உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: 5033வது பிறந்த நாள்!

ஜூலை 28 - ஆடிப்பூரம்யாராவது, 5000 ஆண்டுகள் வரை பிறந்த நாளைக் கொண்டாட முடியுமா! மனிதர்களால் அது இயலாது. கடவுள் அவதாரங்களுக்கு மட்டுமே அது சாத்தியம். அதற்கு, ஐந்து கிரகங்கள் உச்சமாக இருக்கும் நேரத்தில் பிறக்க வேண்டும். அவ்வாறு பிறந்தவர்களே, ராமன், ஆண்டாள் மற்றும் ராகவேந்திரர் ஆகியோர். இவர்களில், ராமன், திரேதாயுகத்தில் பிறந்தவர். ஆண்டாள், கலியுகம் 98ம் ஆண்டு (நள ஆண்டு) ஆடி மாதம், பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, செவ்வாய்க் கிழமையன்று, ஸ்ரீவில்லிபுத்துாரில் பிறந்தாள். தற்போது, கலியுகம் 5126ம் ஆண்டு நடக்கிறது. ஆக, அவள் பிறந்து 5028 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அவள் பிறக்கும் போதே, ஐந்து வயது சிறுமியாக இருந்தாள் என்பதால், இவ்வாண்டு, 5033ம் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஆண்டாள், அவதாரம் செய்ய ஸ்ரீவில்லிபுத்துாரை தேர்ந்தெடுக்க காரணம் உண்டு. நம்மால், ஒரே நாளில், 108 திவ்யதேச தரிசனம் செய்ய முடியுமா என்றால், 'அதெப்படி சாத்தியம்' என்போம். ஆனால், ஸ்ரீவில்லிபுத்துார் வந்தாலே, 108 திவ்யதேச தரிசனமும் முடிந்ததாக அர்த்தம். ஆக, பிறந்த நாளன்றே, அத்தனை திவ்யதேச தரிசனத்தையும் முடித்து விட்டாள், ஆண்டாள். திவ்யதேசங்களில் முதல் தலம், ஸ்ரீரங்கம்; கடைசித்தலம், ஸ்ரீவில்லிபுத்துார். இது, ஆண்டாள் பிறந்த வீடு. ஸ்ரீரங்கம், புகுந்த வீடு. ஆக, எல்லா தலங்களையும், ஆண்டாள் தரிசித்து விட்டதாக ஐதீகம். தன் கையிலுள்ள கிளியாலும் பெருமை பெறுகிறாள், ஆண்டாள். மரச்சீனி கிழங்கை, 'ஏழிலை கிழங்கு' என்பர். மரச்சீனியின் இலைக்கொத்தில், ஏழு இலைகள் இருக்கும். இந்த இலையைப் பயன்படுத்தியே, ஆண்டாளின் கிளி செய்யப்படுகிறது. இதற்காக, ஆண்டாள் பிறந்த நந்தவனத்தில் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த இலையில் கிளியின் உடலைச் செய்வர். மாதுளை மொட்டால் மூக்கு, நந்தியாவட்டை மலரால் சிறகு, காக்கா பொன் என்னும் பளபளப்பான பொருளைக் கொண்டு, கண் ஆகியவற்றைச் செய்கின்றனர். ஆண்டாளுக்கு அழகு பார்ப்பது என்றால், மிகவும் பிடிக்கும். திருமாலுக்கு தன்னை பிடிக்க வேண்டுமே என்பதற்காக, அழகான கொண்டையிடுவாள். நறுமணப் பொருட்கள் பூசுவாள். திருமாலும் அலங்காரப் பிரியர் அல்லவா! கணவனுக்கு எது பிடிக்குமோ, அது இவளுக்கும் பிடித்தது. தன்னை அழகுபடுத்தியதைப் பார்க்க, தட்டொளி என்ற கண்ணாடியைப் பயன்படுத்தினாள். ஆண்டாள் காலத்தில் கண்ணாடி கிடையாது என்பதால், வட்டமான ஒளிமிக்க தகட்டை கண்ணாடியாக பயன்படுத்தினாள். 'உக்கமும் தட்டொளியும் தந்து' என, திருப்பாவையில் திருமாலிடம் கேட்கிறாள். உக்கம் என்றால், விசிறி. வியர்வையில், 'மேக்-அப்' கலையாமல் இருக்க உக்கம், முகம் பார்க்க தட்டொளி (கண்ணாடி) கேட்கிறாள். ஆண்டாள் சன்னிதி நுழைவு வாயிலில், பழங்கால தட்டொளி வைக்கப்பட்டுள்ளது. இந்த கால, 'மேக்-அப்' ஸ்டாண்டுக்கு முன்னோடியாக, ஆண்டாள் அன்றே இதை வைத்திருந்தாள். பல விசேஷங்களை உள்ளடக்கிய ஸ்ரீவில்லிபுத்துாருக்கு ஆண்டாளின் பிறந்த நாளன்று சென்று, அவளது ஆசியைப் பெற்று வாருங்கள். தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !