குருபார்வை
நான் பி.காம்., முடித்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள் விற்கும் கடையை கவனித்து வருகிறேன். டி.என்.பி.எஸ்.சி., மற்றும் வங்கித் தேர்வுகளை சில முறை எழுதி உள்ளேன். கடையில் இருந்து கொண்டு படிப்பது சிரமமாக உள்ளது. தேர்வில் வெற்றி பெற என்ன செய்யலாம்? - ராஜேஸ்வரி, சென்னை வாழ்கையை நடத்துவதற்காக உங்களைப் போலவே பலரும் ஒரு வேலையில் உட்கார்ந்து கொண்டு போட்டித் தேர்வுகளுக்காக முழு முயற்சியுடன் படிக்க முடியாமல் இருக்கிறார்கள். ஒரு முதலாளிக்காக நமது வாழ்நாளின் முக்கியமான காலகட்டத்தை வீணடிப்பதா என குழப்பம் இருந்தாலும் வாழ்க்கையை நகர்த்த அந்த சம்பளம் தேவைப்படுவதால் வேலையை விட முடியாமல் அதே நேரம் எதிர்காலத்திற்காக போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகவும் முடியாமல் உங்களை போலவே பலரும் உள்ளனர். சில ஆயிரங்களுக்காக ஒரு முக்கியக் காலக் கட்டத்தின் பெரும்பகுதியை வீணடிக்கக் கூடாது என்பது உண்மை தான். ஆனால் அன்றாட ஜீவனத்திற்காக என்ன செய்யப் போகிறோம்? எனவே குடும்பத்தின் ஆலோசனையுடன் இதில் நல்ல முடிவை எடுங்கள். அதே நேரம் என்ன தான் பிசியாக இருந்தாலும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது என்பதில் எந்தவித சமரசமும் கூடாது. உங்களது அன்றாட நடைமுறையில் காலையில் இரண்டு பகுதிகளிலும் மாலை மீதமுள்ள இரண்டு பகுதிகளிலும் சிறப்பான பயிற்சியை மேற்கொள்வது தவிர்க்கவே முடியாதது. அதே போல பொது அறிவுப் பகுதிக்குத் தயாராக தினசரி செய்தித் தாள்களை படிப்பது மிக அவசியம். நீங்கள் கேட்காத கேள்விக்கான ஒரு ஆலோசனை..... உங்களது முழுக் கடிதத்தின் விபரங்களை பார்க்கும் போது உங்களுக்கு ஏற்ற தேர்வு தமிழக அரசுப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் தேர்வுகள் என அறிகிறோம். எனவே வங்கித் தேர்வுகளுக்குத் தயாராவதை விட டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்குத் தயாராகுங்கள். சில மாதங்கள் அல்லது ஒன்றிரண்டு ஆண்டுகளில் அதில் நீங்கள் வெற்றி பெறலாம். ஏற்கனவே உங்களுக்கு வயதுத் தகுதி குறைந்து கொண்டே வருவதாலும் புதிதாக ரீசனிங், கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் நீங்கள் மிகச் சிறப்பான திறன் பெறுவதைக் காட்டிலும் பொது அறிவு மற்றும் தமிழ் ஆகியவற்றில் நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். சி.டி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சேவைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க என்ன முடித்திருக்க வேண்டும்? - சந்திரா, கோவைகணிதம் அல்லது இயற்பியலில் பி.எஸ்.சி., அல்லது இன்ஜினியரிங் பட்டப் படிப்பில் தகுதி பெற்றுப்பது இதற்கு அவசியம். பிளஸ் 2 துவங்கியுள்ள நான் சிவில் சர்விசஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ்., அல்லது ஐ.பி.எஸ்., ஆக விரும்புகிறேன். இதற்கு என்ன பாடத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்?- ரோசலின், ராஜபாளையம்யு.பி.எஸ்.சி., நடத்தும் சிவில் சர்விசஸ் தேர்வு எழுத அடிப்படைத் தகுதி என்பது பட்டப் படிப்பில் தேர்ச்சி மட்டுமே. அது எந்தப் பாடத்தில் என்றாலும் அது முக்கியமில்லை. எனவே உங்களுக்குப் பிடித்த பட்டப் படிப்பை முடித்த பின் நீங்கள் இந்தத் தேர்வில் கலந்து கொள்ள முடியும்.