கற்ற தொழிலே சிறந்தது!
எனக்கு தெரிந்த இளைஞர் ஒருவர், 'ஏசி' மெக்கானிக் தொழிற் படிப்பு படித்து, வெளிநாட்டு வேலைக்கு போனார். அங்கு, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. ஏதேதோ வேலை செய்து, இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டிருக்கிறார்.பிறகு, தமிழகம் திரும்பியவர், சில நண்பர்களோடு சேர்ந்து, 'ஏசி' பழுது பார்க்கும் நிறுவனத்தை, சிறிய அளவில் ஆரம்பித்து, நடத்தி வருகிறார்.தற்போது, இவரது நேர்மை மற்றும் கடும் உழைப்புக்கு பலனாக, நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். வாழ்க்கை நடத்த தேவையான வருமானம் வருகிறதாம்.வெளிநாட்டு மோகத்தால், தான் பட்ட கஷ்டங்களை விட, இங்கு, உள்ளூர் வேலை, அதுவும் இவர் படித்து, அனுபவத்தால் கற்ற வேலையை செய்வதற்கு திருப்தியாக உள்ளதாம்.'சொர்க்கமே என்றாலும், நம் ஊரு போலாகுமா...' என்ற பாடல் தான், நினைவுக்கு வந்தது.
வி.சி. கிருஷ்ணரத்னம், சென்னை.எச்சரிக்கை பலகைகள்!
பல சிறிய பெட்டிக் கடைகளில், நாம் பார்க்கும் எச்சரிக்கை பலகைகளில், 'இங்கு, கடன் கிடையாது; சம்பள ஊழியர்கள் கிடையாது; ஞாயிற்றுக் கிழமை விடுமுறை...' போன்ற, சில வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்.பல்வேறு இடங்களில், 'இங்கு, புகை பிடித்தல் கூடாது; மது அருந்துதல் கூடாது; அரசியல் பேசக் கூடாது...' போன்ற பலகைகளும் உள்ளன.இனி வரும் காலங்களில், 'இங்கு, எச்சில் துப்பக் கூடாது; சிறுநீர் கழிக்க கூடாது; இடைவெளி விட்டு நிற்க வேண்டும்; முக கவசம் அணிந்து வருபவர்களுக்கே, முன்னுரிமை; கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்...' போன்ற பலகைகள் புதிதாக இடம் பெற செய்யலாம்.இதுபோன்ற எச்சரிக்கை வாசகங்களை பின்பற்றினால், நிச்சயம், நம் நாட்டின் சுகாதாரம் மேம்படுவதோடு, வாழ்க்கை முறையிலும் நல்ல மாற்றம் ஏற்படும்.
வெ. சந்தான கோபாலன், மதுரை.இப்படியும் நடக்குது, நுாதன திருட்டு!
எங்கள் ஊரில், இரு வாலிபர்கள், சில வணிக நிறுவனங்களில், நுாதன முறையில், அலைபேசிகளை திருடிச் சென்ற நிகழ்வுகள் நடந்துள்ளன.அதாவது, வணிக நிறுவனங்களில், வாடிக்கையாளர்களை கவனிக்கும் வேளையில், சில முதலாளிகள், அலைபேசிகளை மேஜை மீது வைத்து விடுவர்.அச்சூழ்நிலைகளை கவனித்துக் கொண்டிருக்கும் அவ்வாலிபர்கள், ஏதாவது பினாமி பெயர்களில் சில விளம்பர துண்டு பிரசுரங்களை, முதலாளியிடம் தந்து, படித்து பார்க்க வற்புறுத்துவர்.அதை படித்துக் கொண்டிருக்கும்போது, அவரது கவனத்தை சிதறடித்து, லாவகமாக அவரின் அலைபேசியை எடுத்து, வேகமாக வெளியேறி விடுவர். அவ்வாலிபர்களின் செயலை, வியாபார முனைப்பில் இருப்போர் யாரும் கண்டுகொள்வதில்லை.அவர்கள் சென்றவுடன், மேஜையில் இருந்த அலைபேசி திருடப்பட்டிருப்பது தெரிய வரும். அழுதால் துக்கம், வெளியே சொன்னால் வெட்கம் என்று விட்டு விடுவர்.இவர்களை போன்ற திருடர்களை பின்பற்றி, அனைத்து ஊர்களிலும் திருட்டுகள் நடக்க வாய்ப்புள்ளது. விளம்பர துண்டு பிரசுரங்களை தரும் வாலிபர்களிடம், மிக உஷாராக இருந்து, உங்களின் விலை உயர்ந்த அலைபேசிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ப. அண்ணாமலை, திண்டுக்கல்.