உள்ளூர் செய்திகள்

மாடுகளின் சினை பிடிப்புக்கு இயற்கை வைத்தியம் உகந்தது

சினை பிடிக்காத மாடுகளுக்கு, இயற்கை வைத்தியம் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு, கோழி, வாத்து ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது.கறவை மாடுகளுக்கு சினை பிடிப்பதில் பல்வேறு விதமான சிக்கல் ஏற்படுகிறது. இதுபோன்ற மாடுகளுக்கு, காலை, மாலை என, நான்கு நாட்களுக்கு முள்ளங்கி கொடுக்க வேண்டும். ஐந்தாவது நாளில் இருந்து எட்டாவது நாள் வரையில் காலை, மாலை என, இரு வேளையும் சோற்றுக்கற்றாழை வழங்க வேண்டும். முள்ளங்கி, சோற்றுக்கற்றாழை வழங்கும் போது, வெல்லம் தடவி கொடுக்க வேண்டும். ஒன்பதாவது நாளில் இருந்து 12 வது நாள் வரையில் காலை, மாலை என, இரு வேளைகளில் தலா நான்கு கை பிடி முருங்கை இலை தீவனமாக வழங்க வேண்டும். 13வது நாளில் இருந்து 16வது நாள் வரையில் காலை, மாலை என, இருவேளைகளிலும் தலா நான்கு கைப்பிடி பிரண்டை வழங்க வேண்டும். இறுதியாக, 17 நாள் முதல் 20வது நாள் வரையில் காலை, மாலை என, இரு வேளைகளிலும் தலா நான்கு கைப்பிடி அளவிற்கு, கறிவேப்பிலை கொடுக்க வேண்டும்.பிரண்டை, முருங்கை இலை, கறிவேப்பிலை கொடுக்கும் போது, அரைத்து தீவனமாக வழங்க வேண்டும். இதுபோல செய்தால் கறவை மாடுகளுக்கு சினை பிடிக்கும் தன்மை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: கே.பிரேமவல்லி97907 53594


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !