இது உங்கள் இடம்
மணப்பெண் கேட்ட கேள்வி!சமீபத்தில், என் பெற்றோருடன் பெண் பார்க்க சென்றிருந்தேன். எனக்கு பெண்ணை பிடித்து போக, மற்ற விஷயங்களைப் பேசி விட்டு, திருப்தியுடன் ஊர் திரும்பினோம். மறுநாள் பெண் வீட்டாரிடம் இருந்து, திருமணத்தில் விருப்பமில்லை எனும் தகவல் வந்தது. திடீரென்று இப்படிச் சொல்லக் காரணம் என்னவென்று அறிந்து கொள்ள, பெண் வீட்டுக்கு சென்றேன்.'வரதட்சணை விஷயத்தில், நீங்கள் மிகவும் கறாராக நடந்து கொண்டீர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, உங்களிடம் சிறிதும் இல்லை. நீங்கள் கேட்பதற்கு எல்லாம், இப்போது, நாங்கள் சரி சொல்லி, பிறகு எங்களால் சொல்லியபடி செய்ய முடியாமல் போனால், அவமானமாகி விடும். எனவே, உங்களுக்கு பெண் தர இயலாது...' என்று கூறினர் பெண் வீட்டார். உடனே, நான், 'வரதட்சணை, சீர் எதுவும் செய்ய வேண்டாம்...' என்று கூறினேன். அதற்கு அந்த பெண், 'இதைத் தாங்கள் முன்பே சொல்லி இருக்கலாமே... பெற்றோர் எதிரில் பேசாமல் இருந்து விட்டு, இப்போது சொல்வதால் பயன் ஏதுமில்லை. மேலும், திருமணத்துக்கு முன் நாங்கள் சொல்வதற்கெல்லாம் சரி என்று சொல்லி விட்டு, பின், எங்களை பழிவாங்க நினைத்தால் என்ன செய்ய முடியும்? பெண்ணை பெற்றவர்கள், தங்கள் மகளுக்கு, அவர்களால் முடிந்த அளவுக்கு செய்யாமலா விட்டு விடுவர். இதைப் புரிந்து கொள்ளாமல் பேரம் பேசி விட்டீர்களே...' என்று கூறினார். அப்படியே ஒரு கணம், ஸ்தம்பித்து நின்று விட்டேன். எனவே, இளைஞர்களே... வாழ்க்கை துணை தேடும் விஷயத்தில், சற்று சுயமாக சிந்திப்பது நல்லது.— கே.கார்த்திக், சென்னை.அப்பாவிப் பெண்ணுக்கு கிடைக்க அவப்பெயர்!என் உறவினர் வசிக்கும் தெருவில், பார்வை இழந்த வாலிபர் ஒருவர் இருக்கிறார். அவரின் எதிர் வீட்டில் திருமணம் ஆகாத பெண் ஒருவரும் இருக்கிறார். ஒருநாள், ரோட்டை கடக்க, அந்த வாலிபர் தடுமாறி கொண்டிருந்திருக்கிறார். எதேச்சையாக, இதைக் கண்ட அப்பெண், அவ்வாலிபர் சாலையை கடக்க, உதவி செய்திருக்கிறார். இதைப் பார்த்த அத்தெருவில் உள்ள இரு அம்மணிகள், 'அந்தப் பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. அதனால் தான், இவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை...' என்று சத்தமாக பேசியதோடு அல்லாமல், தெரு முழுவதும், இவ்வதந்தியை பரப்பி விட்டனர். சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல், தெருவே அப்பெண்ணை பற்றி, இப்போது, 'கிசுகிசு'க்கிறது. இப்போது, அப்பெண் எந்த நேரமும் அழுது கொண்டே இருக்கிறாள். பார்வை இழந்த ஒருவருக்கு உதவ முடியாவிட்டாலும், உதவும் மனப்பான்மை உள்ளவர்களை, அவதூறாக பேசாமல் இருக்கலாமே!— ஆ.செல்வக்குமார், உடுமலைப்பேட்டை.அமிதாப்பச்சன் தான் கிடைத்தார்!தனியார் அலுவலகம் ஒன்றில், பணிபுரியும் பெண் நான். பணி முடிந்து, பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பஸ்சில், கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் சென்று கொண்டிருக்கையில், திடீரென்று, 'ஏம்மா, என்னைய இடிச்சுக்கிட்டே வர்றே...' என்று ஒரு ஆண் குரல் கேட்கவே, ஆச்சரியப்பட்டு, குரல் வந்த திசையை நோக்கி, பார்வையை திருப்பினேன். கூட்ட நெரிசலில் ஒரு ஆண், தன் அருகில் நின்றிருந்த பெண்ணை திட்டிக் கொண்டிருந்தார். தினமும், பெண்கள் தான், ஆண்களை திட்டி பார்த்திருக்கிறேன். இது வியப்பை ஏற்படுத்தியது. மேலும், அந்த நபர், 'என்னால இதுக்கு மேல உன் இடியை, தாங்க முடியாதுப்பா...' என சொல்லி, அடுத்து வந்த பஸ் நிறுத்தத்தில், இறங்கி சென்று விட்டார். அனைவரின் கவனமும், அந்த பெண் மீது, திரும்ப, சற்றே கலவரமடைந்திருந்த அந்த பெண், 'பெரிய அமிதாப் பச்சன்னு நினைப்பு...' என்றார். உடனே பின்னால் இருந்து ஒரு குரல், 'ஏம்மா உனக்கு தமிழ் நடிகர்களே கெடைக்கலயா... இந்திக்கு போயிட்ட!' என்றதும், பஸ்சே, சிரிப்பால் குலுங்கியது. அனைவரின் சிரிப்பும் அடங்க வெகு நேரமானது. — சுபா தியாகராஜன், திருவொற்றியூர்.