'போட்டோ ஷூட் ...' உஷார்!
உறவினர் இல்ல திருமணத்துக்கு சென்றிருந்தோம். முதல் நாளில், பிரபல சினிமா பாடலை ஓட விட்டு, மணமக்கள் பாடுவது போலவே வாயசைக்க வைத்து அசத்தினர். அதன்பின், புகைப்படக்காரர் விதவிதமாக புகைப்படம் எடுத்து தள்ளினார்.'மணமக்கள் இருவரும், சினிமாவில் வருவது போல, 'டூயட்' பாடுவது, கட்டிப்பிடித்து முத்தமிடுவது போல எடுக்கலாம்...' என்றார், புகைப்படக்காரர்.உடனே, அங்கிருந்த மூத்த பெண்மணி ஒருவர், 'தம்பி, இது சினிமா ஷூட்டிங் இல்லை. அவங்களே அதை தனியா அறையில் செய்துக்குவாங்க. நீ, 'கிப்ட்' கொடுக்கிறவங்களை மட்டும் படம் எடு போதும்...' என்று, முகத்தில் அடித்தாற்போல கூறினார். உடனே, அந்த இடத்தை விட்டு நகர்ந்தார், புகைப்படக்காரர்.'இதையெல்லாம் ஆல்பமாக்கி, பிறர் காணும்போது தர்மசங்கடமாகும். புகைப்படக்காரர் என்பவர், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டுமே பார்க்க வேண்டும். புதுமை என்ற பெயரில் மற்றவர்கள் முகம் சுளிக்குமாறு படம் எடுப்பது தேவையா?'எனவே, 'போட்டோ ஷூட்' எடுக்கும்போது, மணமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இதை பார்த்து, மணமகள், மணமகன் வீட்டார் கிண்டலுக்கு ஆளாக வேண்டாம்...' என, அப்பெண்மணி கூறினார். இதைக் கேட்ட அங்கிருந்தவர்கள், அப்பெண்மணியை பாராட்டினர்.சமீப காலமாக, திருமண மண்டபத்தில் மட்டுமல்லாமல், சுற்றுலா தலங்களுக்கும் மணமக்களை அழைத்துச் சென்று, திரைப்படத்தில் ஹீரோ - ஹீரோயின் நடிப்பது போன்று, 'போஸ்' கொடுத்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது அதிகரித்து வருகிறது. இதற்காக கணிசமான பணமும் செலவழிக்கப்படுகிறது. இதெல்லாம் தவிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். செய்வரா?
— எம்.சிவகுருநாதன், சென்னை.பம்பரம் விளையாட்டு!
எங்கள் தெருவில் இருக்கும், வயதான பெரியவர் ஒருவர், விடுமுறை நாட்களில், ஆண், பெண் குழந்தைகள் என, வேறுபாடு பார்க்காமல், இரு பாலருக்கும் பம்பர விளையாட்டை கற்றுக் கொடுக்கிறார்.இந்த கால குழந்தைகளுக்கு, பம்பரம் விளையாட தெரியாததால், அதை ஆர்வத்துடன் கற்றுக் கொள்கின்றனர். மரத்தால் ஆன பம்பரங்களை நிறைய வாங்கி வைத்து, குழந்தைகளோடு குழந்தையாக விளையாட்டை சொல்லிக் கொடுத்து, தானும் விளையாடி மகிழ்கிறார், அப்பெரியவர்.நம் பாரம்பரிய விளையாட்டுகளை, இளைய தலைமுறையினர் மறக்காமல் இருக்கத்தான் இப்படி ஓர் ஐடியா செய்திருப்பதாக கூறி, சுழலும் பம்பரத்தை உள்ளங்கையில் லாவகமாக எடுத்து, சுழல வைப்பதை பார்க்க, பிரமாதமாக இருந்தது.
ஆர். மகாதேவன், திருநெல்வேலி.முதியவர்களை உடன் வைத்திருப்போம்!
திருமணமான புதிதில், அம்மா உடன் இருக்க, புதிதாக வந்த என் மனைவிக்கு பிடிக்கவில்லை.'சின்னஞ் சிறுசுகளாகிய நாம ரெண்டு பேரும் கொஞ்சம் அப்படி இப்படி இருப்போம். தவிர, வெளியில் பிரியப்பட்ட இடங்களுக்கு சென்று வருவோம். உங்க அம்மா, எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து, 'எங்கே போனீர்கள்; ஏன் இவ்வளவு தாமதம்' என்பார். 'சமைத்து போடுவதை, பேசாது சாப்பிடாமல் எதிலும் குறை கண்டுபிடிப்பார். இதையெல்லாம் என்னால் சகித்துக் கொள்ள இயலாது. அதனால், அவர்களை வேறு வீடு பார்த்து, வைக்க வேண்டும். அப்போது தான் நமக்கு சுதந்திரம் கிடைக்கும்...' என்றாள்.மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதாய் வாக்கு கொடுத்த சில நாட்களிலேயே ஓர் இரவு, அவள் மூச்சுவிட சிரமப்பட்டு, படுக்கையில் உறக்கமின்றி தவித்தாள். அவளுக்கு ஆஸ்துமா நோய் இருப்பது தெரிந்தது. என்ன செய்வதென்று புரியாது திகைத்தேன்.அம்மா வந்து பார்த்து விட்டு, அடுக்களைக்கு சென்று, கோதுமை தவிட்டை வாணலியில் வறுத்து ஒரு துணியில் கொட்டி, கை பொறுக்கும் சூட்டில் மனைவியின் மார்பிலும், முதுகிலும் ஒத்தடம் கொடுத்து, இளைப்பை ஆசுவாசப்படுத்தி, உறங்க வைத்தார்.மறுநாள், அம்மாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதோடு, 'நீங்களே, வீட்டை விட்டு போவதாக கூறினாலும், நான் அனுப்ப மாட்டேன்...' என்றாள், மனைவி. பெரியவர்கள், நம் குடும்பத்தில் அனுபவமிக்க ஒரு மருத்துவர்களாக இருப்பர். அதனால், மருந்துக்கும் கூட, அவர்களை வெறுக்காதீர்கள்.
கே. ஜெகதீசன், கோவை.