கொத்தவரை சாகுபடி:
இந்தியாவில் கொத்தவரை சாகுபடி பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக விளங்கிவருகிறது. குவார் எனப்படும் இந்த கொத்தவரை காய்கறி வகையைச் சேர்ந்தது அல்ல. மாறாக இந்த கொத்தவரையில் இருந்து கிடைக்கும் ஒரு வகைப் பொருள் எரிவாயு எடுக்க மற்றும் உணவுக்கும் பயன்படுத்தப் படுகிறது. ராஜஸ்தானில் கொத்தவரைக்கு என சந்தை உள்ளது. கொத்தவரை சாகுபடியில் பல விவசாயிகள் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொத்தவரை சாகுபடி தற்போது சேலம், கடலூர், திருவண்ணாமலை, ஈரோடு, விருதுநகர், திருச்சி, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரபலமடைந்து வருகிறது.சாகுபடி நுட்பங்கள்: நடவிற்கு ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் ஏற்றதாகும். அனைத்து மண்வகைகளிலும் சிறப்பாக வளரக்கூடியது. குறிப்பாக செம்மண்ணில் நன்கு வளரும். நிலத்தை இரண்டு முறை நன்கு உழுது, அடியுரமாக தொழு உரம் 5 டன் வரையும், டிஏபி 50 கிலோவும் இடவேண்டும். நடுவதற்கு ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை போதுமானது. நடவில் 1 ½ அடி x 1 அடி இடைவெளி விட்டு விதைகளை ஊன்ற வேண்டும். மாதம் இரண்டு முறை களை எடுப்பது அவசியம். 13 நாட்களுக்கு ஒரு முறை வாடவிட்டு, வாடவிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.எல்லா காய்களையும் அறுத்து களத்தில் போட்டு மிஷின் மூலம் அடிக்க வேண்டும். நல்ல பராமரிப்பு இருந்தால் ஏக்கருக்கு 500 முதல் 1000 கிலோ வரை விதை மகசூல் கிடைக்கும். எந்த சூழ்நிலையிலும் காய்கள் வெடித்து நிலத்தில் கொட்டாது. 55 முதல் 60ம் நாள் செடியில் கொழுந்தை கிள்ளுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம். நிலத்தில் கொத்தவரை பயிரிடுவதால் நிலத்தில் உள்ள மணிச்சத்து, தழைச்சத்து ஆகியவை அதிகரித்து நிலம் வளம்பெறுகிறது. (தகவல்: அகரன் பிரம், எண்.52, காமதேனு டவர்ஸ், அசோகபுரம், பவானி மெயின்ரோடு, ஈரோடு-638 004. 98435 55530, 0424-222 3992)
பல பயிர் சாகுபடி:
சாத்தான்குளத்திலிருந்து உடன்குடி செல்லும் சாலையில் 7வது கிலோ மீட்டரில் நரையன் குடியிருப்பு அருகிலுள்ள கருவேலம்பாடு கிராமத்தில் விவசாயி ஜெயபாலன் பண்ணையில் பலபயிர் சாகுபடி சிறப்பாக நடைபெறுகிறது. பத்து ஏக்கரில் 1000 செடி முருங்கை, 450 தென்னை, 300 வாழை, 6 மாமரம், 10 நெல்லி, 5 எலுமிச்சை, 7 கொய்யா, 50 சப்போட்டா நிற்குது.தென்னையில் ஊடுபயிராக நிலக்கடலை சாகுபடி, சென்ற வருடம் செடி முருங்கையில் 60 டன் வரை மகசூல். வேலையாட்கள் கூலி, முருங்கை பராமரிப்பு செலவுகள் யாவும் தென்னை, வாழையிலிருந்து கிடைக்கிற வருமானத்திலேயே ஈடுகட்டலாம். செடிமுருங்கையில் கிடைக்கிற வருமானம் முற்றிலும் லாபம்தான். வருடத்திற்கு 3 லட்சம் ரூபாய்க்கும் குறையாமல் லாபம் கிடைக்கிறது.விவசாயி கடைபிடிக்கும் செடிமுருங்கை சாகுபடி இதுதான். டிசம்பர், ஜனவரி மாதங்கள் செடி முருங்கை சாகுபடிக்கு ஏற்றவை. 4 அடி நீளமுள்ள விதைக்குச்சியை அரை அடி வரை மண்ணில் புதையுமாறு பதியம் போட்டு, 8 நாட்களுக்கு பிறகு நன்றாக தழைத்துவரும் விதைக்குச்சியை மட்டும் தேர்ந்தெடுத்து நடவு செய்ய வேண்டும். 2 கன அடிஅளவுக்கு குழி பறித்து, ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கை இட்டு விதைக் குச்சிகளை குழியின் நடுப்பகுதியில் வைத்து மண்ணால் மூடவேண்டும். 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. சொட்டு நீர் பாசனம் அமைத்தால் அதிக மகசூல் கிடைக்கும். ஒரு முறை நடவு செய்தால் 5 வருடங்கள் வரை பலன் கிடைக்கும். மரங்களின் வேர்ப் பகுதியில் பூச்சி புழுக்கள் தாக்குதல் இருந்தால் அந்த மரங்களை அப்புறப்படுத்திவிட வேண்டும்.நடவு செய்த 2வது மாதத்தில் ஒவ்வொரு மரத்திற்கும் இரண்டு பக்கங்களிலும் முக்கால் அடி ஆழத்திற்கு குழி பறித்து 5 கிலோ அளவில் கோழி எரு இடவேண்டும். 4வது மாதத்தில் இதே போல் குழிபறித்து செடிக்கு 5 கிலோ மாட்டுச் சாணம், அரைகிலோ வேப்பம் புண்ணாக்கு கலவையை இடவேண்டும். பூச்சியைக் கட்டுப்படுத்த சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பூண்டு கரைசல், வசம்புத் தைலம் தெளிக்க வேண்டும். நான்காவது மாத இறுதியில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். பூ பூத்தவுடன் உதிர்ந்துவிடும். அடுத்த பூ நன்றாக பிடிப்பதற்கு அரை கிலோ பெருங்காயம், சிறிது காதிசோப், 5லிட்டர் தண்ணீரில் நன்கு கரைத்து வடிகட்டி கரைசலை மரத்தின் வேர்ப்பகுதியில் தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மிலி பெருங்காயக் கரைசல் வீதம் கலந்தால் 2 மாதங்களுக்கு அடிக்க முடியும். இதைக் கணக்கிட்டு தேவைக்கு ஏற்ப தயாரித்துக் கொள்ள வேண்டும். ஐந்தாவது மாதத்தில் மரங்கள் காய்ப்புக்கு வரும். மாதம் இரண்டு அறுவடை வீதம் அடுத்து 6 மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். 1000 செடி முருங்கை இருந்தால் ஒரு பறிப்புக்கு 5 டன் வரை முருங்கை காய்கள் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு: ஜெய்பால், 94421 61417.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்