உள்ளூர் செய்திகள்

நாட்டுரக பாக்கு மரக்கன்றுகள் வேண்டுமா

சேலம் தோட்டக்கலை துறை சார்பில் நாட்டுரக பாக்குமரக் கன்றுகள் நாற்றுகளாக உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகிறது.மேட்டுப்பாளையம் உள்ளூர் ரகமான பாக்குமரத்தில் இருந்து விதைகளைப் பெற்று கன்றுகள் தயாரிக்கப்படுகிறது. முதிர்ந்த தாய் மரத்தில் இருந்து விதைகள் சேகரிக்கப்படுகின்றன. விதையிலிருந்து தாவரம் உருவாகி 3 முதல் 4 மாதங்கள் கழித்து தான் ஓரளவு உயரம் வளரும். ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றரை அடி உயர கன்றாக வளர்ந்து விடும். இந்த கன்றின் விலை ரூ.15. மூன்றாம் ஆண்டில் இருந்து கொட்டை பாக்கு (சீவல்) அறுவடை செய்யலாம் என்றாலும் ஐந்தாண்டுகள் கழித்தே நல்ல பலன் தரும்.ஒரு ஏக்கருக்கு 800 செடிகள் தேவைப்படும். ஆறடிக்கு ஆறடி இடைவெளி வேண்டும். இது வெப்பமண்டல பயிர். பாசன வசதி வேண்டும் அல்லது சொட்டுநீர்ப்பாசனம் அமைக்கலாம். நாற்று வைக்கும் போது ஆறுமாதத்திற்கு நிழல் தேவை. பாக்கு கன்றுகள் வேர்ப்பிடித்து வளர வாழைமரத்திற்கு நடுவே ஊடுபயிராக நடலாம். அல்லது அகத்தி கீரையை முதலில் விதைத்து 3 மாதங்கள் கழிந்தபின் பாக்கு நடலாம். தென்னந்தோப்பில் நாலு மரத்திற்கு நடுவில் நான்கு பக்கமும், நடுவில் ஒன்றுமாக வளர்க்கலாம். பாக்கு மரமானது (30 முதல் 40 அடி) தென்னையை விட உயரம் அதிகம். எல்லா மண்ணிலும் வளரும் என்றாலும் மரத்தில் ஏறி பழம் பறிப்பதற்கு கூலியாட்கள் தேவைப்படும். தோப்பு நிறைய இருந்தால் தான் கூலியாட்கள் கிடைப்பர். பராமரிப்பைப் பொறுத்து 40 முதல் 50 ஆண்டுகள் வளரும். மாட்டு எரு, ஆட்டு எரு, கோழி எருவை உரமாக பயன்படுத்தலாம்.பாக்கு மரக்கன்றுகள் மட்டுமன்றி அல்போன்சா, இமாம்பசந்த், சேலம் குண்டு, பெங்களூரான், காதர், மல்கோவா ரக ஒன்றரை வயதுடைய மா (பக்க ஒட்டு) கன்றுகள் ரூ.80க்கும் மென்தண்டு மா ஒட்டுக்கன்றுகள் ரூ.70க்கும், லக்னோ 49 கொய்யா கன்று ரூ.40க்கும் விற்கப்படுகிறது. மல்லிகை, கறிவேப்பிலை, நாட்டு எலுமிச்சை, அழகுச்செடிகள் ரூ.15, சில்வர் ஓக் மரக்கன்று ரூ.8க்கும் விற்கப்படுகிறது.-மதுமதி, தோட்டக்கலை அலுவலர் பாஸ்கர், உதவி தோட்டக்கலை அலுவலர் தோட்டக்கலை பண்ணை சிறுமலை, அயோத்யாபட்டணம்சேலம்98946 78078


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !