உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

உஷாரய்யா உஷாரு!சமீபத்தில், ஓட்டலில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அங்கே வந்த ஒருவர், என்னிடம், 'என்ன சார்... சவுக்கியமா இருக்கீங்களா... உங்கள பாத்து ரொம்ப நாளாச்சு; வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க...' என்று மிகவும் அன்னியோன்யமாக விசாரித்தார். அவர் யார் என்று தெரியவில்லை; இருந்தாலும் எங்கோ, எப்போதோ பார்த்த மாதிரி இருந்ததால், பதிலுக்கு விசாரித்து வைத்தேன். எங்களது உரையாடலை ஓட்டல் முதலாளி உட்பட அனைவருமே வேடிக்கை பார்த்தனர்.கடைசியாக அந்நபர், 'பார்சல் வாங்க வந்தேன்; வாங்கிட்டு போறேன்...' என்றார். நானும், 'சரி...' என்று அனுப்பி வைத்தேன். கல்லா அருகில் சென்ற அவர், 'பார்சல் வாங்கிட்டேன் சார் கிளம்புறேன்...' என்று, என்னிடம் குரல் கொடுத்து விட்டு புறப்பட்டார்.நான் சாப்பிட்டு முடித்ததும், எனக்கு வந்த பில்லை பார்த்தால், 150 ரூபாய் அதிகம் இருந்தது. அதைப்பற்றி கேட்டதற்கு, அந்நபர் வாங்கிய பார்சல் பில்லும் சேர்ந்திருப்பதாக கூறினர்.'அவர் யார்ன்னு எனக்கு தெரியாது...' என்று எவ்வளவோ சொல்லியும், ஓட்டல் முதலாளி கேட்கவில்லை. 'பார்சலுக்கு, நீங்க பணம் தர்றதா சொல்லிப் போனாரே... நீங்க தானே அவரோடு பேசிக்கிட்டு இருந்தீங்க... இப்போது தெரியாதுன்னு சொன்னா எப்படி...' என்று சத்தம் போட்டார் முதலாளி.மேற்கொண்டு பிரச்னையை பெரிதுபடுத்தாமல், பணத்தை கொடுத்து விட்டு வந்தேன். முன்பின் தெரியாதவரிடம் பேசினால், இப்படித்தான் ஏமாற வேண்டும்.எனவே, வாசகர்களே... உஷாராகவே இருங்கள்!— வே.விநாயகமூர்த்தி, வெட்டுவாங்கேணி.சமயோசித புத்தி!சமீபத்தில், பக்கத்து வீட்டுக்காரரும், என் நெருங்கிய நண்பருமான ஒருவர், எதிர்பாராத விபத்தில் இறந்து விட்டார். அவர், அடிக்கடி நண்பர்களிடம் கை மாத்தாக பணம் வாங்குவார்; சொன்னபடி திருப்பி கொடுத்தும் விடுவார். அவருடைய, 16ம் நாள் காரியம் முடிந்த மறுநாள், அவர் கடன் வாங்கி இருப்பதாக கூறி, நண்பர்கள் சிலரும், மற்றவர்களும் வந்தனர். வந்தவர்களோ அவ்வளவு, இவ்வளவு என, இஷ்டத்துக்கு கூறினர்.நண்பரின் மனைவி அறையினுள் சென்று, ஒரு டைரியை எடுத்து வந்து, என்ன தேதியில், எந்த சந்தர்ப்பத்தில், யாரிடம் எவ்வளவு வாங்கினார் என்ற விவரத்தையும், அதில் எவ்வளவு திருப்பி கொடுத்துள்ளார் என்பதையும் கூறினார். இதைக் கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. தங்கள் கணக்குகளை சரி பார்த்து வருவதாக கூறி, நைசாக நழுவினர்.நண்பர் மட்டும் கடன் விவரங்களை பதிவு செய்யாமலோ, மனைவியிடம் பகிராமலோ இருந்து இருந்தால், அவரின் காப்பீடு மற்றும் இழப்பீடு பணம் எதுவும் குடும்பத்திற்கு உதவி இருக்காது.ஆகவே, வாசகர்களே... நம் வாழ்க்கை நிச்சயமற்றது; எனவே நம்மை சார்ந்தோரை, நம் மரணத்திற்கு பின்பும் காக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை மறவாதீர்!— ஜெ.மகேந்திரன், கோவை.மனைவிக்கு பரிசு கொடுக்க போகிறீர்களா?நண்பர் ஒருவர், அவர் மனைவியின் பிறந்தநாள் அன்று குறுந்தகடு ஒன்றை பரிசாக கொடுத்ததாக கூறினார். அதற்கு, 'நகை, புடவை அல்லது அவர் விரும்பும் ஏதாவதொரு பொருளை பரிசாக தந்தால் மகிழ்வார். 'சிடி' கொடுப்பதால் என்ன லாபம்...' என்றேன்.அதற்கு, நண்பர், 'அந்த, 'சிடி'யில், என் மனைவியின் நல்ல குணங்களைப் பற்றி, அவளுடைய தோழிகள், அலுவலக நண்பர்கள், அலுவலக மேலாளர் மற்றும் உறவினர்கள் பேசியதை பதிவு செய்துள்ளேன். அவர்களது, 'பாசிடிவ்'வான விமர்சனங்களும், அவர்கள் கூறிய பிறந்த நாள் வாழ்த்து மற்றும் ஆசிகளை கேட்ட என் மனைவி அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல; மகிழ்ச்சி கடலில் திளைத்துப் போனாள்.'அவள் மீது நான் கொண்டுள்ள அன்பையும், காதலையும் புரிந்து கொண்டதை, அவள் பேச்சிலிருந்து அறிந்து கொண்டேன். கணவன் - மனைவி உறவுக்கு இதை விட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும். புடவையும், நகையும் பரிசளித்திருந்தால் இத்தகைய புரிந்துணர்வு கிடைத்திருக்குமா...' என்றார்.நண்பரின் அணுகுமுறையை பாராட்டினேன்.இனி, என் மனைவிக்கும், பிறந்தநாள் பரிசாக, இந்த முறையையே பின்பற்ற முடிவெடுத்துள்ளேன்.அப்ப... நீங்க!— பா.பாலாஜி, பண்ருட்டி.குடும்பத் தலைவிகள் சிந்திக்கலாமே!சமீபத்தில், மதுரையில் உள்ள நண்பரைக் காண அவர் வீட்டுற்கு சென்றிருந்தேன். அன்று உடல்நிலை சரியில்லாததால், நண்பர் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தார். பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருந்தனர்.'என்ன... நீ மட்டும் தனியா இருக்கே... எங்கே உன் மனைவி...' என்று நண்பரிடம் கேட்டேன். 'வீட்டுத் தோட்டம் அமைப்பது எப்படின்னு மூன்று நாட்களுக்கான இலவசப்பயிற்சியில கலந்துக்க போயிருக்கா...' என்றார்.நாங்கள் பேசிக்கொண்டிருந்த போதே, பயிற்சி முடிந்து வந்த நண்பர் மனைவி, என்னை வரவேற்று, சிறுதானியங்களில் செய்யப்பட்ட சில தின்பண்டங்களையும், 'காளான் சூப்'பும் கொடுத்தார்.அத்துடன், தான் சென்று வந்த பயிற்சியைப் பற்றியும், இதற்கு முன், தான் பயிற்சி பெற்ற, 'சிறு தானியங்களில், தின்பண்டங்கள் செய்வது எப்படி, வீட்டில் காளான் வளர்ப்பு' போன்ற பயிற்சிகளை பற்றியும் தெரிவித்தார்.'இதற்கெல்லாம் எப்படி நேரம் இருக்கு?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'காலையில பிள்ளைகள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, பயிற்சிக்கு போயிடுவேன். மாலையில் பிள்ளைங்க வர்றதுக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன். இப்ப உங்களுக்கு கொடுத்த காளான் சூப் கூட, எங்கள் வீட்டில வளர்ந்த காளான்ல செய்தது தான்...' என்று கூறி, வீட்டின் மூலையில் இருந்த அந்த சின்ன காளான் குடிலைக் காட்டினார்.மேலும், அவர் கூறும் போது, 'சிறுதானிய தின்பண்டமும், நான் தயாரித்தது தான். இதுபோன்ற பயனுள்ள இலவசப் பயிற்சிகள்ல கலந்துக்கிறதுனால, எந்த கஷ்டம் வந்தாலும் சமாளிச்சுறலாம்ன்னு மனசுல தன்னம்பிக்கை வருது...' என்றார்.குடும்பத் தலைவிகள் பகலில், 'டிவி' சீரியல்களில் நேரத்தைக் கழிக்காமல், இதுபோன்ற பயனுள்ள பயிற்சிகள் மீதும் கவனம் செலுத்தினால், குடும்பத்துக்கு நல்லதுதானே!— எஸ்.ராமு, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !