அசத்துவம் அவுரி சாகுபடி ஏற்றுமதிக்கு வாய்ப்பு
மானாவாரி பயிர்களில் அவுரிச் செடியின் இலை, பூ, காய்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகளவில் உள்ளது. மதுரை திருமங்கலம் கரிசல்காலன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜக்கையன் தனது அவுரி அனுபவங்கள் பற்றி கூறியதாவது: 30 ஏக்கரில் சோளம், வரகு, மல்லிகை, நித்யகல்யாணி, அவுரி பயிரிட்டுள்ளேன். 15 ஆண்டுகளாக அவுரி செடி வளர்த்து வருகிறேன். இது மானாவாரி பயிர் என்பதால் தண்ணீர் தேவையில்லை. சட்டி கலப்பையால் உழுது விதைப்போம்.புரட்டாசி முன்னும், பின்னும் விதைத்து விட்டால் அப்போது கிடைக்கும் மழையைக் கொண்டு உயிர் பிடித்து வளரும். மாதத்திற்கு ஒருமழை பெய்தாலும் போதும். தை, மாசியில் முதல் அறுவடை எடுத்து விடலாம். அடுத்தும் மழையிருந்தால் இரண்டாம், மூன்றாம்அறுவடை செய்யலாம். இல்லாவிட்டால் இரண்டாம் அறுவடையுடன் மடக்கி உழுது விடுவோம். அவுரியின் இலை, பூக்கள், காய்கள் எல்லாமே விலை போகும். ஒருமுறை பயிரிட்டால் அதிலிருந்தே விதையைப்பெறலாம். ஒரு கிலோ இலை ரூ.30க்கும், காய்கள் ரூ.50க்கும் விலை போகிறது. திருமங்கலத்தில் மட்டும் 300 ஏக்கரில் அவுரி பயிரிட்டுள்ளனர். மருத்துவ குணம் கொண்ட அவுரி இலை, பூ, காய்கள் தூத்துக்குடிக்கு அனுப்பப்படும். அங்கிருந்து வியாபாரிகள் ஏற்றுமதி செய்கின்றனர், என்றார். தொடர்புக்கு 97895 55894.-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.