உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

'டூ வீலரை சர்வீஸ்' விடுகிறீர்களா?

நண்பரின் மகனது, 'பைக்'கில், வேறு ஒரு வாலிபர், ஒரு இளம் பெண்ணுடன் சென்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதுபற்றி நண்பரிடம் விசாரித்தேன். 'ஒர்க் ஷாப்'பில், 'பைக்'கை பழுது நீக்க விட்டிருப்பதாகவும், இரு தினங்களுக்கு பின், வருமாறு, மெக்கானிக் கூறியதாகவும், கூறினார்.வாகன எண்ணை அவரிடம் கூறியபோது, அதிர்ச்சி அடைந்தார்.இருவரும் மெக்கானிக் கடைக்கு சென்று விசாரித்தபோது, 'பைக்'கை சாயங்காலம் தருவதாக கூறினார். 'இப்போது, 'பைக்'கை பார்க்க வேண்டும்...' என்றதும், மழுப்பலான பதிலை கூறினார், மெக்கானிக். கோபத்துடன், மெக்கானிக் சட்டையை பிடித்து உலுக்கியதும், உண்மையை கொட்டினார். 'கல்லுாரி மாணவர்களுக்கு, 'பைக்'கை வாடகைக்கு விடுகிறேன். முக்கியமாக, விலை உயர்ந்த வாகனத்தை, மாணவர்கள், விரும்பி எடுத்துச் செல்கின்றனர். அவர்களிடம், ஆதார் எண், முகவரி மற்றும் நிபந்தனை பேப்பரில் கையெழுத்து பெற்றுக் கொள்வேன். 'ஒருநாள் வாடகை என்ற அடிப்படையில், வாகனத்தை கொடுப்பேன். 'டிரெயல்' பார்க்க வேண்டி, வாகனத்தை ஓட்டும்போது, காவலர்கள் நிறுத்தினால், ஆர்.சி., புத்தகம் மற்றும் இன்சூரன்ஸ் காப்பியை காட்ட வேண்டும். ஆதலால், இவைகளை வண்டியிலேயே வைக்க சொல்லி வாடிக்கையாளரிடம் அறிவுறுத்துவேன்...' என்றார்.இதை கேட்டு, அதிர்ந்து போனோம்.இரண்டு மணி நேரத்திற்கு பின், 'பைக்' கைக்கு கிடைத்தது.எப்படியெல்லாம் பிழைப்பு நடத்துகின்றனர் பாருங்கள்... இது, எவ்வளவு பெரிய தவறு. மேலும், வாடகைக்கு எடுத்துச் செல்லும் நபர், வாகனத்தை தவறான செயலுக்கு பயன்படுத்தினால், நிலைமை என்ன ஆவது?'டூ - வீலரை' பழுது நீக்க விடுவதென்றால், தகுந்த, 'சர்வீஸ் சென்டர்'களில் விடுவதோடு, கி.மீ., அளவு மற்றும் முக்கியமான, 'ஸ்பேர் பார்ட்ஸ்'களை படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.

தள்ளிப் போடாதீங்க!

'கொரோனா' பாதிப்பு காரணமாக, ஊரடங்கு அறிவித்திருந்த சமயம், வீட்டிற்கு காய்கறி வாங்குவதற்காக, 'பைக்'கில் சென்று கொண்டிருந்தேன்.அப்போது, மூடிக்கிடந்த ஒரு கடை வாசலில், 70 வயது மதிக்கத்தக்க தம்பதியர் அமர்ந்திருந்தனர். அவர்களை பார்த்த நொடியில், வறுமையில் இருப்பது தெரிந்தது. அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. எனினும், 'பைக்'கை நிறுத்த சோம்பல்பட்டு, கடைக்கு சென்று திரும்பும்போது, அவர்களுக்கு ஏதாவது பணம் கொடுக்கலாம் என்று நினைத்தபடியே சென்றேன்.திரும்பி வந்தபோது, அந்த இடத்தில் அவர்கள் இல்லை. உண்மையிலேயே தேவையுள்ளவர்களுக்கு, உதவி செய்ய மனதிருந்தும், அவர்களுக்கு உதவ இயலாமல் போனதற்காக வருத்தம் அடைந்தேன்.அருகில் எங்கேயாவது நடந்து சென்று கொண்டிருக்கின்றனரா என, அந்த தெரு முழுதும் தேடி பார்த்தேன். அவர்களை காணவில்லை. இப்போது வரை, என் மனது உறுத்திக் கொண்டே இருக்கிறது.தொழில் எதுவுமின்றி, விளிம்பு நிலை மக்கள் பலரும், கஷ்டப்படும் காலம் இது. சிலரை பார்த்ததும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம், நம் மனதில் இயற்கையாகவே தோன்றும். அப்படி தோன்றினால், தாமதமின்றி உடனே அவர்களுக்கு உதவிடுங்கள். பின்னர் உதவலாம் என்று நினைத்தால், அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய், மனது சங்கடப்பட நேரிடும்.ஜே.டி.ரவி, சென்னை

சேமிப்பின் சிறப்பு!

'உங்கள் முதல் செலவு, சேமிப்பாக இருக்கட்டும்... சிறு துளி பெருவெள்ளம்...' என்றெல்லாம் சேமிப்பு பற்றி பல விஷயங்களை கற்றிருக்கிறோம். ஆனால், நடைமுறைப்படுத்தியோர் எத்தனை பேர்?நம் வருமானத்திலிருந்து மாதா மாதம், ஒரு சிறு தொகையை, ஆர்.டி.,யாக கட்டினால், எதிர்காலத்தில் உதவும் என்று தெரிந்தும், சேமிப்பவர்கள் மிக சிலரே...வருமானம் தான் நிறைய வருகிறதே என, அலட்சியப்படுத்தி, ஆடம்பரமாகவும், வீண் செலவும் செய்கின்றனர், நிறைய பேர்.அஞ்சலகத்தில், சிறு சேமிப்பு முகவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் நான், எங்கள் பகுதியில், சுண்டல் வியாபாரம் செய்து கொண்டிருப்பவரிடம், இதுகுறித்து எடுத்துக் கூறினேன். அவரும், 27 மாதங்கள் தவறாது பணம் கட்டி வந்தார்.இதோ, இப்போது, 'கொரோனா' வந்து, பலரின் வாழ்வாதாரத்தை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது.யார் கடன் தருவர் என்று, அரசை எதிர்பார்த்து, பசியும், பட்டினியுமாக தவிக்கும் வேளையில், அந்த சுண்டல் வியாபாரி, மாதா மாதம் சேமித்த தொகையிலிருந்து, ஒரு பகுதியை கடனாக வாங்கினார்.'அடுத்த, ஐந்தாறு மாதங்களுக்கு சாப்பாட்டு செலவுக்கு இது போதும்...' என்றபோது, சிறு சேமிப்பு முகவரான என் மனம் குளிர்ந்தது.தி. பாரதி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !