உள்ளூர் செய்திகள்

இயற்கை உரத்தில் தர்பூசணி; லாபத்தை கொட்டும் விவசாயி

விவசாயத்திற்கு தேவையான மழை இல்லை, கூலிக்கும் ஆட்கள் வருவதில்லை. விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை .இது போன்ற காரணங்களால் விவசாயிகள் பலர், இன்று விவசாயத்தையே கைவிட்டு வருகின்றனர். ஆனால் சிவகாசி முதலிப்பட்டியை சேர்ந்த என். விஜயராஜ், 'எதையும் சரியாக செய்தால், லாபம் ஈட்ட முடியும்' என்ற, தன்னம்பிக்கையுடன் தர்பூசணி விவசாயத்தில் கொடிகட்டி பறக்கிறார் . சிவகாசியில் சுவீட்ஸ் ஸ்டால் நடத்தி வரும் இவர், பி.ஏ., பட்டதாரி. முதலிப்பட்டியை சேர்ந்த தனது மாமனார் குட்டி நாடார், விவசாயத்தில் போதிய விலை இன்றி, விவசாயத்தை விடும் நிலையில் இருந்தார். இதை தொடர்ந்து விஜயராஜ், மாமனாருக்கு உதவியாக, ஓய்வு நேரங்களில் விவசாயத்தில் ஈடுபட்டார். இதற்கான நவீன தொழில் நுட்பம், அரசு மானிய திட்டங்களை அறிந்து, தர்பூசணி விவசாயத்தில் இறங்கினார். இதற்கு இயற்கை உரங்களையே பயன்படுத்தி வருகிறார். அதன் பயனாக, ஏக்கருக்கு மூன்று டன் விளைச்சல் கிடைப்பதாக, பெருமையுடன் கூறுகிறார் விஜயராஜ்.அவர் கூறியதாவது: நிலத்தில் சொட்டு நீர் பாசன முறையை, அரசு மானியத்துடன் அமைத்தேன். இயற்கை உரங்களாக மாட்டு சாணம், ஹோமியமும் தான் இதற்கு பிரதானம் என்பதால், மாடுகளை வளர்க்க தொடங்கினேன். நிலத்தில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சாணத்தை பரப்பி, சட்டி கலப்பை மூலம் உழவு செய்து, நிலத்தை ஆறப்போட்டு விடுவேன். தர்பூசணி மஞ்சள் ரகத்தில், இனிப்பு தன்மை அதிகம் இருப்பதால், விலையும் கிடைக்கும் என்பதை அறிந்து, மஞ்சள் தர்பூசணியை பயிரிட்டேன். சொட்டு நீர் குழாய் வழியாக மாட்டு ஹோமியத்தை கலந்து விடுவேன். சொட்டு நீர் பாசனத்தால் பணியாளர்கள் தேவையில்லை. 60 நாட்களில் ஒரு செடியில் நல்ல எடை, நடுத்தரம், சிறிய காய் என, மூன்று வகை காய்கள் காய்க்கும். தமிழ் மாதமான மாசி, பங்குனி, சித்திரையில் அறுவடைசெய்ய வசதியாக, பயரிட்டு வருகிறேன். அதிகபட்சமாக, ஒரு காய் 4 கிலோ எடையில் கிடைக்கின்றன. எட்டு ஏக்கரில் பயிர் செய்ததில், 24 டன் வரை விளைச்சல் கிடைத்தது. கிலோ 4 ரூபாய்க்கு விற்பனையானது . ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைத்தது. 60 நாளில் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் என்பது, தொழில் செய்பவர்களுக்கும், பணியாளர்களுக்கும் சர்வ சாதாரணம் என்றாலும், விவசாயத்தின் மூலம் கிடைப்பதில் ஆத்ம திருப்தியளிக்கிறது. எனது மாமனார், விவசாயத்தை கைவிட வேண்டும் என்ற போதும், விடாமல் முயற்சித்து வெற்றியும் பெற்றுள்ளேன். விடுமுறை, ஓய்வு தினங்களில், மனைவி, குழந்தைகளுடன் விவசாய நிலத்திற்கு சென்று விடுவேன். குழந்தைகள் மண்ணில் விளையாட கூடாது என, பெற்றோர் கண்டிப்பர். ஆனால் நான், மண்ணில் விளையாட வேண்டும், விவசாயத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, குழந்தைகளையும் ஊக்கப்படுத்தி வருகிறேன். இந்தியாவில் விவசாயம் குறைந்து, உணவுப்பஞ்சம் ஏற்படும் போது தான், விவசாயத்தின் அருமை மக்களுக்கு தெரியும். விவசாயத்தில், நவீன தொழில் நுட்பம், அரசு மானிய திட்டங்களை சரியாக பயன்படுத்தினால், வெற்றியடைய முடியும், என்றார்.இவரை பாராட்ட 94435 45401.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !