நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (91504 30076, 99943 65883) என்ற விவசாயி வாழை ஆராய்ச்சி நிலையத்தை தொடர்புகொண்டு அறுவடை பின்சார் தொழில் நுட்பங்களை தெரிந்துகொண்டு வாழைப்பூ ஊறுகாய் தயாரித்து வருகிறார். அவருக்கு உதவியாக 30 பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். வாழைப்பூ ஊறுகாய் செய்முறை தொழி ல்நுட்பங்கள் கீழே வருமாறு:
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ-4, உப்பு-50 கிராம், மிளகாய்தூள்-30 கிராம், மஞ்சள் தூள்-4 கிராம், வெந்தயப்பொடி-15 கிராம், பெருங்காயப்பொடி-2 கிராம், கடுகு-10 கிராம், பூண்டு-25 கிராம், இஞ்சி-25 கிராம், சீரகம்-5 கிராம், நல்லெண்ணெய்-600 மிலி, வினிகர்-10மிலி, சிட்ரிக் அமிலம்-3 கிராம்
செய்முறை:
நன்கு விளைந்த வாழைப்பூவை எடுத்து அதிலுள்ள இதழ், காம்பை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின் சிறு துண்டுகளாக வெட்டி நீராவியில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். உடனே எடுத்து குளிர்ந்த நீரில் போடவேண்டும். அப்பொழுதுதான் வாழைப்பூவின் நிறம் மாறாமல் இருக்கும். ஆறியபின் திப்பிதிப்பியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பாதியளவு எண்ணெய்யைச் சூடாக்கி கடுகைத் தாளித்து, வறுத்துப் பொடிசெய்த வெந்தயம், பெருங்காயம், அரைத்து வைத்த பூண்டு, இஞ்சி விழுதைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்அரைத்த வாழைப்பூ விழுதைச் சேர்த்து நன்கு வதங்கும் வரை கிளறிக்கொண்டே வேகவைக்க வேண்டும். இதனுடன் மஞ்சள்பொடி, மிளகாய் பொடி, சீரகப்பொடி, உப்பு கலந்து நன்றாக வேகவிட வேண்டும். ஊற்றிய எண்ணெய் தொக்கு கலவையில் இருந்து பிரிந்து வரும்வரை வதக்கி, ஆறியபின் வினிகர், சிட்ரிக் அமிலம் சேர்த்து கிளறி, கிருமி நீக்கம் செய்த கண்ணாடி குப்பிகளில் அல்லது பாலிதீன் பைகளில் அல்லது டப்பாக்களில் அடைத்து மீதமுள்ள காய்ச்சி ஆறிய எண்ணெய்யைச் சேர்த்து குப்பிகளை மூடி பாதுகாக்க வேண்டும். வியாபார ரீதியில் செய்யாமல் வீட்டளவில் செய்யும்பொழுது வினிகர், சிட்ரிக் அமிலம் சேர்ப்பதற்குப் பதிலாக புளி, எலுமிச்சைச்சாறு சேர்த்தும் செய்யலாம்.எங்களது தயாரிப்பை முன்னாள் கலெக்டர் சகாயம் உழவர் உணவகம் திட்டத்தில் உழவர் சந்தையில் அறிமுகப்படுத்தினார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இந்த பொருளை மளிகைக் கடையில் இல்லாமல் உணவகம், அடுமனை, பழமுதிர் நிலையம், காய்கனிக் கடை, மருந்துக்கடை ஆகியவற்றில் விற்பனை செய்து வருகிறோம். தமிழகத்தில் உள்ள மாவட்டத்திலிருந்து வாழைப்பூ எங்களுக்கு அனுப்பினால் அதை நாங்கள் விலைக்கு வாங்கிக் கொள்கிறோம்.-கே.சத்யபிரபா, உடுமலை.