குருபார்வை
பிளஸ் 2 முடித்த பின் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். தற்போது அஞ்சல் வழியில் பட்டப் படிப்பு படித்து வருகிறேன். டில்லி துணை சேவை வாரியம் அறிவித்துள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். முடியுமா?-நடராஜன், காரைக்குடிஒரு புறம் இங்கே தமிழ்நாட்டில் டி.ஆர்.பி. போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக நீண்ட காலம் காத்திருந்து அரசுப் பணி பெற பெரும் பாடு பட வேண்டியுள்ளது. ஆனால் டில்லி துணைச்சேவை வாரியம் அறிவித்துள்ள பணியிட எண்ணிக்கையை அறிவீர்களா? பல்லாயிரக்கணக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு விண்ணப்பிக்க முக்கிய தகுதி நீங்கள் பிளஸ் 2 நிலையில் இந்தியை ஒரு பாடமாக முடித்திருக்க வேண்டும். மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி வாரியம் நடத்தும் சி.டி.இ.டி. தேர்விலும் தகுதி பெற்றிருக்க வேண்டும். டில்லி பகுதியில் ஆசிரியராக பணி புரியும் வாய்ப்பை இந்தத் தகுதிகள் இருந்தால் பெறலாம். ஒரு அரசுப் பணிக்காக பல ஆண்டுகள் காத்திருப்பதை விட நமது எதிர்காலத்தை இது போன்ற தகுதிகள் இருக்கும் வண்ணம் வளர்த்துக் கொள்ளலாம்.மத்திய அரசு காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் உதவியாளர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஐ.பி.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று பொதுத் துறை வங்கி ஒன்றில் பணி புரியவும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதில் எதில் எனது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்?- ரஞ்சனி, சென்னைவங்கிப் பணி என்பது இன்று பல இளைஞர்களுக்குமான கனவாக உள்ளது. அதிலும் கிளார்க் பணியில் சேருபவர்களில் 90 சதவீதத்துக்கும் மேல் இன்ஜினியரிங் பட்டதாரிகள் தான் என்பதை அறிவோம். தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்கும் சூழலில் ஒவ்வொருவரும் 3 அல்லது 4 பணிநியமன உத்தரவை பெற்று விடுகிறார்கள். தேர்வின் அடிப்படைகள் சூட்சுமம் புரிந்து திறன் பெறும்போது ஒவ்வொருவரும் இப்படி பல வேலை வாய்ப்புகளை பெற முடிவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இதில் சம்பந்தப் பட்ட நிறுவனங்களுக்கும் சரி, வேலை பெறுபவர்களுக்கும் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. பணிக்கு எடுத்துக் கொள்ளும் அரசுத் துறை நிறுவனங்கள் பணியில் குறிப்பிட்ட நபர்கள் இருப்பார்களா, மாட்டார்களா என்னும் குழப்பத்தை சந்திக்கின்றனர். தனி நபர்களோ எதை தேர்வு செய்வது என்னும் குழப்பத்தில் ஆழ்கின்றனர்.உங்களுக்கு அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. வங்கி ஒன்றில் இருந்தும் வேலைக்கு அழைப்பு வந்துள்ளது. நீங்கள் திருமணமாகாத பெண் என்னும் அடிப்படையில் உங்கள் குடும்பத்தின் ஆலோசனையைக் கேட்டுக் கொள்ளலாம். காப்பீட்டு நிறுவனத்திற்கும் வங்கிக்கும் சம்பள அடிப்படையில் பெரிய வித்தியாசம் இல்லை. காப்பீட்டுத் துறையோடு ஒப்பிடுகையில் வங்கித்துறையில் பதவி உயர்வு வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம். ஆனால் பணியின் தன்மை எனப் பார்த்தால், வங்கித்துறையில் சுமை அதிகம். விடுமுறை என எடுத்துக் கொண்டால் காப்பீட்டுத் துறையில் வாரம் 5 நாள் என்பதாகவும் வங்கித்துறையில் 2வது மற்றும் 4வது வார சனிக்கிழமை தவிர மற்ற வாரங்களில் 5 நாள் வேலை முறை உள்ளது. இவற்றின் அடிப்படையில் நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.