உள்ளூர் செய்திகள்

திண்ணை!

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, 565 சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்தது, நாடு. இவை, சுதந்திர பகுதிகளாக இருக்க வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர். இவற்றை ஒருங்கிணைப்பது புதிய அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. இப்பொறுப்பு உள்துறை அமைச்சராக இருந்த, பட்டேலிடம் ஒப்படைக்கப்பட்டது. அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக ராஜ்ஜியங்களை ஒன்றிணைக்க எழுந்த சர்ச்சைகளை, எதிர்ப்புகளை, பிரச்னைகளை சமாளித்து வெற்றி கண்டார், பட்டேல்.ரஷ்யாவின் குருசேவ், பட்டேலின் ராஜதந்திரத்தை பற்றி குறிப்பிடும் போது, 'இந்தியர்களாகிய நீங்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பல ராஜாக்களின் ஆட்சிகளை அழித்த உங்களால், அந்த ராஜாக்களை அழிக்காமல் எப்படி பாதுகாக்க முடிந்தது? இது நம்ப முடியாத விந்தையாகும்...' என்பார். பட்டேலுடன் காரசாரமான கடிதங்களுடனும், உரையாடலுடனும் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் மோதியுள்ளார். ஆனாலும், 'இந்திய புதிய அரசின் பிரச்னைகளையும், கடமைகளையும் வெகுவிரைவில் புரிந்து கொண்டு செயல்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, நான் பட்டேலின் நிர்வாகத் திறமையை போற்றாமல் இருக்க முடியாது.'அதிலும், பிளவுபட்டிருந்த பல ராஜாங்க சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, சுமூகமான உறவை ஏற்படுத்திய விதம் என்னை வியக்க வைக்கிறது...' எனக் கூறியுள்ளார், சர்ச்சில்.'உங்களை போல் புகழ் அடைய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?' என, எம்.ஜி.ஆரிடம் கேட்டனர், பத்திரிக்கையாளர்கள். அப்போது, அவர் கூறிய பதில்... 'நான் பெற்றிருக்கிற புகழ் போதாது. ஒரு மனிதன் மறைந்த பின், அவனை அந்நாடு மறக்காதிருக்குமானால் தான், அவன் புகழ் பெற்றவனாகிறான்.'இப்போது எனக்கு இடப்படுகிற மாலைகள், தரப்படுகிற பாராட்டுகள் இவற்றை வைத்து, புகழின் எல்லை கோட்டை பற்றி முடிவெடுக்கிறீர்கள்.'காந்திஜியை போல், அண்ணாதுரையை போல் புகழ் பெற விரும்புகிறவர்கள், தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ வேண்டும்...' எனக் கூறி, இன்றைய தலைமுறையினருக்கு புதிய பாடத்தையே கற்பித்து விட்டார், எம்.ஜி.ஆர்., மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ராஜாஜி எழுதிய, 'வியாசர் விருந்து' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது. அதில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பங்கேற்று, பேச எழுந்தபோது, 'வியாசர் விருந்து' புத்தகத்தின் மீது கையை வைத்து, அதை பற்றி மட்டும் பேசும்படி சைகை காட்டினார், ராஜாஜி. அதைப் புரிந்து கொண்டு, 'அடியேன் எடுத்துக் கொண்ட பொருள் மீது எல்லை தாண்டாமல் பேசும் பழக்கம் உள்ளவன்...' எனக் கூறி, தன் உரையை துவங்கினார், தேவர்.காஞ்சனத்தின் மூலம் அழிந்தவன் - துரியோதனன்; காமத்தின் மூலம் அழிந்தவன் - ராவணன் என்ற பொருளை மையமாக வைத்து, 'மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்றும் தான் மனிதனின் அழிவிற்கு காரணம். மண்ணாசையும், பொன்னாசையும் சேர்ந்தது தான் காஞ்சனம். காமம் மற்றும் காஞ்சன ஆசை தான், துரியோதனனை அழித்தது. இவற்றைக் கூறுவது தான், மகாபாரதம்.'காமத்தால், ராவணன் அழிந்தான். அதுவே, ராமாயணம். வியாச முனிவர் எழுதிய மகாபாரதத்தை, நாம் யாவரும் அறியும் வண்ணம், ராஜாஜி, வியாசர் விருந்தை நமக்கு தந்திருக்கிறார்...' எனக் கூறி, தன் சொற்பொழிவை முடித்தார், தேவர். இதைக்கேட்ட, ராஜாஜி உள்ளிட்ட அனைவரும், கருத்து செறிவுமிக்க, தேவரின் ஆழமான சொற்பொழிவைக் கேட்டு மெய்மறந்து போயினர். நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !