உள்ளூர் செய்திகள்

பட்டர் புரூட் பேசன் புரூட் மலையரசியின் தேனமுது

கொடைக்கானல் ஆனந்தகிரி 7வது தெருவை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி பாக்கியசாமி. கடந்த 50 ஆண்டுகளாக மரக்கன்றுகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.அவர் கூறியதாவது: மலை மண் வளம், மழை வளம், தட்பவெப்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்து சீதோஷ்ண நிலைகளையும் அறிந்து, அதற்கு ஏற்ப பீச்சஸ், பிளம்ஸ், பேரி, பட்டர் புரூட், பேசன் புரூட், சீதா, பலா, மாதுளை, கொய்யா, எலுமிச்சை போன்ற மலைப் பகுதிகளில் நன்றாக விளையும் கன்றுகளை இயற்கை முறையில் தயாரித்து மலைப்பயிர் விவசாயிகள், தோட்டப்பண்ணை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறேன்.மலை கிராமங்களான வில்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, பூம்பாறை பகுதி விவசாயிகள் மலைப்பயிர் மரக்கன்றுகளை அதிகளவு வாங்கி செல்கின்றனர். தவிர மூணாறு, காந்தலுார், மறையூர், கேரள மாநில மக்களும் ஆர்வமாக வாங்குகின்றனர். 100 பிளம்ஸ் மரங்கள் இருந்தால் வீட்டில் தங்கம் இருப்பதற்கு சமம். வருமானம் அதிகரிக்க பேரி எஸ்டேட் ஐந்து ஏக்கர் வரை பயிரிடலாம். சமீப காலமாக 'அவக்கோடா' என்ற பட்டர் புரூட் மரங்களின் வருமானம் உச்சம் தொடுகிறது.ஒரு மரம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை குத்தகைக்கு போகிறது. ஒரு ஏக்கரில் 70 மரங்கள் வளர்க்கலாம். பேசன் புரூட் மிகவும் சுவையான, தரமான, ஆரோக்கியமான பழம். காய்க்கும் செடிகள் பத்து இருந்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம். மரக்கன்றுகள் உயிர் பிழைக்க செய்வதால் குடும்ப வருமானம் அதிகரிக்கும். மலைப்பயிர் மரக்கன்றுகளை வளர்க்க ஆக., முதல் டிச., வரை ஏற்ற மாதங்கள். வன வளம் பெருக மழை வளம் பெருகும், என்றார். மரக்கன்று தேவைக்கு 99656 04998.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !