இது உங்கள் இடம்!
வெளிநாட்டு மாப்பிள்ளையா... உஷார்!சமீபகாலமாக, நம் அண்டை மாநிலத்தில், ஒரு நூதன மோசடி நடந்து வருவதாக, நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இம்மோசடி பிற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இங்கே வந்து தங்கி படிக்கும் மாணவர்கள் சிலர், பெண் துணை வேண்டும் என்பதற்காக, இங்குள்ள ஏழைப் பெண்களை, போலியாக திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்கு, சில இடை தரகர்கள் உதவுகின்றனர். ஏழை பெற்றோரும், மகளுக்கு வாழ்வு கிடைத்தால் போதும் என்று இவ்வலையில் விழுகின்றனர்.இந்த மாணவர்கள், படிப்பு முடியும் வரை அவர்களுடன் வாழ்ந்துவிட்டு, பின், வெளிநாடுகளுக்கு பறந்து விடுவதால், இத்திருமணங்களை உண்மை என நம்பிய பெண்களின் வாழ்க்கை, கேள்விக்குறியாகி விடுகிறது.ஏழை பெற்றோர்களே... வெளிநாட்டு மாப்பிள்ளைகளிடம் உஷாராக இருங்கள்!— ஜெ.கண்ணன், சென்னை.முதியோருக்கு ஏற்றது!என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்த போது, அவளது, 70 வயது தாய் பாத்ரூம் கொக்கியில், சிறிய பக்கெட்டை தொங்க விட்டு உள்ளே சென்றார். எதற்கு என்று கேட்டதற்கு, என் தோழி, 'வயசானவங்க பாத்ரூம்ல வழுக்கி விழுறது சகஜம். அப்படி ஏதாவது ஆகிட்டா, தாழ்ப்பாளை உடைச்சு அவருக்கு முதல் உதவி செய்றதுல கால தாமதம் ஏற்பட்டு விடும். அதனால தான், அவரது பாத்ரூமில் உள் தாழ்ப்பாளை எடுத்துட்டோம். என் பையனுங்க தெரியாம கதவை திறந்திடக் கூடாதுன்னு தான் அவர் உள்ளே இருக்குறதுக்கு அடையாளமாக பக்கெட்டை மாட்டுகிறார். இது என் கணவரின் ஏற்பாடு...' என்றாள்.நல்ல யோசனை... வயதானவர்கள் இருக்கும் வீடுகளிலும், முதியோர் இல்லங்களிலும் இப்பழக்கத்தை பின்பற்றலாமே!— ப்ரீதா ரெங்கசாமி, மயிலாப்பூர்.சாப்ட்வேரும், ஹார்ட் வேரும்!சில நாட்களுக்கு முன், சென்னை பேஷன் டெக்னாலஜி பஸ் நிலையத்தில், பஸ்சுக்காக காத்திருந்தேன். என் அருகே எம்.என்.சி., கம்பெனியில் பணிபுரியும் இரு பெண்கள் வந்து நின்றனர். இருவரில் ஒருத்தி அணிந்திருந்த உடை, படுகவர்ச்சியாக இருந்தது. அவ்வழியாக பைக்கில் போன இரு இளைஞர்கள் பைக்கை நிறுத்தி, 'மச்சான்... சாப்ட்வேரும், ஹார்ட்வேரும் நிக்குதுடா...' என்று, கலாய்த்து விட்டு சென்றனர்.கவர்ச்சி உடை அணிந்தவள், மற்றவளைப் பார்த்து, 'என்னடி சொல்லிட்டு போறாங்க?' என்று கேட்டாள். 'இந்த டிரஸ் வேணாம்ன்னு சொன்னேன் கேட்டியா... இப்போ உன்னோட சேர்த்து என்னையும் வாரிட்டு போறானுங்க. உன் உடம்பு புல்லா தெரியுதாம்; அதனால நீ சாப்ட்வேராம். என் உடம்புல ஒண்ணும் தெரியலயாம்; அதனால நான், ஹார்ட்வேராம். சும்மா சொல்லக் கூடாது, பசங்க நல்லா தான் சொல்றாங்க டீட்டெயிலு...' என்றாள்.அந்தப் பையன்களின், 'கமென்ட்' ரசிக்க வைத்தாலும், இளம்பெண்கள், நாகரிகம் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளை தவிர்ப்பது நல்லது!— மீனலோசினி, கந்தன்சாவடி, சென்னை.மனைவிக்கு உதவி...பொதுவாக, வீட்டு வேலை செய்ய, பெண்கள் தான் முன் வருவர். ஆனால், எங்க அம்மா வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண், தன் கணவருடன் ஜோடியாக பைக்கில் வருவாள். மனைவி, வீட்டின் உள் வேலைகளைச் செய்யும் போது, கணவர் பாத்திரம் கழுவி, துணி துவைத்து விடுவார். இதனால், அரை மணி நேரத்தில் வேலையை முடித்து, இருவரும் கிளம்பி விடுகின்றனர். இது போல, மூன்று வீடுகளில் வேலை செய்கின்றனர். லோடு மேனாக வேலை செய்யும் அப்பெண்ணின் கணவர், தான் வேலைக்கு போகும் முன், இவ்வாறு மனைவிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து விட்டு போகிறார்.சொந்த வீட்டில் வேலை செய்வதையே, தன்மானக் குறைவாக நினைக்கும் ஆண்கள் மத்தியில், பிறர் என்ன நினைப்பர் என்று கவலைப்படாமல், தன் மனைவிக்கு உதவுவது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்!— வை.கீதா, புதுச்சேரி.