இது உங்கள் இடம்!
தகாத உறவு தேவையா?என் நண்பர், 'பலான' பெண்களிடம் பழக்கம் உள்ளவர். இவர் சொல்லும், 'பலான' அனுபவங்களை கேட்பதற்கு, இவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.திடீரென்று யாருக்கும் தெரியாமல், ரகசிய திருமணம் செய்து கொண்ட நண்பர், சமீபத்தில், புது மனைவியுடன் சினிமா பார்க்கச் சென்றிருக்கிறார். தியேட்டரில், 'டேய் மாப்ளே... கட்டை செமத்தியா இருக்கு; எங்கிருந்து தள்ளிகிட்டு வந்த...' என்று, கேட்டுள்ளனர் அவரது நண்பர்கள்.மனைவி எதிரில், நண்பர்கள் இவ்வாறு கேட்டதும், பதறிப் போனவர், 'இவள் என் மனைவி...' என்று அழாத குறையாக கூறியிருக்கிறார். ஆனால், அதை நம்பாத நண்பர்கள், 'எங்களுக்கு நாமம் போட்டுட்டு, நீ மட்டும் ஜமாய்க்கலாம்ன்னு பாக்குறியா... இவ, உன் மனைவிங்கிறதுக்கு என்ன சாட்சி...' என்று வெறுப்பேத்த, ரகசிய திருமணம் செய்து கொண்ட உண்மையை நிரூபிக்க முடியாமல், நொந்து விட்டார் நண்பர்.தகாத உறவு வைத்திருந்ததுடன், அதை தம்பட்டம் அடித்து திரிந்த நண்பருக்கு கிடைத்த அவமானத்தை பார்த்தீர்களா... இதை விட வேறு தண்டனை வேண்டுமா என்ன!— எம்.பாலமுருகன், திண்டுக்கல்.உஷார்!என் நண்பர் ஒருவர், எப்போதும் செயின், மோதிரம், வாட்ச் அணிந்திருப்பார். சமீபத்தில், அவர் இரவு நேர பஸ்சுக்காக காத்திருந்த போது, இரண்டு பேர் அவரிடம் வந்து ஏதோ விசாரித்து, பின், கீழே கிடந்த கர்சீப்பை எடுத்து, 'இது உங்களுடையதா?' என்று கேட்பது போல, நண்பரின் மூக்கருகே காட்டியுள்ளனர்.அதில், மயக்க மருந்தை தெளித்திருக்கின்றனர். அதை சுவாசித்ததில், மயங்கி விழுந்துள்ளார் நண்பர்.உடனே அந்த இருவரும், 'இவர் எங்கள் நண்பர்; அடிக்கடி இது போல் இவருக்கு மயக்கம் வரும்...' என்று அருகில் இருந்தவர்களிடம் சொல்லி, ஆட்டோ ஒன்றில், நண்பரை ஏற்றி சென்றுள்ளனர்.இருளான இடத்திற்கு சென்றதும், அவரிடம் இருந்த நகை, பணத்தை பிடுங்கிக் கொண்டு, அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர். இரவு, 2:00 மணியளவில், மயக்கம் தெளிந்து, தட்டுத்தடுமாறி, ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்திருக்கிறார் நண்பர்.இரவுப் பயணம் செல்வோரே... அறிமுகம் இல்லாத நபரிடம், பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாதீர்கள்; எப்போதும் விழிப்புடன் இருங்கள்!— ஏ.ராமகிருஷ்ணன், மதுரை.ஐந்து செகண்டு கார்டினால்...பெரும்பாலான வீடுகளில், பெண்கள், மாலை, 6:00 மணிக்கு, 'ரிமோட்'டுடன் அமர்ந்தால், இரவு, 11:00 மணி வரை அத்தனை தொடரையும் பார்த்து விட்டு தான், 'டிவி'யை, 'ஆப்' செய்கின்றனர். இரவு சமையல், சாப்பாடு எல்லாம், தொடரின் இடைவேளையின் போது, அவசர கோலத்தில் முடிக்கப்படுகின்றன. இப்படி அரக்க பரக்க வீட்டு வேலைகளை செய்வதால், தூங்கப் போகும் முன், கேஸ் சிலிண்டர் மற்றும் தேவை இல்லாத மின் இணைப்புகளை, சில நேரம், 'ஆப்' செய்ய மறந்து விடுகின்றனர்.எனவே, இரவில் ஒளிபரப்பாகும் தொடர்களில், 'கேஸ் சிலிண்டரை மூடி விட்டீர்களா, அவசியமற்ற மின் இணைப்புகளை துண்டித்து விட்டீர்களா...' எனக் கேட்டு, ஒரு கார்டு போட்டால், குடும்ப தலைவிகளுக்கு நினைவூட்டலாய் அமையுமே! ஐந்து செகண்டு கார்டினால், சில அசம்பாவிதங்களை தவிர்க்கலாமே... செய்வார்களா?— அஜித், சென்னை.