காலண்டரின் கதை!
எகிப்தியர்கள் தான் காலண்டர் முறையை, முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள்* ஒவ்வொரு மாதமும், 1ம் தேதியன்று, அரசு ஊழியர் ஒருவர், தெருத் தெருவாக வந்து, அன்று மாதப் பிறப்பு நாள் என்று அறிவித்த வழக்கம், ரோமாபுரியில் இருந்தது. இந்த வழக்கத்தை, 'கனோர்' என அழைத்தனர். இதுவே, நாளடைவில் காலண்டர் என்றானது* கடந்த, 2012ம் ஆண்டு காலண்டர் வைத்திருக்கிறீர்களா... அப்படியெனில், 2040ம் ஆண்டு காலண்டர் வாங்க வேண்டாம். 2040ல், இதே காலண்டரை பயன்படுத்தலாம். கிழமை, மாதம் எல்லாமே ஒன்று தான்* தற்போது, ஆங்கில ஆண்டின் இரண்டாவது மாதமாக விளங்கும், பிப்ரவரி, கி.மு., 713ம் ஆண்டு, ரோமானிய காலண்டரின், 12வது மாதமாக இடம் பெற்றிருந்தது. பிப்ரவரி மாதத்தை அறிமுகப்படுத்தியவர், நியூமா என்ற ரோமானிய சக்கரவர்த்தி. கி.மு., 450ம் ஆண்டில், பிப்ரவரி மாதம் முன்னேறி, இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொண்டது* புத்தாண்டு துவங்கும் முன், நள்ளிரவில், 12 முறை மணி அடிக்கும். அப்போது, 12 திராட்சை பழம் சாப்பிடுகின்றனர், ஸ்பெயின் நாட்டு மக்கள். அப்படி சாப்பிடுபவர்களுடைய வீட்டில், அந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக் காற்று வீசும் என்பது, அவர்களுடைய நம்பிக்கை* வாரத்துக்கு எட்டு நாட்கள் என்ற கணக்கை, அந்நாளைய ரோமானியர்கள் கடைப்பிடித்து வந்தனர்* டிசம்பர், 31 அன்று, அதாவது, ஆண்டின் கடைசி நாளில் மீன் சாப்பிட்டால், அடுத்து வரும் புத்தாண்டு, அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கை, ஜெர்மனியில் இன்றும் நிலவுகிறது* உலகில், பொதுவாக ஞாயிற்றுக்கிழமை தான், வார விடுமுறை. ஆனால், தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீசில் திங்கட் கிழமையும், மேற்கு ஆசிய நாடான சிரியாவில் புதன் கிழமையும், மத்திய கிழக்கு நாடான, எகிப்தில் வியாழக் கிழமையும், ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளிக் கிழமையும், மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் சனிக்கிழமையும் வார விடுமுறை நாட்கள். எம். பிரபுசங்கர்