உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

கட்டட தொழிலாளியிடம் கற்ற பாடம்!எங்கள் வீட்டு மாடியில் வீடு கட்டினோம். கட்டட தொழிலாளர்களோடு, இளம் வயது சித்தாள் ஒருவள் இருந்தாள். அவளிடம் பேச்சு கொடுத்ததில், எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், மேலும் படிக்க வசதியின்மை மற்றும் குடும்ப பொறுப்பு வந்து விட்டதால், வேலைக்குப் போகும் நிலை வந்து விட்டதாக கூறிய போது, அவள் மீது இரக்கம் ஏற்பட்டது. அவளுக்கு என்னாலான உதவியை செய்ய எண்ணி, 'எனக்குத் தெரிந்த ஒருவர், வீட்டு வேலைக்கு ஆள் கேட்கிறார், போகிறாயா... காலை சென்று, மாலை திரும்பிடலாம், இரண்டே பேர் தான்; வேலை அதிகம் இருக்காது. ஏ.சி., வீடு, இரண்டு வேளை சாப்பாடு, பொழுது போகலன்னா, 'டிவி' பாக்கலாம். சம்பளம், இதை விட இரண்டு மடங்கு அதிகம் கிடைக்கும்...' என்று சொல்ல, மறுத்து விட்டாள்.காரணம் கேட்ட போது, 'சுமை துாக்கி, மாடி ஏறி, இறங்கி, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, உரம் ஏறிப் போனவர்கள் நாங்கள். திடீரென வெயில் படாமல், கனத்த வேலை செய்யாமல், ஏ.சி.,யில் அலுங்காமல், குலுங்காமல், 'டிவி' பார்த்தபடி இருந்தால், ஊளை சதை போட்டுவிடும்.'தினமும், எங்கள் மீது வெயில் படுவதால், அவ்வளவு சீக்கிரம் தலைமுடி நரைக்காது; தோல் வியாதியும் வராது...' என்று சொன்னவள், 'அன்றாடம் கூலி வாங்கிப் போய், புதிய காய்கறிகள் வாங்கி, வேண்டிய அளவு சமைத்து, சூடாக சாப்பிட்டு, அப்போதே காலி செய்து விடுவோம். அந்த வீட்டில் எல்லாம், பிரிஜ்ஜில் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள் தான் கிடைக்கும்; அதில் சத்து இருக்காது...' என்றாள்.படித்த நாம், வசதி வாய்ப்புகளை வைத்து, உடல் நலம் பேணுவதில் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம். நம்மால் இவர்களைப் போல் உழைக்க முடியாவிட்டாலும், உணவு விஷயத்தில் அவர்களை பின்பற்றுவது நல்லது.துவைத்த துணிகளையும், மற்ற உணவுப் பொருட்களையும் காய வைக்க, நாமே தினம் மாடி ஏறி, இறங்குவது மிக நல்லது. அப்போதாவது, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் விட்டமின்களை பெறலாமே!— எஸ்.ஜெயம் சதாசிவம், மதுரை.இரவு பஸ்களில்...சென்னையிலிருந்து, வெளியூருக்கு இரவு நேரத்தில், பஸ்சில் பயணிப்போருக்கு ஏற்படும் பெரிய தொல்லை, பஸ் எந்த ஊரில் நிற்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாதது தான். அதுவும், தொலைதுார பயணம் செய்யும் போது, அசந்து துாங்கி விடுவர்; சிறிதுநேரம் கழித்து கண் விழித்து பார்க்கும் போது, எந்த ஊர் வரப் போகிறது என்பது தெரியாது. நம் ஊர் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன் தெரிந்தால், 'லக்கேஜ்'களை எடுத்து, இறங்க தயாராகலாம். இதை தவிர்க்க, சென்னை புறநகர் ரயில்களில் உள்ளது போல், டிரைவர் இருக்கைக்கு மேலே, ஒரு, 'டிஜிட்டல் போர்டு' வைத்து, அதில், பஸ் எந்த ஊரை நெருங்குகிறது என்பதை காட்டலாம் அல்லது ஒலி பெருக்கி மூலமாவது தெரிவிக்கலாம். இது, துாக்கத்தில் ஆழந்திருக்கும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும்.— சம்பத்குமாரி, திருச்சி.உபசரித்தால் என்ன குறைந்து விடும்!ஆசிரியராக பணிபுரியும் நானும், என் தோழியும், அன்று, மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தோழி ஏதோ யோசனையில் இருந்ததைக் கவனித்த நான், என்னவென்று விசாரித்தேன்.கடந்த மாதம், காலமான அவளது மாமியார், இறந்து விடுவோம் என தெரிந்ததாலோ என்னவோ, என் தோழியை கூப்பிட்டு, தான் போட்டிருந்த மூன்று சவரன் வளையல்களை தோழிக்கு கொடுத்து, 'இதை என் பரிசாக வைத்துக் கொள்...' என்று கூறியுள்ளார். பின், 'நான் இந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்து, ௫௫ வருஷமாகுது. கல்யாணமான மறுநாள் அடுப்பங்கரையில் காலை வைத்தவளுக்கு, இன்று வரை ஓய்வே இல்லை.'வகை வகையாய் சமைத்துப் போட, சப்புக் கொட்டி சாப்பிட்ட என் கணவரோ, மகனோ, மகளோ, 'நீ சாப்பிட்டியா...' என்று ஒரு நாள் கூட கேட்டதில்லை. 'நீயும் கூட உட்கார்ந்து சாப்பிடு; நாங்கள் பரிமாறுகிறோம்...' என்று, இதுவரை ஒருவர் கூட கூறியதில்லை. கேட்டு வாங்கிச் சாப்பிடுவதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது...'நம்மை நாமே நமஸ்காரம் செய்வது போல, நாம் சமைத்ததை நாமே எடுத்துப் போட்டு சாப்பிடுவதில் திருப்தியே இருக்காது. நீ, இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தபின், என்னோடு உட்கார்ந்து இரண்டொரு முறை சாப்பிட்டிருக்கிறாய்... 'நீங்க உட்காருங்க; நான் பரிமாறுகிறேன்...' என்று கூறியிருக்கிறாய். அதில் எனக்கொரு மனநிறைவு. அதற்காகத் தான் இந்த பரிசு...' என்று கூறினாராம். இதைக் கூறி, 'நாம் அனைவருமே நம் அம்மாவின் கையால் சாப்பிட்டிருப்போம்; ஆனால், எத்தனை பேர், 'அம்மா நீ சாப்பிட்டாயா... நீயும் வந்து உட்காரும்மா... எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாம்'ன்னு கூறியிருப்போம்... அதைத் தான் யோசித்துக் கொண்டிருந்தேன்...' என்றாள். அம்மாவோ, மாமியாரோ யாராக இருந்தாலும், 'சாப்பிட்டீர்களா... நான் பரிமாறட்டுமா...' என்று இனி உபசரிக்கலாமே... சின்ன சந்தோஷம் அவர்களுக்கு கிடைக்கட்டும்!— பத்மாவதி ஸ்ரீனிவாசன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !