உள்ளூர் செய்திகள்

தோப்பை நிரப்பு லாபம் பெருக்கு

தென்னந்தோப்பு விவசாயிகள் பலர் தோப்பில் எவ்வித பயிரும் சாகுபடி செய்யாமல் சுத்தமாக பராமரித்து வருகின்றனர். அதாவது களைகளை வளர வளர அழிப்பதை பெருமையாக கருதுகின்றனர். உண்மையை ஆராய்ந்தால் தென்னை மரத்துக்கு கிடைக்கும் சத்துக்களை சேர விடாமல் அப்புறப்படுத்தி பயிரின் நீர் தேவையை அதிகரிக்கிறார்கள்.மூடு பயிர் அல்லது நிலப் போர்வை பயிர் ஏதேனும் உள்ள தோப்புகளில் அதிக நீர் மண்ணிலிருந்து மேலே சென்று விரயமாவதில்லை. தென்னந்தோப்பில் 60 வகையான ஊடு பயிர்கள் சாகுபடி செய்ய உகந்த சூழல் உள்ளது. இங்கு நிலையான வேளாண்மைக்கு வழிகோலும் பல பயிர்கள் உள்ளன. வெறும் தண்ணீரை அவ்வப்போது கட்டி மழை நீர் கிடைத்தால் தோப்புக்குள் நிற்க செய்து விட்டால் போதும் என்று கருதுபவர்கள் தென்னை மரத்தில் முழு மகசூல் திறனை வெளிக்கொணர முயலவில்லை.சிலர், 'என் தோப்புக்கு 'டிரிப்பெல்லாம்' சரிப்பட்டு வராது; நன்றாக தண்ணீர் பாய வேண்டும்,' என்று கூறி வெள்ளக்காடாக தோப்பை நீரில் மூழ்கச் செய்வது முற்றிலும் அறியாமையே. எந்த ஒரு பயிரும் மனிதர்கள் போல மூச்சு முட்ட, தொப்பை நிறைய உணவு எடுத்து கொள்ளாது. அதிக நீர் பாய்ச்சுவது பயிரின் வேர்கள் சுவாசிப்பதை நிறுத்தும். நீர் வடிந்து கீழே சென்று விட்டால் வேருக்கு அருகில் நீரே இல்லாமல் வறட்சிக்கு இலக்காகி மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.வளமான மேல் பரப்பில் வெள்ளம் போல் நீர் நிறுத்தும் போது பள்ளம் நோக்கி மெதுவாக சத்துக்கள் அடித்து செல்லப்பட்டு விடும். எனவே குறைந்த பட்சம் தீவனப்புல், கொள்ளு, தக்கைப்பூண்டு, சணப்பை, குத்து அவரை, கொத்தவரை, வெட்டிவேர், மலர்கள், காய்கறிகள், கிழங்கு வகைகள், சில்வர் ஓக், கறிப்பலா, துரியன், காபி, கொக்கோ, ஏலக்காய், பைனாப்பிள், வாழை, மிளகு, மஞ்சள், இஞ்சி போன்ற ஏதேனும் சிலவற்றை பயிர் திட்டத்தில் ஊடுபயிராக சேர்த்து லாபம் ஈட்டலாம்.- பா.இளங்கோவன்வேளாண் துணை இயக்குனர், தேனி.98420 07125


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !