உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

வாழ்க்கையை புரிந்து வாழுங்கள்!சமீபத்தில் திருமணம் ஆன என் தோழியின் மகள், பெற்றோர் வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்து, அவளை காணச் சென்றேன்.புதுமண பெண் என்பதற்கான அடையாளம் எதுவுமே அவளிடம் இல்லை. காலில் மெட்டி இல்லை; கையில் வளையல் இல்லை; நெற்றியில் குங்குமம் இல்லை... முகத்தில் கவலை; கழுத்தில் சின்னதாய் ஒரு தாலி சேர்த்த செயின். 'என்னடி இது கோலம்' என்றேன், தோழியிடம்.மெகுவாக, 'நிறைய கடனை வாங்கி, அவ ஆசைப்பட்டபடி திருமணம் செய்து வைத்தோம்... மாப்பிள்ளை நிறைய படிக்கலையாம்... நிறைய சம்பாதிக்கலையாம்... அதனால, இந்த திருமணமே புடிக்கலையாம்...' என்றவள், 'இந்நிலையில், என் மகள் கர்ப்பமாக இருக்கிறாள்...' என, மேலும் புலம்பினாள், தோழி.அங்குள்ள நிலைமையை உணர்ந்த நான், தோழியின் மகளை தனியே அழைத்து, 'இந்த திருமணம் நடக்க, உங்க அம்மாவும் - அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க தெரியுமா.. மங்களகரமாக இருப்பது தான், பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை..நீ சின்ன பெண்ணு... சினிமா, டிவி சீரியல்களில், ஒரு பெண், எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.. ஆனா, யதார்த்த வாழ்க்கையை புரிந்து, வாழ கத்துக்க... எத்தனையோ பேருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஆனா, உனக்கு ஆண்டவன் உடனே கொடுத்து இருக்கான்... இப்ப, நீயும் ஒரு அம்மா...' என அறிவுரை கூறினேன்.தன் தவறை உணர்ந்த அவள், 'இனி புலம்புவதை விட்டு, நல்ல மகளாக, புகுந்த வீட்டில் நல்ல மருமகளாக இருக்கிறேன்...' என்று உறுதியளித்தாள்...- ஆர். காவ்யா, செ.புதூர்.சுய வைத்தியம் வேண்டாமே!இப்போதெல்லாம், 'வாட்ஸ் ஆப்' செயலியில், பல மருத்துவ குறிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி வந்த, கை வைத்திய குறிப்புகளால் பாதிக்கப்பட்ட, என் தோழியின் நிலையை என்னவென்று சொல்வது...தொப்பை போன்று வயிறு தெரிகிறது என, சில பல வைத்திய முறைகளை பின்பற்றி அலுத்திருந்தாள். அச்சமயத்தில் தான், 'இந்த பொடியை சாப்பிடுங்க...' என்று, 'வாட்ஸ் ஆப்' செயலியில் பார்த்து, அதில் சொன்ன இலை மற்றும் வேரை பொடித்து சாப்பிட, அலர்ஜியாகி, வயிறு கெட்டு போனது.ஒவ்வாமை காரணமாக, கொப்புளங்கள் வந்து, படாதபாடு பட்டாள். அது தந்த தொல்லை, அதற்கான வைத்தியம் என்று சரி செய்வதற்குள், மிகவும் நொந்து போனாள். இன்னும் கூட, கொப்புள தழும்புகள் மறையவில்லை; சரியாக சாப்பிட முடியவில்லை. வேலியில் போன ஓணானை, காதுக்குள் விட்ட கதையாகி விட்டது.இயற்கை வைத்தியம் என்றாலும், நம் உடல் ஏற்குமா என்று தெரியாமல் சாப்பிடக் கூடாது. தவிர, அதில் சொல்லும் இலைகள் சரியானவைதானா என்பது தெரியாமல் உபயோகிக்கக் கூடாது. இல்லையென்றால், என் தோழிக்கு நேர்ந்த கதி தான் ஏற்படும்.இயற்கை வைத்தியம் என்று வரும்போது, சில பத்தியங்கள் இருக்கும். முறையான வழிகாட்டுதல் இல்லாமல் சாப்பிடுவது, விபரீதத்தில் தான் முடியும்.ர.கிருஷ்ணவேணி, சென்னை.பள்ளியின் புதிய முயற்சி!சமீபத்தில், ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன். யதார்த்தமாக, திருமண மண்டபத்திற்கு எதிரே இருந்த ஒரு அரசு பள்ளியின் சுற்று சுவரில் எழுதி இருந்த வாசகங்களை படிக்க நேர்ந்தது. வழக்கமாக, சுவரில் திருக்குறள், அறிஞர்களின் பொன்மொழிகள் தான் எழுதப்பட்டிருக்கும்; ஆனால், இந்த பள்ளியின் சுவரில், 'மாணவர்களை சரியான நேரத்தில் பள்ளிக்கு அனுப்பி வைப்பது பெற்றோரின் கடமை. மாணவர்கள் முறையாக சீருடை அணிந்து வர வேண்டும். மாணவர்களுக்கு, பெற்றோர் நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். 'பள்ளி நேரம் தவிர, வீட்டில் பிள்ளைகளை படிக்க வைப்பது பெற்றோரின் கடமை, பிள்ளைகளை குளிக்க வைத்து, சுத்தமாக அனுப்பி வைக்க வேண்டும், சாப்பாடு, தண்ணீரை வீணாக்க கூடாது, பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். 'பெற்றோரின் விருப்பத்தை பிள்ளைகளின் மீது திணிக்கவோ, கட்டாயப்படுத்துவதோ கூடாது, பள்ளி சார்ந்த எதையும் சேதப்படுத்தக்கூடாது...' என்று எழுதி வைத்திருந்தனர். இதை பற்றி விசாரித்த போது, 'திருக்குறளும், பொன்மொழிகளும், புத்தகங்களில் இருக்கும் போது, சுவரில் எழுத வேண்டிய அவசியமில்லை; நடைமுறைக்கு தேவையான விஷயங்களை எழுதி வைத்துள்ளோம்...' என்று விளக்கம் அளித்தார், தலைமை ஆசிரியர்.மற்ற பள்ளிகளும் இதை செயல்படுத்தலாமே?— வி.சாந்தி, வெட்டுவாண்கேணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !