மேலாநெல்லி
மேலாநெல்லி என்பது தமிழகத்தில் கரிசல் மற்றும் செம்மண் பூமியில் இயல்பாக காணப்படும் மூலிகை தாவரம் ஆகும். இது 60 செ.மீ. வரை வளரக்கூடியது. இது பில்லான்தஸ் மடராஸ்படன்ஸிஸ் என்ற தாவரவியல் பெயரில் யூபோர்பியேசி குடும்பத்தில் காணப்படுகிறது. ஆப்ரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. பில்லான்தஸில் 60 வகைகள் இந்தியா மற்றும் மடகாஸ்கர் தீவுகளில் காணப்படுகிறது. நாம் பயன்படுத்தும் நெல்லிக்காய் இந்த குடும்பத்தைச் சார்ந்ததே ஆகும். இது சோளம், கரும்பு, தென்னை மற்றும் பருத்தியில் காணப்படும் முக்கிய களையாகும்.மேலாநெல்லியில் பில்லாந்தின் என்ற மூலப்பொருள் காணப்படுகிறது. இத்தாவரமானது சிறுநீர் கடுப்பு மற்றும் கல்லீரல் நோய்கள், காது வலி ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது. இன்று இம் மூலிகையானது மூலிகை சேகரிப்போரால் விவசாய மற்றும் தரிசு நிலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு விருதுநகர், மதுரை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள நாட்டுமருந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.அறுவடை: மேலாநெல்லியானது ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன், ஜூலை மாதங்களில் காணக்கிடைக்கும். வேர் பாகம் தவிர்த்து மேல் பகுதியை மட்டும் அறுவடைசெய்யவேண்டும்.அறுவடையின் போது கீழாநெல்லி இதனுடன் கலந்துவிடும் வாய்ப்பு உள்ளதால் சரியான செடியை அடையாளம் காண்பது முக்கியமாகும். இரு வேறு வகைகள் கலப்பதால் தயாரிக்கும் மருந்துகளில் வேறு விதமான விளைவை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் மேற்கொண்ட ஆய்வின்படி அறுவடையின்போது ஆறு விதமான பில்லான்தஸ் வகை செடிகள் கலந்துவிடுவதை காணமுடிகிறது.அறுவடை செய்யும்போது விதைகளை அவ்விடத்திலேயே விடுவதன்மூலம் அடுத்த பருவத்தின் உற்பத்திக்கு வழிவகுக்கும். நன்கு முதிர்ச்சி அடைந்த மற்றும் இலைகளுடன் கூடிய மேலாநெல்லியை மட்டுமே அறுவடை செய்ய வேண்டும். மேற்கூறிய காலகட்டங்களில் அறுவடை செய்வதன்மூலம் அதில் உள்ள மருந்துப் பொருளின் அளவை சரியான விகிதத்தில் பெறமுடியும். வேருடன் அறுவடை செய்வதை தவிர்க்க வேண்டும். நிலைத்த அறுவடை முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.அறுவடை செய்யப்பட்ட தாவரமானது சிமென்ட் களம் அல்லது தார்ப்பாலின் கொண்டு 2 அல்லது 3 நாட்களுக்கு காய வைக்க வேண்டும். பிற தாவரங்கள் கலந்திருந்தால் காய வைப்பதற்கு முன்பே பிரித்து எடுக்க வேண்டும். காய்ந்த மேலாநெல்லியை சாக்குப் பைகளில் அடைத்தோ அல்லது கட்டாகவோ வைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.சந்தைப்படுத்துதல்: மேலாநெல்லியின் தண்டு மற்றும் இலைப்பகுதிகள் மருந்துக் கம்பெனிகளால் கொள்முதல் செய்யப் படுகிறது. மனித மற்றும் கால்நடை மருந்து தயாரிக்கும் மூலிகை கம்பெனிகளுக்கு மேலாநெல்லியின் தேவை அதிகம் இருப்பதால் களையாகக் காணப்படும் இந்த செடிகளை சேகரித்து காயவைத்து விற்பனைக்கு அனுப்புவதன் மூலம் களை கொல்லிகளுக்கு செலவு செய்யும் அவசியம் இருக்காது. வருமானமும் கிடைக்கும்.சாகுபடி: மேலாநெல்லியின் அதிகப் படியான தேவையின் காரணமாக அதனை பயிரிடவும் செய்யலாம். விதை மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதைகளை விதைக்க வேண்டும். 100% முளைப்பு திறனுக்கு நாற்றங்கால் அமைத்து விதைகளை முளைக்க வைத்து பின் வயலில் நடவேண்டும். 90 நாட்களில் அறுவடை செய்யலாம். சில கம்பெனிகள் ஒப்பந்த சாகுபடியையும் ஊக்குவிக்கின்றன.என்.கணபதிசாமி, மதுரை, 8870012396.