குங்குமப்பூ:
ஒரு வாசனைப் பொருள் என்றாலும் நமது வீடுகளில் இதைப்பற்றி பேச்சு வருவதென்றால் வீட்டுப் பெண்கள் கர்ப்பமாக இருக்க வேண்டும். பிறக்கப்போகும் குழந்தை நல்ல நிறத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆயுர்வேத மருந்துக்கடைகளில் குங்குமப்பூ வாங்கச் செல்வோம். இயற்கையின் படைப்பில் இதுவும் ஒரு விவசாயப் பயிர்தான். அதிக விலைமதிப்பும் குறைந்த அளவில் உற்பத்தியும் இருக்கும். காஷ்மீருக்கு மட்டுமே சொந்தமான பணப்பயிராகும். காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாம்பூர் பகுதியில்தான் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1600 முதல் 1750 மீட்டர் உயரத்தில் வண்டல்மண் படிந்த பகுதிகளில்தான் குங்குமப்பூ பயிராகிறது.கிழங்குகளைப் பயன்படுத்தியே பயிர்பெருக்கம் நடைபெறுகிறது. சுமார் 15 செ.மீ. விட்டமுள்ள கிழங்குகளின் மேலே உள்ள ஒருவித திசு போன்ற திரையை அகற்றியபிறகு நடுவதற்கு பயன்படுத்துகின்றனர். ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இந்த கிழங்குகளை 15-20 செ.மீ. ஆழத்தில் நடவேண்டும். முளைத்துவரும் பயிர் அதே நிலத்தில் 9 அல்லது 10 வருடங்களுக்கு தொடர்கிறது.குங்குமப்பூவின் சூல்முடியை உலர்த்தினால் கிடைப்பதே வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் குங்குமப்பூ. குங்குமப்பூவில் நீளமான மூன்று அடர் சிவப்பு நிறத்திலான நூல் போன்றதும் மஞ்சள் நிற வால் பகுதியுடன் கூடிய அமைப்பு உள்ளதைக் காணலாம். இந்த சிவப்பான பகுதியே குங்குமப்பூவாகும். குங்குமப்பூக்களை அறுவடை செய்யும் நேரம் அதிகாலையில் துவங்குகிறது. சேகரிக்கப்பட்ட சூல்முடிகள் வெதுவெதுப்பான ஈரப்பதமற்ற அறைகளில் வைத்து உலர்த்தப்படுகிறது. நன்கு உலர்ந்ததும் வெளிச்சமோ ஈரப்பதமோ படாத வகையில் சேமிக்கப்படுகிறது. ஒரு கிலோ குங்குமப்பூவிற்கு 1,50,000 பூக்களை அறுவடை செய்ய வேண்டும். (தகவல்: பாலசந்திரன் ஹெக்டே, சிர்சி, கர்நாடகா)
தர்பூசணி சாகுபடி:
தர்பூசணியில் அதிக காய்கள் பிடிக்க... ஆண், பெண் பூ அல்லது இருபால் பூக்களும் ஒரே செடியில் இருக்கும். காய்பிடிக்கும் தன்மை இருபால் அல்லது பெண்பூக்களுக்குத்தான் உண்டு. எனவே பெண்பூக்களின் எண்ணிக்கை கூடினால் காய் பிடிக்கும் தன்மையைக் கூட்டி விளைச்சலைப் பெருக்கலாம். தர்பூசணியின் இரண்டு இலை பருவத்தின் போது 'எத்ரல்' என்ற வளர் ஊக்கியினை 2.5 மி.லி. என்ற அளவில் 10 லிட்டர் நீரில் கலந்து ஒருவார இடைவெளியில் மூன்று முறை தெளிப்பதன் மூலம் காய்பிடிப்பு திறனை 5-7 சதவீதம் அதிகரிக்கலாம். இத்துடன் பயிர் முளைத்த 40ம் நாள் முதல் ஒரு வார இடைவெளியில் மூன்று முறை 13-0-45 மற்றும் 0-0-50 போன்ற நீரில் கரையும் உரங்களை தலா 5 கிராம் என்ற வகையில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் தர்பூசணி பழத்தின் தரத்தையும் சுவையையும் கூட்டுவதோடு மகசூலை 10-14 சதவீதம் வரை அதிகரிக்க முடியும்.100 கிராம் தர்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீர்ச்சத்து, 0.2 சதம் புரதச்சத்து, 0.3 சதம் தாது உப்புக்கள், 7 சதம் கார்போஹைட்ரேட் சத்துக்கள் உள்ளன. தர்பூசணிப் பழத்திலுள்ள லைக்கோபீன் என்ற நிறமி புற்று நோயைத் தடுக்க உதவுகிறது. இந்த காரணங்களால் ஆண்டு முழுவதும் தர்பூசணியின் தேவை அதிகரித்து வருகிறது.
அசோலா:
சிறு சிறு இலைகளையும் துல்லியமான வேர்களையும் கொண்ட நீரில் மிதந்துவரும் பெரணி வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். நெல் வயல்களில் வளரும் ஒரு வகை நீர்த்தாவரம். அசோலாவை உணவுப் பொருட்களாவும் பயன்படுத்தலாம். நீர்த்தாவரமாக இருப்பதால் தண்ணீரில் கரைந்திருக்கும் தாது உப்புக்களை கிரகித்து தழைச்சத்தை ஆகாயத்திலிருந்து கிரகித்துக்கொள்ளும் சிறப்புத் தன்மையும் உடையது. நீரில் நன்றாக பசுமையாக வளரும் அசோலாவை சேகரித்து உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கலாம். நெல்வயலில் வளர்ந்துள்ள அசோலாவை பயன்படுத்தக்கூடாது. தனியாக சிமென்ட் தொட்டிகளில் அல்லது வயலில் தனியாக நாற்றங்கால் பாத்தி அமைத்து பூச்சி மருந்து தெளிக்காமல் வளர்த்து உணவாகப் பயன்படுத்தலாம்.அசோலாவை எடுத்துக்கொண்டு வானலியில் போட்டு அத்துடன் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, உப்பு கலந்து கீரை தயாரித்து உணவாகப் பயன்படுத்தலாம். அசோலாவை கடலை மாவுடன் 4:1 என்ற அளவில் கலந்து தண்ணீர் விட்டு, வேண்டிய அளவு உப்பு கலந்து நன்றாக எல்லாவற்றையும் கலந்து எண்ணெயில் போட்டு பக்கோடா தயாரிக்கலாம். அசோலாவை உளுந்து மாவுடன் வேண்டிய அளவு கலந்து, வெங்காயம் போட்டு வடை தயாரிக்கலாம். வடை மிக சுவை உடையதாகவும் நல்ல வாசனை நிறைந்ததாகவும் இருக்கும்.முட்டையோடு அசோலாவை கலந்து ஆம்லெட் தயாரிக்கலாம். அசோலாவை தோசை தயாரிக்கவும் பயன்படுத்தலாம். தோசை மாவோடு அசோலாவை 5:1 என்ற விகிதத்தில் கலந்து அரைத்து, அரைத்த மாவை 10 மணி நேரம் புளிக்கவைத்து தோசை தயாரிக்கலாம். அசோலாவை மாட்டுத் தீவனமாக, கோழித் தீவனமாக, மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்