இது உங்கள் இடம்
பாசிட்டிவ் - பாட்டிக் கதைகள்!தினமும் இரவில், என் குழந்தைகளுக்கு கதை சொல்லி தூங்க வைப்பது, என் மாமியாரின் வழக்கம். சமீபத்தில், எங்கள் வீட்டிற்கு, உறவினர்களின் குழந்தைகளும் வந்திருந்தனர். அவர்களும், கதை கேட்கும் பட்டாளத்தில் சேர்ந்து கொண்டனர். அதில் ஒரு சிறுவன், 'நீங்க கடவுளை பார்த்திருக்கீங்களா ஆச்சி?' என்று கேட்க, நான் அதிர்ந்து போனேன். அறிஞர்களுக்கே விடை தெரியாத இந்த கேள்விக்கு, என் மாமியார் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதில் ஆர்வமானேன். ஆனால், 'நிறைய தடவை பார்த்திருக் கிறேன்...' என்று கூறிய என் மாமியார், 'நம்மால் முடியாததை இன்னொருவர் செய்தால், அவரும் கடவுள் தான்...' எனக் கூறினார். இறுதியில், தாய் - தந்தையரே முதல் தெய்வம். எழுத்தறிவித்த குருவே இரண்டாம் கடவுள். செய்யும் தொழிலே தெய்வம். உயிர் காத்த மருத்துவர், எதிர்பாராத உதவிகளை செய்த வழிப் போக்கர் வரை, எல்லாரையுமே தெய்வத்திற்கு ஈடாக பேசி, விளக்க மளித்தார். குழந்தைகளும் திருப்தியான விளக்கத்தைக் கேட்டு, கண் அயர்ந்தனர். ஆம்... குழந்தைகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்காமல், மறுப்பதோ, மழுப்பலான பதில் சொல்வதோ, அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும். இதுபோன்ற பாசிட்டிவான பதில்களை, பாட்டி கதைகளின் மூலம் புகுத்துவது, கடவுளை மட்டுமல்ல, மற்ற மனிதர்களையும் மதிக்க கற்றுத் தருமே. இதன் மூலம், மனிதரை மனிதர் நேசித்தாலே போதும் என்ற உண்மையும் எனக்கு விளங்கியது. — ராஜராஜன், போத்தனூர்.பொட்டு அம்மாள்!வயதான என் வகுப்பு ஆசிரியை, எப்போதும் தன் கைப்பையில், ஸ்டிக்கர் பொட்டு அட்டை வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். அவர் குங்குமப் பொட்டு வைத்துக் கொள்வது தான் வழக்கம். இதுகுறித்து ஒரு நாள், அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், 'பல இளம் பெண்கள், வேலைக்கு கிளம்பும் பரபரப்பில், பொட்டு வைக்காமல் வருவதுண்டு. சில நேரங்களில், ஸ்டிக்கர் பொட்டு தவறி விழுந்து விடும். பெண்கள், அதிலும் குறிப்பாக சுமங்கலிகள், பொட்டு இல்லாமலிருப்பது, அமங்கலமான விஷயமாயிற்றே! அதனால்தான், என் கைப்பையிலிருக்கும் அட்டை யிலிருந்து எடுத்துக் கொடுத்து, வைத்துக் கொள்ள சொல்வேன்...' என்றார். சின்ன உதவி தான் என்றாலும், பெரிய விஷயமல்லவா! வாய்ப்பு கிடைக்கும் போது, நாமும் எந்த வகையிலாவது, பிறருக்கு உதவியாக இருக்க வேண்டுமென்ற பாடத்தை, அந்த ஆசிரியையிடமிருந்து கற்றுக் கொண்டேன்.— அ.யாழினி பர்வதம், சென்னை.வக்கிர ஆசாமிகள் திருந்துவரா?சமீபத்தில் ஒருநாள் மாலை, நானும், என் ஆண் நண்பரும் கடற்கரை மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஐம்பது வயதைக் கடந்தவர் போல தோற்றம் கொண்ட ஒரு ஆசாமி, எங்களுக்கு சற்றுத் தள்ளி வந்து அமர்ந்தார்.சிறிது நேரத்திற்குப் பின், தற்செயலாக என் பார்வை அவர் பக்கம் போன போது, அவர் மணலில் சரிந்து, ஒருக்களித்த நிலையில் படுத்திருந்தார். அசதியில், ரெஸ்ட் எடுக்கிறார் என நினைத்தேன். இன்னும் சற்று நேரம் சென்ற பின், தன் கையை தலைக்கு தாங்கல் கொடுத்தபடி, மேல் உடலை உயர்த்தி யோகாசன நிலையில் படுத்திருந்தார். அவரைச் சுட்டிக்காட்டி, 'இந்த வயதிலும் ஆரோக்கிய உணர்வோடு யோகா செய்கிறார் பார்... நீயும் இருக்கிறாயே...' என, என் நண்பனை திட்டினேன். கொஞ்ச நேரம் போனதும், அந்த ஆசாமி நாசூக்காக எங்களை நோக்கி உருண்டு, ஓணான் மாதிரி தலையைத் தூக்கிப் பார்த்தார். அதைக் கவனித்ததும்தான், அவன் ரெஸ்ட் எடுக்கவோ, யோகா பண்ணவோ கடற்கரைக்கு வரவில்லை என்பது எனக்கு உறைத்தது. ஜோடியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதால், நாங்கள் ஏதேனும் காதல் சில்மிஷத்தில் ஈடுபடுவோம் என எதிர்பார்த்து, அதை ரசிக்க இப்படி பலவகை, 'ஜொள்ளாசனம்' போட்டபடி காத்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. விபரம் புரியாமல் திட்டியதற்காக நண்பனிடம், மன்னிப்பு கோரினேன். ஒரு இளைஞனும், இளைஞியும் கடற்கரைக்கு வருவதே காதல் சில்மிஷத்தில் ஈடுபடத்தான் என நினைக்கும், இதுபோன்ற வக்கிரர்கள் என்றுதான் திருந்துவரோ?— ஆர்.பவித்ரா, அடையாறு.