இது இன்னொரு வாழ்க்கை!
பகல் நேர பேருந்து பயணம், இம்சையாய் இருந்தது, கலியமூர்த்திக்கு! மனதின் கொதிப்பை விட, புறவெளியின் கொதிப்பு வெறுப்பாய், எரிச்சலூட்டுவதாய் இருந்தது. பஸ் புறப்பட சில நிமிடங்களே இருந்தன. பஸ்சில் ஏறிய இளம் பெண் ஒருத்தி, தான் முன்பதிவு செய்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் கலியமூர்த்தி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, நடத்துனரிடம் சொல்ல, அவர், பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த தம்பதியைப் பிரித்து, இவர் அருகில் உட்கார வைத்து, அந்தப் பெண்ணை மறுபுறமாய் அமர வைத்தார்.பக்கத்தில் வந்து அமர்ந்த அந்த நபர், கொஞ்சம், பருமனாக இருந்தார். கூடவே, அவருடைய பத்து வயது மகனை, மடி மீது உட்கார வைத்ததும், கலியமூர்த்திக்கு, 'சுள்' என்று வந்தது.துறுதுறுவென்றிருந்த அந்த பயலோ, நெளியவும், மடங்கவும் என்று, தன் பாதி உடம்பை, கலியமூர்த்தியின் மீது கிடத்தியும், அவர் கால் வைக்கும் இடத்தில் நின்று, ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தான்.'பஸ் பயணம்ன்னாலே இம்சை தான்...' என்று முணுமுணுத்து, கண்களை மூடி இருக்கையில் சரிந்தார். மனம் இனம் புரியாத தவிப்பில், இலக்கில்லாத இந்த பயணத்தின் மீது எரிச்சல் வந்தது. நேற்றைய நிகழ்வுகள், கண் முன் படமாய் விரிந்தன...வீடியோ காலிங்கில் தெரிந்த, அமெரிக்காவில் உள்ள மகனுடைய வீடும், நவீன சோபாவும், அவனுடைய பொருளாதார வளர்ச்சியை காட்டியது.'சந்துரு... உன்னையும், புள்ளைகளையும் பாக்க உங்கம்மா ரொம்ப ஆசையா இருக்கா... இப்பவும், நீ வர நேரமில்லன்னு சொல்றியேப்பா... இந்த தனிமை எங்கள ரெம்பவும் வாட்டுது...' என்றார் வருத்தமாக!'ரெண்டு பேர் இருக்கிறது எப்படிப்பா தனிமை ஆகும்... கஷ்டப்பட்டு டாலரா அனுப்புறோம்; சகல வசதியோட வீடு, வாசல் இருக்கு; முதுமைய, 'என்ஜாய்' செய்ய வேண்டியது தானே...' என்றான் அலட்சியமாக!'முதுமை, 'என்ஜாய்' செய்றது இல்ல சந்துரு... வாழ்க்கைக்கான மிச்சத் தேடல்; என் குழந்தை, பேரப்பிள்ளைன்னு வாழணும்ங்கிற இறுதி நாட்களுடைய ஏக்கம்...''எதுவுமே இறுதி இல்லப்பா; முடிஞ்சு போறது, இன்னொரு துவக்கத்துக்கான ஆரம்பம்...''அது எல்லாத்துக்கும் பொருந்தும்; மரணத்திற்கு பொருந்தாது...'அமைதியாக இருந்தான் சந்துரு. பேரப் பிள்ளைகள், கேமரா முன் நின்று, ஹாய் சொல்லின; மருமகள், குனிந்து நமஸ்கரித்து போனாள்.இவருடைய மவுனமும், அமைதியான முகமும், அவனிடம் மிச்சமிருந்த பந்த பாசத்தை தூண்டி விட்டதோ என்னவோ, குழைவாய் கேட்டான்...'வருத்தப்படுறீங்களாப்பா, யோசிச்சு பாருங்க... நான் களிமண் மாதிரி பிறந்தேன்; என்னை கனவுகளோடு உருவாக்கினது நீங்க; உயரம் தான் உலகத்துடைய பிரதானம்ன்னு கத்து குடுத்த நீங்க, இப்ப, நான் உயரத்தை எட்டும்போது சஞ்சலப்படலாமா...''சந்துரு... ஒரு தகப்பனுக்கு, தன் மகனுடைய உயரம், சஞ்சலமா இருக்கும்ன்னா நினைக்கிற... இல்லப்பா... நீங்க உயர உயர எங்க கண்ணை விட்டு வெதுதூரம் போயிடுறீங்க. ஒரு கட்டத்துக்கு பின், அந்த பிரிவை தாங்க முடியல. அதீதமான சவுகரியங்கள் கூட, கொஞ்ச நாள்ல அலுத்து போயிடுது. அந்த ஏக்கத்துல தான், உன்கிட்ட கேட்டேன்... உங்கம்மாவோ, இதெல்லாம் உனக்கு எடுத்து சொல்லத் தெரியாம, கோவிலே கதின்னு கிடக்குறா... இதெல்லாம் உனக்குப் புரியாது...''எனக்கான பொறுப்புகளும், கடமையும் புரியுது. ஆனா, நான் கடமைக்காக மட்டும் தான் படைக்கப்பட்டு இருக்கேனா... என் வாழ்க்கைய முழுமை செய்துக்க, இயங்கிட்டு இருக்கேன்; ஆனா, நீங்களும், அம்மாவும் உங்களுக்கு மகனா இருக்கிறது மட்டும் தான் என் வேலைன்னு சொல்றீங்க...'சுரீரென நிமிர்ந்தார்; கண்கள் கலங்கியது. நல்லவேளை, இந்த வார்த்தையை கேட்க, மனைவி அருகில் இல்லை. 'லேப் - டாப்'பை அணைத்து, வெளியே வந்தார்.'மார்பிலும், தோளிலும் தூக்கி வளர்த்த பிள்ளையே, 'உங்களுக்கு பிள்ளையாக இருப்பது என் வேலை இல்லை...' என்று சொன்ன பின், வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது... ஒரு முறை, ஊருக்குப் போய் உறவுகளை எல்லாம் பார்த்து வந்து, ஒரேடியாக போய் சேர்ந்து விட வேண்டியது தான்...' என்ற முடிவுடன் தான், ஊருக்கு கிளம்பி இருந்தார்.''தாத்தா தூங்குறாங்க... சும்மா அவுகள இடிச்சுட்டு இருக்கக் கூடாது...'' என்ற பக்கத்து சீட் ஆசாமியின் கட்டையான குரல் கேட்டு கண் விழித்தார். ''சார் தப்பா நினைக்காதீங்க... பையன் ரெட்டை சுழிக்காரன்; பத்து நிமிஷம் ஒரு இடத்துல உட்கார வைக்க முடியாது... உங்கள ரொம்ப தொந்தரவு செய்றான்னு நினைக்கிறேன்...''பதில் பேசாமல் சிரித்தார், கலியமூர்த்தி. அந்த சிரிப்பை, நட்புக்கான அச்சாரமாக எடுத்துக் கொண்டான்.''நமக்கு பழங்காநத்தம்... விவசாயம் தான் தொழிலு; தென்னந்தோப்பும் இருக்கு. பெருசா விளைச்சல் இல்லாட்டியும், வீம்புக்காக விவசாயத்தை பிடிச்சுக்கிட்டு, காலத்தை ஓட்டுறோம்...'' என்றவன், ''சாருக்கு மதுரையில எங்க,'' என்றான்.''சோழவந்தான்... அக்கா, தம்பி எல்லாரும் அங்க தான் இருக்காங்க. படிச்சு, நான் வெளியில வந்துட்டேன். பேங்க் மேனேஜர் உத்யோகம்! 32 வருஷம் ஓடிப் போச்சு... ஒரே பையன்; அமெரிக்காவுல இருக்கான்...'' என்றார். உடனே, தன் பையனிடம், ''பாரு... சாரோட பையன் படிச்சு, பெரிய உத்யோகத்துல, வெளிநாட்டுல இருக்காரு. நீயெல்லாம் அங்க போக வேணாமா...''என்று, மகனின் தலையை அன்பாய் நீவி சொன்ன போது, கலியமூர்த்திக்கு கோபம் வந்தது. தன்னை மறந்து, ''இப்படித் தான் நானும் சொல்லி வளத்தேன்; கடைசியில, 'உங்களுக்கு புள்ளையா இருக்கறது மட்டும் தான், என்னோட வேலையா'ன்னு கேட்டுட்டான்; மனசு ஆற மாட்டேங்குது. இதுகள தூக்கி வளர்க்க கூடாது; அதுதான் நாம செய்யுற தப்பு...'' என்றவர், சட்டென்று, தன் தவறை உணர்ந்து, நாக்கை கடித்தார்.அவரையே சிறிது நேரம் உற்றுப் பார்த்த பக்கத்து சீட்டுக்காரன், அவர் கண்களில் தெரிந்த விரக்தி, வெறுமையை கண்டு, 'வருத்தப்படாதீங்கய்யா... எல்லா கஷ்டமும் ஒருநாள் நம்மை கடந்து போயிடும்...'' என்றான், வேதாந்தி போலே!பரிச்சயம் இல்லாதவன் தான்; ஆனால், ஏதோ பந்தமிருப்பவனை போல், ஆறுதலாக பேசியது, இந்த சூழலுக்கு தேவையானதாய் இருந்தது.''உங்களுக்கு புரியாது தம்பி... ஏன்னா, நீங்க இன்னும் அந்த வயச எட்டல. இதேமாதிரி தான் நானும், என் மகனை மடியிலயும், தோள்லயும் தூக்கி வளர்த்தேன். நாம வளர்க்கிற புள்ள, நாளைக்கு நம்மளவே தூரப்படுத்தி பேசினா, நம்ம வாழ்க்கைக்கு என்ன பாதுகாப்பு இருக்கு சொல்லுங்க...'' என்றார்.''சார்... நீங்க நிறைய படிச்சவங்க; உங்களுக்கு நான் என்ன சொல்றது... இருந்தாலும், என்னைப் பொறுத்தவர, பிள்ளைங்க மீது எதிர்பார்ப்பை வளர்த்துக்கிறது தப்புன்னு தான் சொல்வேன். அதுக்காக, உலகத்துல இருக்குற எல்லா மகனுகளும் சுயநலவாதிக; பெத்தவங்கள பாத்துக்கிறது இல்லன்னு சொல்ல வரல. நாம தான், நம்ம புள்ளைங்கள சுத்தி, நாம பின்னியிருக்கிற பாச வலையில இருந்து நம்மை விடிவிச்சுக்கணும். நாம வளர்ந்ததும், நம்ம அப்பா, அம்மாவை விட்டு, நம்மள விடுவிச்சுக்கும் போது, இதையெல்லாம் யோசிச்சமா என்ன!''தன் குஞ்சுகள சிறகுகளுக்குள்ள வச்சு காப்பாத்துற பறவைங்க தான், குஞ்சுக்கு றெக்க முளைச்சதும், அதுங்கள கூட்டைவிட்டு துரத்துதுங்க... அதுக்காக, அதுகளுக்கு பாசம் இல்லன்னு அர்த்தமா என்ன... வாழ்க்கையில், ஒவ்வொரு கட்டத்துலயும் நமக்கு ஏதாவது ஒரு பிடிமானம் தேவைப்படுது; அந்த பிடிமானத்தை பிடிச்சு, அடுத்த கட்டத்துக்கு போன பின்பும், அந்த பிடிமானத்து மேல அபிமானம் வைக்கிறது தப்பிலீங்களா...'' என்றான்.'சொளேர்' என்று நிமிர்ந்து பார்த்தார். அவன் வார்த்தைகளில் இருந்த விஷய ஞானம், அவன் தோற்றத்திற்கு சம்பந்தமில்லாததாய் இருந்தது.''குழந்தைங்க நம்ம மூலமா வந்தவங்க; நமக்காக வந்தவங்க இல்ல. புள்ளைங்க மேல நம்பிக்கை வைக்கலாம்; ஆனா, அவங்கள நம்பியே இருக்கக்கூடாது...''கண்களை விரித்து, 'என்ன சொல்ல வர்றே...' என்பது போல் பார்த்தார், கலியமூர்த்தி.''சார்... நமக்கு நடுவே, ஒரு பத்து மணி நேர பயணம் தான்... ஆனா, ஏதோ நம்பளை கட்டி வைக்கிறதா நீங்க நினைக்கிறீங்களான்னு எனக்குத் தெரியாது; ஆனா, நான் நினைக்கிறேன். அந்த நினைப்புல சொல்றேன்... பிள்ளைங்களும், நம்மோட வாழ்க்கையில பயணம் செய்ற பயணிங்க தான். மத்தவங்களுக்கும், அவங்களுக்கும் உள்ள வித்தியாசம், அவங்க நம்ம சொந்த ரத்தம்... அவ்வளவு தான்.''அவங்கள மட்டுமே நம்மோட உலகம்ன்னு நம்பிட்டு இருக்கிறத விட்டுட்டு, நமக்கான உலகத்துல, மத்தவங்களுக்கும் இடம் கொடுத்து பாருங்க... எந்த ஏமாற்றமும் இருக்காது. யாரையும் இழுத்து பிடிச்சு வச்சுக்கிறத விட்டுட்டு, நாம, நம்ம வேலைய பாத்தா, எல்லாம் தன்னால தேடி வரும்...'' என்று சொல்லி சிரித்தான். சிலிர்ப்பாய் இருந்தது கலியமூர்த்திக்கு!அப்படியே, கண்களை மூடி இருக்கையில் சரிந்தவர், உறங்கி போனார். மதுரைக்கு போய் வந்ததில் இருந்து, கணவருடைய போக்கில் தென்பட்ட மாற்றத்தை அதிசயமாக பார்த்தாள், கலியமூர்த்தியின் மனைவி.'இது வயதான பறவைகளின் சரணாலயம்' என்று வாசலில், 'போர்டு' மாட்டினார். ஹாலில் டேபிள் போட்டு, நோட்டீஸ் மற்றும் வவுச்சருடன் அமர்ந்தார். தினமும் பலர் வந்து போக ஆரம்பித்தனர்.''என்ன தான் செய்றீங்க... ஒண்ணும் புரியல...'' என்ற மனைவியை, புன்னகையுடன் பார்த்து, ''மாடி போர்ஷனை காலி செய்து, 'ஓல்டு ஏஜ் ஹோம்' ஆரம்பிக்க போறேன். பிள்ளைகளால் ஒதுக்கப்பட்ட பெரியவங்க எல்லாரும் இங்க வந்து சேரலாம். மாசம் ஐயாயிரம் ரூபாய் முதல் அவங்க விருப்பப்பட்ட தொகைய தரலாம். அந்த தொகைய கொண்டு, ஏழை முதியவங்கள இலவசமா கவனிச்சுக்கலாம்.''அது மட்டுமல்ல, வருஷத்துக்கு, ஏதாவது கோவில் இருக்குற ஊருக்கு, டூர் கூட்டிட்டு போற, 'ஸ்கீம்' கூட இருக்கு. விளையாட்டா தான் பேப்பர்ல விளம்பரம் குடுத்தேன்; இதோட, நாலு பேர் போன் செய்துட்டாங்க. ஏதோ புதுசா வேலை செய்யப் போற நம்பிக்கை பிறந்திருக்கு...''''ஐயாவோட புது அவதாரம் நல்லாத்தான் இருக்கு; ஆனா, இந்த ஐயாயிரம் தந்தாத்தான் சேர்த்துப்பேன்னு சொல்றது மட்டும், கொஞ்சம் இடிக்குது...'' என்றாள் கேலியாக!''அப்படியில்ல... பத்து பேர் சேர்ந்தாலும் சமைக்க ஆள் போடணும்; அவங்களுக்கு தேவையானதையெல்லாம் செய்யணும். அதுக்கெல்லாம் நம்மகிட்ட பொருளாதாரம் பத்தாது. நான், லாபம் சம்பாதிக்க, இந்த வேலைய செய்யல... நம்மளைப் போல வயசானவங்களும் இந்த உலகத்துல வாழறதுக்கு அர்த்தம் இருக்குன்னு காட்டத்தான், இந்த முயற்சிய செய்றேன்,'' என்றார்.''நம்மால் முடியுமாங்க...''''முடியும்ன்னு நம்புறேன்; ஒருவேளை, என்னால முடியாமப் போனா, இங்க வர்றவங்க யாராவது அதை எடுத்து நடத்துவாங்க...''நாட்கள் வாரங்களாகி, வாரங்கள், மாதங்களாக உருண்டோடின.அப்பாவிடம் இருந்து போன் காலே இல்லை. 'தன் வார்த்தை அவரை இத்தனை விரக்தியடைய வைத்து விட்டதா...' என்ற குற்ற உணர்ச்சி உண்டானது, சந்துருவுக்கு!வீடியோ காலீங் செய்தான். தாமதிக்காமல் எடுத்தார், கலியமூர்த்தி. வீட்டில் கேட்ட பேச்சுக்குரலும், நடமாட்டங்களையும் உணர்ந்து, ''என்னாச்சுப்பா... வீட்டில் நிறைய பேச்சுக் குரல் கேட்குது; மதுரையில இருந்த நம்ம சொந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்களா?'' என்று கேட்டான்.''அப்படிக்கூட வச்சுக்கலாம்... இவங்களும் நமக்கு சொந்தங்கள் தான்; அடுத்த நொடி வாழ்க்கைக்கு பாதுகாப்பையும், நம்பிக்கையும் யார் ஏற்படுத்தி தராங்களோ, அவங்க தான் நமக்கு உறவுன்னு நீ தான் எனக்கு கத்துக்குடுத்ததே... அதனால தான் அடுத்த வேளை வாழ்க்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக்க, வீட்டில், 'ஓல்டு ஏஜ் ஹோம்' ஆரம்பிச்சுட்டேன்,'' என்றார், சிரித்தபடி!மறுமுனையில் பதறிப் போனான் சந்துரு.''என்னப்பா உளறல் இது... சொந்த வீடுப்பா அது... இன்னைக்கு தேதிக்கு, ரெண்டு கோடி ரூபாய் பெருமானமுள்ள வீடு. நீங்க பாட்டுக்கு டிரஸ்ட், அது, இதுன்னு எழுதி வச்சுட்டு, பின்னாடி கஷ்டப்படுத்தாதீங்க. முதல்ல, அம்மாவ கூப்பிடுங்க, நான் பேசணும்...''''சாரி சந்துரு... ஹோம்ல இருக்குற பிரண்ட்ஸ் கூட சேர்ந்து, தாயம் விளையாடிட்டு இருக்கா, உங்கம்மா. இப்ப, எங்களுக்கும் உனக்கு அப்பா, அம்மாவா இருந்துட்டு, உன்னை எதிர்பார்த்து காத்திட்டு இருக்கிறது மட்டும் வேலை இல்ல; உன்னை கஷ்டப்படுத்த இந்த வார்த்தைய சொல்லல... ஆனா, நீ தான், வாழ்க்கையில எனக்கு கடினமான விஷயத்தை, லேசா புரிய வச்ச... அதுக்கு, உனக்கு நன்றி சொல்லணும்...'' என்ற அப்பாவை, அன்பு மேவ பார்த்தான், சந்துரு. அந்த பார்வை, அவர்களுக்குள் இருந்த இடைவெளியை தகர்த்தது.- எஸ்.ஜாஸ்மின்சொந்த ஊர்: பழனிகல்வித்தகுதி: எம்.பி.ஏ., தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்துத் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றாலும், முதல் பரிசு பெறுவதே லட்சியம் என்கிறார்.