உள்ளூர் செய்திகள்

இசையால் வசமாகா இதயம் ஏது?

உலக இசை தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி, உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.இசையின் மகத்துவத்தை பறைசாற்றவும், மக்களை இசையின் மூலம் ஒன்றிணைக்கவும், இந்த நாள் உருவாக்கப்பட்டது. மொழி, கலாசாரம் ஆகியவற்றை கடந்து உணர்வுகளை வெளிப்படுத்தும், உலகளாவிய மொழியாக விளங்குகிறது, இசை. உலக இசை தினம், முதன்முதலில் 1982ல், பிரான்ஸ் நாட்டில் துவங்கப்பட்டது. இதற்கு முன்னோடியாக இருந்தவர், பிரெஞ்சு இசைக் கலைஞரும், கலாசார அமைச்சருமான, ஜாக் லாங்.பிரான்சில் இந்த நாள், இசைத் திருவிழா என, அழைக்கப்படுகிறது. இதன் நோக்கம், இசையை அனைவருக்கும் இலவசமாக அணுகக் கூடியதாக மாற்றுவதும், தெருக்களிலும், பொது இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதும் ஆகும். இந்த யோசனை, விரைவில் உலகின் பல நாடுகளுக்கு பரவியது. இன்று, 120க்கும் மேற்பட்ட நாடுகளில், இந்த நாள் கொண்டாடப்படுகிறது.இசை என்பது, மனிதர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகும். இது மகிழ்ச்சி, துக்கம், அமைதி மற்றும் உற்சாகம் போன்ற உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது. இந்நாளில், தொழில்முறை இசைக் கலைஞர்கள் முதல், அமெச்சூர் இசை ஆர்வலர்கள் வரை, அனைவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு பெறுகின்றனர். மேலும், இசையை இலவசமாக அனைவரும் அனுபவிக்க முடியும் என்பது, இந்நாளின் சிறப்பு அம்சமாகும்.உலக இசை தினத்தன்று, உலகின் பல நகரங்களில், பலவிதமான இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவை, தெரு இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள், இசைக் கருவி கண்காட்சிகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் என, பல வடிவங்களில் அமைகின்றன.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பாரம்பரிய பிரெஞ்சு இசை முதல், நவீன பாப், ஜாஸ், ராக் வரை, பலவித இசை வகைகள் ஒலிக்கின்றன. உள்ளூர் இசைக் கலைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இணைந்து, இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.இந்தியாவில், உலக இசை தினம் பெரும்பாலும், நகரங்களில் கொண்டாடப்படுகிறது. சென்னை, மும்பை, டில்லி போன்ற நகரங்களில் இசைக் கச்சேரிகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் திறந்தவெளி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, பாலிவுட் இசை, மேற்கத்திய இசை என, பல வகைகள் இந்நாளில் ஒலிக்கின்றன. இந்தியாவின் பல இசைக் குழுக்கள், இளைஞர்களை ஊக்குவிக்க, இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.இத்தாலியின் ரோம் நகரில், பழமையான அரங்கங்களில், 'கிளாசிக்கல்' இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஸ்பெயினில் பிளமெங்கோ இசையும், ஜெர்மனியில் பாரம்பரிய இசையும் மக்களை மகிழ்விக்கின்றன.அமெரிக்காவின் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில், 'மேக் மியூசிக் டே' என்ற பெயரில், இந்நாள் கொண்டாடப்படுகிறது. தெரு முனைகளில் இசைக் கலைஞர்கள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். ஜாஸ், பாப், ராக் மற்றும் ஹிப்-ஹாப் போன்ற இசை வகைகள் இந்நாளில் பிரபலமாக உள்ளன.ஆப்ரிக்க நாடுகளில், உள்ளூர் பறைகள், நடனங்கள் மற்றும் பாரம்பரிய இசைக் கருவிகள், இந்நாளில் முக்கிய இடம் பெறுகின்றன. ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான் ஆகியவற்றில், பாரம்பரிய இசைக் கருவிகளான எர்ஹு, கோட்டோ போன்றவை இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகின்றன.எம். முகுந்த்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !