பும், மரியாதையும் பார்த்தாலே புரிந்து விடும். அதுமட்டுமல்ல... கவுரவம், ஸ்டேட்டஸ் என்று இருப்பவர்கள், தங்கள் மனதை, 'ரிலாக்ஸ்' செய்து கொள்ள, கிராமத்து சூழ்நிலை மிகவும் உதவும். தற்காலத்தில் கிராமத்து மனிதர்கள், தங்கள் வாரிசுகளை நன்கு படிக்க வைத்து, இன்றைய உலகிற்கு ஏற்றவாறு வளர்த்து விடுகின்றனர்... இவர்கள் இப்படியே இருப்பதால், இந்தப் பிரச்னை ஆங்காங்கே தலைதூக்குகிறது. மேற்கூறிய ஆலோசனைகளை பின்பற்றினால், எந்த பிரச்னையும் இல்லை... சந்தோஷமாக வாழ்க்கையை ஓட்டலாம். — தொடரும்.ஜெபராணி ஐசக்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !