கால்நடைகளில் நவீன நோய் தடுப்பு மேலாண்மை
கால்நடைகளை நோய் இல்லாமல் வளர்த்தால் தான் லாபம் ஈட்ட முடியும். சாலைகளுக்கு மிக அருகில் பண்ணைகளை அமைக்கக் கூடாது. சுற்றுச்சுவறுடன் பண்ணை அமைக்க வேண்டும். எலி, பூச்சிகள், நாய்கள், பூனைகள் உள்ளிட்டவை பண்ணைக்குள் நுழைய முடியாதபடி கண்காணிக்க வேண்டும். கழிவுகள், சீறுநீர் இவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். கழிவுநீர் எங்கும் தேங்கி நிற்கக்கூடாது. சாணத்தை எருக்குழியில் சேகரிக்க வேண்டும். கொசு வராமல், பரவாமல், கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். வாகனங்கள் மற்றும் பார்வையாளர்கள் மூலம் பல கிருமிகள் பண்ணைக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளது. எனவே, எக்காரணம் கொண்டும் பார்வையாளர்கள் பண்ணையை பார்வையிட அனுமதிக்க கூடாது. புதர், முள், செடி, கொடிகள் இல்லாமல் பண்ணையை பராமரிப்பது சிறந்தது. கிரிமி நாசினி தெளித்து பண்ணையை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் தவறாமல் செலுத்த வேண்டும். நீரில் தடுப்பு மருந்துகளை கலந்து கொடுக்கலாம். பட்டியல் படி குடல் புழு நீக்கம் செய்ய வேண்டும்.கால்நடை பயிற்சி பெற்றவர் மூலம் கால்நடைகளுக்கு கொப்புளம், புண், கட்டி போன்ற ஏதேனும் பாதிப்பு உள்ளதா என பார்க்க வேண்டும். இயற்கை துவாரங்களில் நீர், சீழ், ரத்தம் வடிகிறதா என சோதிக்க வேண்டும். தள்ளாடி நடக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். நோய் பாதிப்பு இருப்பின் உடன் சிகிச்சை அளிக்கும் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். அங்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும். இதர கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும். தீவனதொட்டி, தண்ணீர் தொட்டி, இதர உபகரணங்களை நன்கு கழுவி, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளுடன் பிற கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. கால்நடை வளர்ப்பில் நவீன உத்திகளை கையாண்டு நோய் தாக்குதலில் இருந்து கால்நடைகளை மீட்கலாமே.- எம்.ஞானசேகர்வேளாண் ஆலோசகர், சென்னை95662 53929.