உள்ளூர் செய்திகள்

விதை முதல் விற்பனை வரை அசத்தும் உழவர் உற்பத்தியாளர் குழு

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மேலவளவில் உழவர் உற்பத்தியாளர் குழு என்ற பெயரில் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை இணைத்து உருவாக்கப்பட்ட குழுவின் நிர்வாகிகளாக மூக்கன், சிதம்பரம், சவுந்திரராஜன் உள்ளனர். விவசாயிகளின் உற்பத்தியை இரு மடங்காக உயர்த்தி பலனை மும்மடங்காக உயர்த்துவதே இக்குழுவின் நோக்கம்.திருந்திய நெல் சாகுபடி மூலம் குறைந்த விதையில் வரிசை நடவு செய்து அதிக மகசூலை உருவாக்கினர். மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் மேலவளவில் 25 ஏக்கரில் உளுந்து விதை பண்ணை உருவாக்கி விவசாயிகள் விளைவித்த உளுந்தை வேளாண்துறைக்கு விற்கின்றனர். மேலும் மண் பரிசோதனை நடத்தி அந்தந்த பருவத்திற்கு ஏற்ப விவசாயம் செய்ய வழிகாட்டுகின்றனர். வாழை விவசாயிகளுக்கு நுண்ணுாட்ட கலவை மூலம் வளர்ச்சி அதிகரிக்க வழி செய்கின்றனர்.பசுமை குடிலில் குழிதட்டு முறைகுழு பொருளாளர் சவுந்தரராஜன் கூறியதாவது: மாட்டுத் தீவனமான அசோலா வளர்ப்பு பயிற்சி கொடுத்து தங்களுடைய கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை விவசாயிகளே தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. கத்தரி, மிளகாய் உள்ளிட்ட நாற்றுகளை வெளியூரில் வாங்குவதால் செலவு அதிகமாகவும், உற்பத்தி குறைவாகவும் இருந்தது. அதனால் இக்குழுவை சேர்ந்த இளைஞர்களுக்கு தோட்டக்கலை துறை மூலம் பயிற்சி அளித்து பசுமை குடிலில் குழிதட்டு முறையில் பூச்சிகள் பாதிப்பு இல்லாத தரமான நாற்றுகளை உருவாக்கி அதிக மகசூல் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.விளை பொருளுக்கு உரிய விலைகுழுவை சேர்ந்த விவசாயிகள் விளைவித்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து 60 கிலோ மூடை ரூ.1140 க்கு விற்று விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க செய்தனர். அதனால் மூடைக்கு ரூ.340 கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைத்தது. இயற்கையிலே கசப்பு சுவை கொண்ட வேம்பு, புங்கை உள்ளிட்ட இலைகளை பயன்படுத்தி குறைந்த விலையில் விவசாயிகள் பூச்சி விரட்டி தயாரித்து கொடுக்கப்படுகிறது. அரசு திட்டங்கள், மானியங்கள் அனைத்தையும் விவசாயிகளுக்கு இலவச முறையில் வாங்கி கொடுக்கிறோம். இத்திட்டத்தின் கீழ் தொகுப்பு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் பெற்று டிராக்டர் வாங்கி குறைந்த வாடகையில் குழுவினர் பயனடைகின்றனர். சொட்டு நீர் பாசன வினியோக உரிமையை பெற்று விவசாயிகளுக்கு லாபமில்லாமல் வினியோகித்து வருகிறோம். குழு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிவிக்க தனியாக வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது, என்றார்.விவசாயிகளை விதை முதல் விற்பனை வரை லாப மடைய செய்யும் இக் குழுவை பாராட்டவும், செயல்பாட்டை தெரிந்து கொள்ளவும் ஒருங்கிணைப்பாளர் கோபாலனை 98846 25588 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.- எஸ்.பி.சரவணக்குமார், மேலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !