உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

கடைக்காரரின் அசத்தல் ஐடியா!நாடு முழுவதும், பாலிதின் பைகளை ஒழிக்க, அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக, பாலிதின் பை பயன்பாட்டிற்கு, கோவை மாநகராட்சி தடை விதித்தது. ஒரு முறை, கோவையில் உள்ள ஒரு கடைக்குச் சென்ற போது, அந்த கடைக்காரரின் செயல், என்னை மிகவும் கவர்ந்தது. அவர், தன் கடையில், 'இங்கு பொருட்களை துணிப் பைகளில் வாங்கிச் சென்றால், ஒவ்வொரு பொருள் மீதும், 100 ரூபாய்க்கு, இரண்டு ரூபாய் தள்ளுபடி...' என்ற அறிவிப்பு பலகையை வைத்திருந்தார். இதன் மூலம், வியாபாரமும் பெருகும், மக்களிடம் பாலிதின் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம். பாலிதின் பயன்பாட்டை குறைக்க, மற்ற ஊர் கடைக்காரர்களும் இம்முறையை பின்பற்றலாமே!— ம.பாரதி, கோவை.இன்னும் இந்த வழக்கம் தேவையா?சமீபத்தில், ஒரு திருமணத்திற்காக கோவை சென்றிருந்தேன். அவர்கள், பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் சம்பிரதாயப்படி, தாலி கட்டும் நேரத்தில், மணமகள், தன் தந்தையின் மடியில் அமர்ந்து கொள்ள வேண்டும். அந்த மணமகளுக்கோ லேட் மேரேஜ்; 30 வயதிருக்கும். இரட்டை நாடி உடம்பு; எடை, 90 கிலோ இருக் கும். மணமகளின் தந்தையோ, மிக வும் ஒல்லி; அவருக்கு, 70 வயது இருக்கும். முகூர்த்த நேரத்தில், மணமகளை அவர் தன் மடியில் அமர்த்தி, தாலி கட்டும் தருணத்தில், மணமகளின் உடல் எடை யால், காலில் ரத்த ஓட்ட மின்றி, மூச்சுத் திணறி, அரை மயக்கத்தில் விழுந்து விட்டார். மணமேடையே சிறிது நேரம் அமர்க்களப்பட்டு விட்டது.முன்பு, பால்ய வயதில் திருமணம் நடத்திய போது, மிரட்சி விலக, தந்தை மடியில் உட்கார வைத்து திருமணம் நடத்தினர். இதை, இன்றும் சம்பிரதாயம் என்ற பெயரில் கடைபிடித்து, அவஸ்தைக்கு உள்ளாவதில் என்ன பயன்?காலத்துக்கு ஏற்ப உணவு, உடைகளில் ஏற்பட்ட மாற்றங் கள், பழைய சம்பிரதாயங்களிலும் ஏற்பட வேண்டும் என்பது தான், அன்றைக்கு விழாவுக்கு வந் திருந்த பலரின் குரலாகவும் இருந்தது. புது வாழ்க்கை, சந் தோஷத்துடன் அல்லவா துவங்க வேண்டும்!— சசி பிரபு, சென்னை.அழுக்கு நைட்டி வேண்டாமே!கடந்த நான்கு மாதம் முன், ஒரு பிரபல ஸ்கேன் சென்டரில், பிரெய்ன் ஸ்கேன் எடுப்பதற்காக சென்றிருந் தேன். என்னை மாலை, 5:30 மணிக்கு வரச் சொல்லியிருந்தனர்; ஆனால், 5:00 மணிக்கே சென்று விட்டேன். எனக்கு முன் இருந்த, மூன்று பேருடன் சேர்ந்து, நானும் காத்திருந்தேன்.அப்போது, பக்கத்து ரூமில், நான்கைந்து நைட்டிகள் மாட்டப்பட்டு இருந்தன. மற்றொரு ஸ்கேன் ரூமில் இருந்து வந்த, 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நைட்டியுடன் வெளியே வந்து, அந்த ரூமிற்குள் சென்று, நைட்டியை கழற்றி, புடவை மாற்றி, வெளியே வந்தார். என் முறை வந்தது. அங்கு பணி செய்யும் ஊழியர், அப்பெண் கழற்றி வைத்த அதே நைட்டியை, என்னிடம் கொடுத்து, அதை அணிந்து, ஸ்கேன் ரூமுக்கு வருமாறு கூறினார்; எனக்கு அதிர்ச்சி. 'என் கண் எதிரே ஒருவர் அணிந்த நைட்டியை, உடனே நான் அணிவதா?' என்று கோபமும் வந்தது.என் கோபத்தை வெளிக்காட் டாமல், அந்த ஊழியரிடம், 'இந்த நவீன யுகத்தில் அனைவரும் நைட்டி அணிகின்றனர். ஆகவே, ஸ்கேன் எடுக்க வரும் போதே, அவரவர் நைட்டி கொண்டு வர வேண்டும் என்றால், அவரவரே கொண்டு வருவர். அதை விடுத்து, இப்படி, நான்கைந்து நைட்டியை வைத்துக் கொண்டு, நோயாளிகளே அதை மாற்றி, மாற்றி அணிந்து கொள்வது முறையல்ல. இது, நோய்த் தொற்றுக்கு வழி வகுக்காதா?' என கேட்டேன். அதற்கு அவர் சிரித்துவிட்டு, 'கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்குங்க மேடம்...' என்றார்.நேரமாகி விட்டதால், நானும் வேறு வழி இன்றி, காத்திருக்க முடியாமல், மனம் சகிக்காமல், அதே நைட்டியை அணிந்து, ஸ்கேன் ரூமிற்குள் சென்றேன்.சுகாதாரமாக இருக்க வேண்டிய இடத்தில், இப்படி தவறு நடக் கலாமா?— செ.சரஸ்வதி, சின்ன காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !