உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பம்

மஞ்சள் நாற்றங்கால் உற்பத்தி - உழவரின் புதிய முயற்சி: தும்பர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற உழவர் சேலம் மாவட்டம் அந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம், விஞ்ஞானிகளின் பரிந்துரையின் பெயரில் சென்ற வருடம் குழித்தட்டு முறையில் மஞ்சளில் நாற்றங்கால் உற்பத்தி செய்து சாகுபடியும் செய்துள்ளார்.தரமான விதைக் கிழங்குகளை ஒவ்வொன்றும் 20-35 கிராம் இருக்குமாறு தேர்வுசெய்து, ஒரு கிலோவிற்கு 30-50 விதை கிழங்குகள் தயாரிக்கப் பட்டது. ஒவ்வொரு விதைக்கிழங்கிலும் 10 வளையங்கள் இருக்கும் விதைக்கிழங்குகளை 3-4 துண்டுகளாக வெட்டி ஒவ்வொரு துண்டிலும் இரு வளையங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு 22,000 துண்டுகள் தேவைப்பட்டன. ஒரு ஏக்கருக்கு விதைக்கிழங்கு 180 கிலோ முதல் 200 கிலோ இருந்தால் போதுமானது. சாதாரண முறையைக் காட்டிலும் குழித்தட்டு முறையில் விதைக் கிழங்கின் அளவு நான்குமடங்கு குறைகிறது.இயற்கை பூசணக்கொல்லி மூலம் விதைநேர்த்தி செய்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட பூசணக்கொல்லி ஒரு கிராம், பூச்சிக்கொல்லி 2 மிலி, யூரியா 5 கிராம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து அதில் 20 நிமிடங்கள் விதைக்கிழங்குகளை ஊறவைத்து, காற்றுப்புகா சாக்குப்பையில் விதைக்கிழங்குகளை இட்டு நிரப்பி வெப்பத்தை ஏற்படுத்த 8 நாட்கள் வரை வைத்திருந்தார். இதனால் முளைப்புத்திறன் அதிகரித்தது. பின் சிறிது முளைத்த விதைக் கிழங்குகளை குழியில் இட்டு தேங்காய் நார்க் கழிவுகளைக் கொண்டு குழிகளை நிரப்பி, குழித்தட்டுக்களை 40-45 நாட்கள் வரை நிழல்வலை குடிலில் வைத்து பராமரித்துள்ளார். 40 நாட்களுக்குப் பின் வயலில் நாற்றுக்களை நடவு செய்துள்ளார். வரிசைக்கு வரிசை 40 செ.மீ. இடைவெளி வீதம் செடிக்குச்செடி 30 செ.மீ. இடைவெளி இருக்குமாறு செய்தார். மூன்று நாட்களுக்குஒரு முறை நீர்ப்பாசனம் செய்தார். பூச்சி நோய் தாக்குதலிலிருந்து பயிரைப் பாதுகாக்க இயற்கை, ரசாயன வேளாண் உத்திகளை கையாண்டார். ஒரு ஏக்கருக்கு 25 குவிண்டால்(உலர் எடை) மஞ்சள் விளைச்சல் கிடைத்துள்ளது.குழித்தட்டு நாற்றங்கால் பயன்கள் பற்றி குறிப்பிடும்போது, ஆரோக்கியமான விதை மூலம் நாற்று உற்பத்தி செய்ய முடிந்தது; மண்ணின் வளம் மேம்பட்டு நீண்டநாள் சத்துக்களை கிரகித்து வைக்கிறது. விதை உபகரணங்களின் தேவை குறைந்தது. இதனால் பொருளாதாரம் மேம்பட்டது.சாதாரண முறை அளவே விளைச்சல் இல்லாததாலும், விதையின் அளவு அதற்குண்டான செலவும் குறைந்தது. இதில் 100 சதம் நடவு செய்த அனைத்து செடிகளும் வேர்பிடித்து விளைச்சலுக்கு வந்தது. வயல் செலவு, களைக்கொல்லி செலவு குறைந்தது. நாற்று நடவு செய்து அறுவடை வரை ஒரு மாதம் வயலில் பயிர் வயது குறைகிறது. இந்த தொழில்நுட்பத்தை வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆராய்ச்சியின் மூலம் துல்லியமாகச் செய்வதற்கு வழிவகுக்குமாயின் மஞ்சள் சாகுபடியில் இந்த முறை மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றார் அனுபவ விவசாயி. (தகவல்: முனைவர் செ.மாணிக்கம், முனைவர் பெ.ச.கவிதா, முனைவர் ம.அ.வெண்ணிலா, 0427-242 2550)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !