உள்ளூர் செய்திகள்

வாசமில்லா மலரில் வருமானம் பார்க்கும் விவசாயி

பனி மற்றும் மழைக்காலங்களில் பூக்காத மலர்களை, எளிமையான தொழில் நுட்பங்களின் மூலம் உற்பத்தி செய்து, மகசூலில் சாதனை படைத்து வருகிறார் பார்வை குறைபாடுள்ள விவசாயி திவ்யநாதன்.திண்டுக்கல் மாவட்டம் தவசிமடையை சேர்ந்த திவ்யநாதன், 50, விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை பல பகுதிகளாக பிரித்து காய்கறி, வாழை, தென்னை சாகுபடி செய்துள்ளார்.வறட்சியினால், ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. இதை சமாளிப்பதற்காக ஆங்காங்கே பெரிய அளவிலான தொட்டிகளை கட்டி, கிடைக்கும் தண்ணீரை சேகரித்தார். பயிர்கள் காய்ந்து போகாமல் இருப்பதற்காக அவ்வப்போது அவற்றின் மூட்டு பகுதியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றுவார். இதற்காக சிறிய குழாய்களை நிலங்களின் மேற்பரப்பில் அமைத்து அதில் பிளாஸ்டிக் வால்வுகளை பொருத்தியுள்ளார்.திவ்யநாதனுக்கு திடீர் என்று பார்வையில் கோளாறு ஏற்பட்டது. எல்லாமே நிழலாக தெரிந்தாலும் மனம் தளராத திவ்யநாதன், குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக மலர் சாகுபடியை துவக்கினார். குறிப்பாக பனி, மழைக் காலங்களில் மல்லிகை பூப்பதில்லை. இதற்கு மாற்றாக காக்கரட்டான் பூக்கும். இரண்டையுமே பெண்கள் தலையில் சூடுவர். மல்லிகையில் வாசமிருக்கும். அதேபோல் உள்ள காக்கரட்டானில் வாசமிருக்காது.ஏற்கனவே சாகுபடி செய்துள்ள நிலங்களில் 15 சென்ட்டினை மலருக்கென ஒதுக்கி அதில் இரண்டையும் சாகுபடி செய்தார். மல்லிகை சீசன் இல்லாத காலங்களில் விலை அதிகமாக இருக்கும். அவற்றை அவ்வப்போது கவாத்து செய்து, மேல்மட்ட செடிகளை ஒன்றாக கட்டி பந்தல் போல் அமைத்து, குழாய் தண்ணீரின் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை நிலைநிறுத்தி பூக்காத காலங்களிலும் மகசூலை பெற்று சாதனை படைத்துள்ளார்.ஒவ்வொரு அறுவடையிலும் 120 மல்லிகை செடியிலிருந்து இவருக்கு ஒட்டுமொத்தமாக 17 கிலோ பூக்கள் கிடைக்கிறது. இதே அளவு மகசூல் காக்கரட்டானிலும் பெறுகிறார். விசேஷ நாட்களில் பூக்களின் விலை கிலோவிற்கு ஆயிரம் ரூபாய் வரை விற்கும்.பார்வையில் குறைபாடு இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு, யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக சம்பாதித்து தனது குடும்பத்தினரை காப்பாற்றி வருகிறார்.இவருடன் பேச: 90473 07296.- எம்.பி.அருள் செல்வன், திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !