உள்ளூர் செய்திகள்

பகையை வெல்ல வேண்டுமா?

யாருக்கு, யார் மீது, எப்போது பகை வரும் என்பது, யாருக்கும் தெரியாது. சிறு பகையை நாமே சமாளித்து விடலாம். பெரும் பகையோ, தெய்வ அருளில்லாமல் விலகாது. இதை விளக்கும் கதை இது:கவுரவர்களும், பாண்டவர்களும் ஒன்றாக அரண்மனையில் வசித்த காலம் அது... சிறு வயதிலேயே, பீமனுடைய தோற்றமும், ஆற்றலும் துரியோதனனுக்கு பயத்தை உண்டாக்கியது. அதை, மேலும் அதிகரிப்பது போல், ஒருநாள், துரியோதனனும், அவன் தம்பிகள் சிலரும், மாமரத்தின் மீது ஏறி இருந்தனர். அங்கு வந்த பீமன், அவர்களைப் பார்த்து, 'எதற்காக மரத்தில் ஏறியுள்ளீர்கள்?' எனக் கேட்டான்.'பழம் பறிக்க...' என, பதில் சொன்னான், துரியோதனன்.'அதற்காக, மரத்தின் மீது ஏற வேண்டுமா... மரத்தை ஓர் உலுக்கு உலுக்கினால் பழங்கள் விழாதா...' எனக் கேட்டான், பீமன். 'எங்கே உலுக்கு பார்க்கலாம்...' என்றான் துரியோதனன். கீழிருந்தபடியே மரத்தை பிடித்து உலுக்கினான், பீமன். பழங்களோடு சேர்ந்து, கவுரவர்களும் கீழே விழுந்து, காயம் அடைந்தனர்.அதனால், 'இந்த பீமனை விட்டு வைக்கக் கூடாது...' என்று தீர்மானித்தான், துரியோதனன். அதன்படி, பீமனை ஒழிக்க, பல விதங்களிலும் முயன்றான். அம்முயற்சிகள் எல்லாம் தோல்வியுற, கடைசியாக, பீமன், தினந்தோறும் நீராடும் கங்கையில், பிராமணகோடி எனும் இடத்தில், விஷம் தடவிய கூரான ஈட்டிகளை நீருக்கு அடியில் நட்டு வைத்தான்.விவரமறியாத பீமன், நீராட அங்கு வந்தான். அவன் இறப்பை எதிர்பார்த்து, மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தான், துரியோதனன். பீமன் நீரில் குதிக்க தயாரான போது, அங்கு வந்த கண்ணன், 'பீமா... நீ குதிக்கும் இடத்தில், நீரின் மேல் ஏதோ தெரிகிறதே...' என்றார். உற்றுப் பார்த்த பீமன், நீருக்கு அடியில், விஷ ஈட்டிகள் நடப்பட்டிருப்பதையும், அதற்கு மேல், நீர் வண்டுகள் பறப்பதையும் பார்த்தான். மறைந்திருந்த துரியோதனனுக்கு, 'இந்த கண்ணன் குறுக்கே வந்து காரியத்தை கெடுத்து விடுவானோ... நம் எண்ணம் பலிக்காமல் போய் விடுமோ...' என்று பதற்றமானது.பீமனோ, 'கண்ணா... இப்போது பார்...' என்று சொல்லி, சற்று பின் வாங்கி, வேகமாக ஓடி வந்து, ஈட்டிகளை தாண்டிக் குதித்து, உயிர் தப்பினான்.ஏமாந்து போனான், துரியோதனன்.தெய்வம் நமக்குத் துணை பாப்பா; ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா... எனும் பாரதியாரின் வாக்குப்படி, கண்ணன் துணையால், உயிர் பிழைத்தான், பீமன்.துரியோதனன் மட்டுமல்ல, பீஷ்மர், துரோணர், கிருபர், அசுவத்தாமா மற்றும் கர்ணன் என, மாபெரும் வீரர்கள் பலரும், பல விதங்களில் முயற்சித்தும், பாண்டவர்களை வெல்ல முடியவில்லை; காரணம்... தெய்வத் துணை!வெளிப்பகை மட்டுமல்ல, உள் பகைகளிலிருந்தும், நம்மைக் காப்பாற்றுவது, தெய்வம் மட்டுமே! பி.என்.பரசுராமன்தெரிந்ததும் தெரியாததும்!கடவுள் யாருக்கு துணையிருப்பார்? திருப்தியுள்ளவனுக்கு! செல்வத்தை கண்டு மயங்கி, நியாயம், பண்பு, அடக்கம் மற்றும் தருமத்தை விட மாட்டான், திருப்தியுள்ளவன்.அவனிடத்தில், எவ்வளவு செல்வம் இருந்தாலும், அதனால், ஆணவம் கொள்ள மாட்டான்; கடவுளும் அவனுக்கு துணையிருப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !